சூரிய குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆய்வு செய்வதற்காக நாசா அனுப்பிய வாயேஜர்-2 விண்கலம், சூரிய குடும்பத்தை கடந்து இப்போது இன்டர்ஸ்டெல்லார் பகுதிக்கு சென்றது.
சூரிய குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆய்வு செய்ய கடந்த 1977 ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி வாயேஜர் 2 விண்கலத்தை நாசா அனுப்பியது. இந்த விண்கலம், 1,800 கோடி கி.மீ., பயணித்ததுடன், தற்போது சூரிய குடும்பத்தை கடந்தும் ‘இன்டர்ஸ்டெல்லார்’ பகுதியில் பயணித்து கொண்டுள்ளது.
‘இன்டர்ஸ்டெல்லார்’ என்பது, நட்சத்திரங்களுக்கு இடையிலான அண்டவெளி பகுதி. இந்த பகுதியில், அண்டவெளி கதிர்வீச்சு, நட்சத்திர தூசு, அணு, அயனி மற்றும் மூலக்கூறு வடிவிலான வாயுக்கள் நிறைந்திருக்கும். இங்கு இதுவரை ஏராளமான விண்மீன்கள் வெடித்து சிதறியுள்ளன. சூரிய குடும்பத்தில் உள்ள வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கிரகங்களை கடந்து சென்ற முதல் விண்கலம் என்ற பெயரை பெற்றுள்ளது.
அதே சமயம், ‘இன்டர்ஸ்டெல்லார்’ பகுதியை கடந்து சென்ற இரண்டாவது விண்கலம் இது. இதற்கு முன்னர், நாசா அனுப்பிய வாயேஜர் 1 விண்கலம், கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட் 25 ல் முதன்முறையாக ‘இன்டர்ஸ்டெல்லார்’ பகுதியை அடைந்தது. வாயேஜர் 2 விண்கலம், பூமிக்கு தகவல் அனுப்ப சராசரியாக 16 மணி நேரம் 40 நிமிடங்கள் எடுத்து கொள்கிறது என நாசா தெரிவித்துள்ளது.
மேலும், இந்த விண்கலம், ‘ இன்டர்ஸ்டெல்லார்’ பகுதியில் சூரியனின் தாக்கம் குறித்த ஆய்வுகளையும் மேற்கொள்ள உள்ளதாக நாசா கூறியுள்ளது.