Thirukkural Pen திருக்குறள் கூறும் பெண்
சங்க காலத்தில் தமிழ்ப் பெண்கள் அறிவிலும், ஆற்றலிலும், வீரத்திலும் சிறந்து விளங்கியதற்குப் பல சான்றுகள் உள்ளன. சங்க இலக்கியத்தில் உள்ள பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை 477. அதில் 30 பேர் பெண்பாற் புலவர்கள். உலகில் எந்த நாகரிகத்திலும், எந்த நாட்டிலும், எந்த மொழியிலும் எக்காலத்திலும், இத்தனைப் பெண்பாற் புலவர்கள் இருந்ததாக வரலாறு கிடையாது. பெண்கள் பாடினிகளாகவும் விறலியராகவும் பாடலிலும் ஆடலிலும் சிறந்து விளங்கினர். அவ்வையார், அதியமான் நெடுமான் அஞ்சியின் அவைக்களப் புலவராகவும் அவருடைய தூதுவராகவும் பணியாற்றினார்.
போரில் தன் தந்தையையும் கணவனையும் இழந்த வீரப்பெண் ஒருத்தி, சிறுவனாக இருந்த தன் மகனை அழைத்து, அவனுக்கு வெள்ளை ஆடையை உடுத்தி, வேலைக் கையில் கொடுத்து, “போருக்குப் போ” என்று கூறியதை ஒக்கூர் மாசாத்தியார் இயற்றிய புறநானூற்றுப் பாடலில் (பாடல் – 279) காண்கிறோம். மற்றொரு வீரத்தாய், தன் மகன், போரில் முதுகில் புண்பட்டு இறந்ததாகக் கேள்விப்பட்டவுடன், “முதுகில் புண்பட்டு என் மகன் இறந்திருந்தால், அவன் பால் குடித்த என்னுடைய முலைகளை அறுத்து எறிவேன்” என்று சூளுரை உரைத்துப் போர்க்களத்திற்குச் சென்று, அங்குத் தன் மகன் முதுகில் புண்பட்டு இறக்கவில்லை என்பதை அறிந்தவுடன், அவனைப் பெற்றபொழுதினும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த செய்தியைக் காக்கைபாடினியார் நச்செள்ளையார் இயற்றிய புறநானூற்றுப் பாடல்
பெண்ணிற்கு மிகப் பெரிய பொறுப்பை தருகிறார் வள்ளுவர். பெண்ணை மிக உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றுகிறார்.
பெண் என்பவள் யார் என்ற கேள்விக்கு வள்ளுவர் விடை தருகிறார்.
பாடல்
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
பொருள்
தற்காத்துத் = தன்னைக் காத்துக் கொண்டு
தற்கொண்டாற் = தன்னைக் கொண்டவனை
பேணித் = போற்றி பாதுகாத்து
தகைசான்ற = பெருமைக்குரிய
சொற்காத்துச் – சொல்லினை காத்து
சோர்விலாள் = சோர்வு அடையாமல் இருப்பவள்
பெண் = பெண்
அதாவது தன்னைக் காத்துக் கொண்டு, தன் கணவனையும் காத்துக் கொண்டு, அவர்களின் குடும்ப புகழ் குறையாமல் இருக்கும் படி பார்த்துக் கொள்பவளே பெண்.
இன்றைய பெண் இன வாதிகள், அது எப்படி வள்ளுவர் பெண்ணை , கணவன் கொண்ட ஒன்று என்று சொல்லலாம் என்று வாதிப்பார்கள். பெண் என்பவள் கணவனின் உடமையா ? அவளுக்கு என்று தனி அந்தஸ்து கிடையாதா என்று கேட்கலாம்.
அவர்களின் வாதம் ஒரு புறம் இருக்கட்டும். அதற்கு பின்னால் வருவோம்.
பெண் எவ்வளவு பெரியவள் என்று வள்ளுவர் மதித்திருந்தால் , அவளால் என்னவெல்லாம் முடியும் என்று வள்ளுவர் நினைத்திருந்தால் இப்படி ஒரு பெரிய பொறுப்பை அவளுக்கு தந்திருப்பார் ?
அப்படி என்ன பெரிய பொறுப்பை தந்து விட்டார் ?
தற்காத்து – முதலில் பெண் தன்னை காத்துக் கொள்ள வேண்டும். நல்ல உணவு, உடை, மருத்துவம், கல்வி , உடற்பயிற்சி என்று அனைத்து விதங்களிலும் ஒரு பெண் தன்னை முதலில் காத்துக் கொள்ள வேண்டும். பெண் வலிமை குன்றி படுத்து விட்டால், வீடு படுத்து விடும். பெண்ணை சுற்றியே வீடு சுழல்கிறது. எல்லோரையும் பார்க்கிறேன் என்று அவள் தன்னை பார்க்காமல் இருந்துவிடக் கூடாது. சாப்பிடக் கூட நேரம் இல்லை, மருத்துவரிடம் போகணும், போகணும் என்று நினைக்கிறேன், எங்க நேரம் இருக்கு இருக்கு தள்ளிப் போட்டுக் கொண்டே போகக் கூடாது. அதுவும் இந்த காலத்தில் பெண்கள் வேலைக்குப் போக தொடங்கிய பின், அவர்களுக்கு நேரமே கிடைப்பது இல்லை.
நாம் ஆகாய விமானத்தில் செல்லும் போது , அங்குள்ள பணிப்பெண் சொல்லுவாள் , “விமானத்தில் உள்ள பிராணவாயுவின் அளவு குறைந்தால், முகத்தில் பொருத்திக் கொள்ள முக மூடி மேலே இருந்து வரும். முதலில் உங்கள் முகத்தில் பொருத்திக் கொண்டு பின், அருகில் உள்ளவர்களுக்கு உதவி செய்யுங்கள் ” என்று.
நீங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றால், முதலில் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்.
பெண் முதலில் தன்னை காத்துக் கொள்ள வேண்டும்.
சில பெண்கள், தங்கள் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தருவது இல்லை. வயசான இப்படித்தான் இருக்கும் என்று ஏனோ தானோ என்று இருந்து விடுகிறார்கள். அல்லது , கணவனோ மகனோ அழைத்துக் கொண்டு போனால்தான் மருத்துவமனைக்கு போவார்கள். அப்படி இருக்கக் கூடாது.
அவள் தன்னைத் தானே முதலில் காத்துக் கொள்ள வேண்டும்.
“தற்கொண்டான் பேணி” – கணவனை பேண வேண்டும். அவனை பாதுகாக்க வேண்டும். கணவனை இதில் இருந்து காக்க வேண்டும் ? கணவனின் உடல் நலம், மன நலம், அவன் புகழ் இவற்றை காக்க வேண்டும்.
ஒரு நிமிடம் இங்கே நிறுத்துவோம்.
பெண்ணின் நலனை காக்கும் பொறுப்பை ஆணிடம் தரவில்லை வள்ளுவர்.
பெண், தன்னைத் தானே காத்து கொள்ள வேண்டும். அது மட்டும் அல்ல, அவள் கணவனையும் காக்க வேண்டும் என்று சொல்லும் போது பெண்ணின் பொறுப்பு எவ்வளவு என்று வள்ளுவர் எடை போடுகிறார். அவளால் தான் இரண்டும் முடியும்.
கணவனின் உடல் நலம் – ஆரோக்கியம் அதை அவள் காக்க வேண்டும்.
அதை விட முக்கியம், அவனின் மன நலம். இன்று பாதி சிக்கல் மன நிலை சம்பந்தப் பட்டதாகவே இருக்கிறது. வேலைப் பளு, போட்டி, மற்றவரோடு தன்னை ஒப்பிட்டு அதனால் வரும் சிக்கல் என்று பல மனம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருகின்றன.
அதையும் விட முக்கியம், கணவனின் நல்ல பெயரை காக்க வேண்டும். “எங்க வீட்டு காரரா, அதுக்கு ஒண்ணும் தெரியாது ” என்று மனைவியே கணவனை மட்டமாக பேசக் கூடாது. கணவன் எவ்வளவு மோசமானவனாக இருந்தாலும், அவரை போல உண்டா என்று கூறி அவன் புகழ் காக்க வேண்டும்.
ஏன் ? பெண்ணுக்கு மட்டும் ஏன் இந்த கூடுதல் வேலைப் பளு ?
ஒரு பெண் தன் கணவனை மதிக்காமல் , அவனை ஏளனமாக பேசத் தலைப்பட்டால், அவளின் பிள்ளைகள் தந்தையை மதிக்காது. தகப்பன் சொல் கேளாத பிள்ளை, அப்பாவுக்கு பயப்படாத பிள்ளை , ஒழுக்கமாக வளர்வது கடினம். எதற்காக இல்லாவிட்டாலும் பிள்ளைகளின் எதிர் காலம் கருதியாவது, அவள் கணவனின் புகழை காக்க வேண்டும்.
“தகைசான்ற சொற்காத்துச் ” – தகை என்றால் உயர்ந்த என்று பொருள். தகை சார்ந்த என்றால் உயர்வினை சார்ந்து நிற்கும். அப்படிப்பட்ட சொல் எது ?புகழ்ச்சி. அந்த புகழை காக்க வேண்டும்.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு மதிப்பும் மரியாதையும் இருக்கும். அந்த மதிப்பையும் மரியாதையும் காத்து உயர்த்த வேண்டியது ஒரு பெண்ணின் கடமை. ஒரு குடும்பத்தின் மதிப்பும் மரியாதையும் ஒரு பெண்ணின் கையில் இருக்கிறது.
நண்பர்கள், சுற்றம் எல்லாம் ஒரு குடும்பத்தை மதிப்பது அந்த குடும்பத்தின் பெண்ணை வைத்துதான்.
ஒரு நண்பர் வந்திருக்கிறார். அவருக்கு ஒரு குவளை தண்ணீர் தர வேண்டும். அந்த வீட்டு பெண்மணி, அந்த குவளை நீரை “நங்” என்று வைத்தால், அந்த நண்பர் அந்த வீட்டு பக்கமே தலை வைத்துப் படுக்க மாட்டார். நட்பு அன்றோடு அறுந்து விடும்.
வீட்டின் பெருமை எப்போது காக்கப் படும் என்றால், வீட்டில் உள்ள அனைவரின் நலமும் காக்கப்பட்டால் தான். ஒரு வீட்டில் , ஒரு குடும்பத்தில் ஒரு நபர் சரி இல்லை என்றாலும், மொத்த குடும்பத்தின் பெருமை சீர் கெட்டு விடும். “அந்த வீட்டுல எல்லாம் சரி தான், அந்த கடைசி பையன் மட்டும் கொஞ்சம் சரி இல்லை. ஏதோ தப்பு தண்டா பண்ணிட்டு இப்ப சிறையில் இருக்கிறான் ” என்றால் அந்த குடுபத்தின் பெருமை குலையத்தான் செய்யும்.
எனவே ஒரு பெண் என்பவள் தன்னையும், தன் கணவனையும் மட்டும் பார்த்துக் கொண்டால் போதாது. அந்த மொத்த குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அவளிடம் இருக்கிறது.
அப்படி என்றால், நாம் சிலவற்றை யோசிக்க வேண்டும்.
முதலாவது, ஒரு வீட்டுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மருமகள்கள் வருவார்களாயின் அவர்கள் ஒற்றுமையாக செயல் பட வேண்டும்.
இரண்டாவது, ஒரு பெண் இந்தப் பெரிய பொறுப்பை ஏற்று நடத்துகிறாள் என்றால் அவளுக்கு உரிய மரியாதையும், உதவியும் செய்யப் பட வேண்டும். அது அவ வேலை என்று வீட்டில் உள்ளவர்கள் பொறுப்பற்று இருக்க முடியாது. அவள் சொல்வதைக் கேட்டு, அவளுக்கு உரிய மரியாதை தந்து, அவளின் கடமைகளில் உதவி செய்ய வேண்டும்.
மூன்றாவது, ஒரு வீட்டில் உள்ள அனைத்து பெண்களின் கடமை இது. மாமியார், மருமகள், மகள், என்று அனைத்து பெண்களும் சேர்ந்து செய்ய வேண்டிய கடன் இது. ஒருவர்க்கு ஒருவர் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள் வீட்டின் பெருமை எங்கே சிறக்கும்.
“சோர்விலாள் பெண் ” இது ஏதோ நாள் கிழமைக்கு, கல்யாணம் போன்ற முக்கிய தினங்களில் செய்ய வேண்டிய ஒன்று அல்ல. நித்தம் நித்தம் செய்ய வேண்டியது. அப்படி செய்யும் போது நிறைய சிக்கல்கள் வரும். சவால்கள் வரும். நெருக்கடிகள் வரும். அவள் சோர்ந்து போய் விடக் கூடாது.
கணவன் கொஞ்சம் ஒரு மாதிரி இருப்பான். மாமியார் குணம் அவ்வளவு சிறப்பாக இருக்காது. வீட்டில் உள்ளவர்கள் ஆளுக்கு ஒரு புறம் இழுப்பார்கள். எக்கேடும் கேட்டு போங்கள் நேற்று விட்டு விடக் கூடாது. சலிக்காமல், சோர்வு இல்லாமல் குடும்பத்தை நடத்திச் செல்ல வேண்டும்.
ஒரு பெண்ணின் திறமையின் மேல், அவளின் ஆற்றலின் மேல் நம்பிக்கை இருந்தால் வள்ளுவர் இத்தனை விஷயங்களை அவளிடம் இருந்து எதிர் பார்ப்பார்.
இது ஏதோ ஒரு சில படித்த பெண்களிடம் இருந்து மட்டும் அல்ல…எல்லா பெண்களுக்கும் சொன்னது இது.
அவர் காலத்தில் உள்ள பெண்களுக்கு மட்டும் அல்ல, இன்றும் நாளையும் வரும் பெண்களுக்கும் சொன்னது.
பெண்கள் தங்கள் பொறுப்பை உணர வேண்டும்.
ஆண்கள், பெண்களுக்கு உரிய மதிப்பையும், மரியாதையையும், உரிமையையும், உதவியையும் தர வேண்டும்.
இன்று வரும் டிவி சீரியல்கள் பெண்களை பற்றி எவ்வளவு கேவலமாக சித்தரிக்கின்றன. அவற்றை விடுத்து , திருக்குறளை படியுங்கள்.
பிள்ளைகளுக்கும் சொல்லி கொடுங்கள். குறிப்பாக ஆண் பிள்ளைகளுக்கு. வருங்காலத்தில் மனைவியை தலையில் வைத்து கொண்டாடுவார்கள். சொல்லிக் கொடுக்காமல் விட்டு விட்டோம்.
வீட்டில் உள்ள மாமியார்களுக்கும், நாத்தனார்களுக்கும், மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்.
வீடு சிறக்கும். அது ஒரு இனிமையான சோலையாக மாறும்.
kidhours – Thirukkural Pen , Thirukkural Pen Eassy , Thirukkural Pen viduthalai , Thirukkural Pen varalaru
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.