நம் நாட்டுக்கு அழகு சேர்ப்பது அதன் பழங்கால சின்னங்கள், இயற்கை எழில் மிகுந்த இடங்கள், கல்வெட்டுகள், ஓவியங்கள், சிற்பங்கள் போன்றவையே.
ஆனால் நமது அக்கறையின்மையால், பழங்கால சின்னங்கள் பெருமையை இழந்து வருகிறது. 1972ம் ஆண்டு நடந்த யுனெஸ்கோவின் பாரம்பரிய இடங்களை பாதுகாப்பது குறித்தான மாநாட்டில், உலக பாரம்பரிய நாள் குறித்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
பாரம்பரிய நினைவுச் சின்னங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகல ஆண்டுதோறும் ஏப்., 18ம் தேதி உலக பாரம்பரிய தினம் கொண்டாட யுனெஸ்கோ முடிவு செய்தது.
உலகில் எத்தனை:
உலகில் சிறந்த கலாச்சாரம் மற்றும் இயற்கை பாரம்பரியம் கொண்ட “மரபுரிமை சின்னங்களை’ யுனெஸ்கோ அமைப்பு தேர்ந்தெடுத்துள்ளது.
உலகம் முழுவதும் 936 இடங்கள் , பண்பாட்டு சின்னங்களாக, இந்த அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இதில் 725 கலாச்சார இடங்களாகவும், 183 இயற்கை பாரம்பரிய இடங்களாகவும், 28 இடங்கள் இரண்டும் சேர்ந்தவையாக உள்ளன.
உலகில் அதிக பாரம்பரிய சின்னங்கள் கொண்ட ஏழாவது நாடாக இந்தியா உள்ளது.
உலகின் மரபுரிமை சின்னங்களில் 36 இடங்கள், அழியும் நிலையில் உள்ளன.
இந்தியாவில் எத்தனை:
இந்தியாவில் தாஜ்மகால், பதேப்பூர் சிக்ரி, குதுப் மினார் போன்ற 28 இடங்கள் உலகின் மரபுரிமை சின்னங்களின் பட்டியலில் உள்ளன.
இதில் 23 இடங்கள் பண்பாட்டு சின்னங்களாகவும், 5 இடங்கள் இயற்கை பாரம்பரிய இடங்களாகவும் உள்ளன.
இப்பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த நீலகிரி மலை ரயில், மாமல்லபுரம் சிற்பங்கள், சோழர் கோயில்கள், மேற்குத் தொடர்ச்சி மலை ஆகியவை இடம் பெற்றுள்ளன.
பாரமரிப்பு குறைவு:
இந்தியாவில் உள்ள மரபுரிமை சின்னங்களை, மற்ற நாடுகளில் உள்ள மரபுரிமை சின்னங்களுடன் ஒப்பிடும் போது, இவை மிகவும் மோசமாக பராமரிக்கப்படுகின்றன என்பதே உண்மை. சில இடங்கள் சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக சேதத்தை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. நினைவுச் சின்னங்களை பாதுகாக்க யுனெஸ்கோ போன்ற அமைப்புகள், நிதியுதவி செய்து வருகின்றன.
வரும் தலைமுறையினர் நாட்டின் வரலாற்று பெருமைகளை அறிந்து கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
அரசு அதிகமான நிதியை ஒதுக்கி நாட்டின் மிகப்பெரிய அடையாளமாக திகழும், மரபுரிமை சின்னங்களை பாதுகாக்க வேண்டும். நாமும் நம்மால் முடிந்த பங்களிப்பை அளிக்க வேண்டும்.
இந்த நாளில் என்ன செய்யலாம் ?
இந்நாளில்
- கட்டிட பெருமைகளைக் கண்காட்சிகள் அமைத்து விவரிப்பது.
- கட்டணம் ஏதுமில்லாமல் இந்த ஒரு நாள் நினைவிடம், அரும் பொருளகம்(Monument), தலங்களுக்கு மக்களை அனுமதிப்பது.
- இந்த நாள் பற்றிய விழிப்புணர்வை ஊடகங்கள் மூலம் மக்களுக்குத் தெரிவிப்பது.
- பொது இடங்களில் விவாதங்கள் நடத்துவது.
- புத்தகங்கள், தபால் தலை முத்திரைகள் (Stamps), போன்றவற்றை அச்சிடுவது.
- பாரம்பரியத்தை காப்பாற்றியவருக்கு சிறப்பு பரிசுகள் வழங்குவது.
- பள்ளி மாணவர்கள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் நிகழ்ச்சிகள் நடத்துவது.