இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டில் நிலவிய வெப்பம், மழைப்பொழிவு, குளிர் பற்றிய அறிக்கையை இன்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டது. அதில் வெப்பநிலையை பொருத்தமட்டில் 2020-ம் ஆண்டின் சராசரி புவி மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட 0.29 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்ததாகவும் 1901-ம் ஆண்டிற்கு பிறகு பதிவான எட்டாவது மிகவும் வெப்பமான ஆண்டு 2020 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக சராசரி புவி மேற்பரப்பு வெப்பநிலையானது 2016-ம் ஆண்டில் 0.71 டிகிரி செல்சியசாகவும் 2009-ம் ஆண்டில் 0.55 டிகிரி செல்சியசாகவும் பதிவானது குறிப்பிடத்தக்கது. மேலும் 1901-ம் ஆண்டிற்கு பிறகு பதிவான அதிக வெப்பமான 15 ஆண்டுகளில் 12 ஆண்டுகள் கடந்த 2006 முதல் 2020-ம் ஆண்டுகளுக்குள் பதிவாகியுள்ளது.
மேலும் 1901-ம் ஆண்டிற்கு பின் அதிக வெப்பமான பத்தாண்டுகளாக 2011 முதல் 2020 உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மார்ச் மற்றும் ஜூன் மாதத்தை தவிர பிற மாதங்கள் அனைத்தும் இயல்பை விட வெப்பநிலை அதிகமாக பதிவாகியிருந்தது.குறிப்பாக செப்டம்பர் மாத வெப்பநிலையானது இயல்பை விட 0.72 டிகிரி செல்சியசாக இருந்தது. இது 1901-ம் ஆண்டிற்கு பிறகு அதிக வெப்பநிலை பதிவாகிய மாதமாகும்.
மழைப்பொழிவை பொருத்தமட்டில் தென்மேற்கு பருவமழையில் 109 சதவிகிதமும் வட கிழக்குப் பருவமழையில் 101% மழையை பெற்று கடந்த ஆண்டில் இயல்பை ஒட்டிய மழைப்பொழிவு இந்தியா முழுவதும் இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்திய கடற்பரப்பில் 2020ஆம் ஆண்டில் மொத்தம் 5 புயல்கள் உருவானது
அம்பான் – சூப்பர் புயல்( 90 மனிதர் – 4000 கால்நடைகள் உயிரிழப்பு),நிவர் – அதி, தீவிர புயல்,கட்டி – அதி தீவிர புயல்,நிசர்கா – தீவிர சூறாவளி புயல்,புரெவி – புயல்இவற்றில் நிசர்காவும், கட்டியும் அரபில் கடலிலும், அம்பான், நிவர், புரெவி வங்கக் கடலிலும் உருவானது.
இவை மட்டுமின்றி அதி கனமழை, வெள்ளம், நிலச்சரிவு, இடி மின்னல், கடும் குளிர் போன்ற தீவிர பேரிடர் சம்பவங்களாலும் இந்தியா கடந்தாண்டில் பாதிப்படைந்தது. குறிப்பாக இதுபோன்ற பேரிடர்களாக பீஹார் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் மட்டும் 350பேர் இறந்தனர்.
அதிகனமழை மற்றும் வெள்ளப் பெருக்கால் மட்டும் இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு 600 பேர் உயிரிழந்தனர். அவற்றுள் அஸ்ஸாமில் 129 பேர், கேரளாவில் 72 பேர், தெலங்காநாவில் 61 அடங்குவர்.இடிமின்னல் தாக்குதலில் கடந்தாண்டு நாடு முழுவதும் 815 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக பீஹாரில் 280 பேரும், உத்தரபிரதேசத்தில் 220 பேரும், ஜார்கண்டில் 122 பேரும் உயிரிழந்துள்ளனர்.
கடந்தாண்டு ஜனவரி மாதம் நிலவிய கடும் குளிரில் 150 பேர் உயிரிழந்தனர். குறிப்பாக ஜனவரி 1ஆம் தேதி ஒரே நாளில் பீஹாரில் 45 பேரும் ஜார்கண்டில் 16 பேரும் உயிரிழந்தனர். ஒட்டுமொத்தமாக கடந்த ஆண்டில் மட்டும் 1,444 பேர் இயற்கை பேரிடர்களால் உயிரிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது