உலகில் பிற நகரத்தைக் காட்டிலும் சீனத் தலைநகர் பீஜிங்கில்தான் அதிக செல்வந்தர்கள் வாழ்வதாக ஃபோர்ப்ஸ் பட்டியல் தெரிவிக்கிறது.
ஃபோர்ப்ஸ் பட்டியலில் 100 செல்வந்தர்களின் எண்ணிக்கையுடன் பீஜிங் நகரம் முதலாவது இடத்தில் உள்ளது. கடந்த வருடத்தைக் காட்டிலும் இந்த வருடத்தின் எண்ணிக்கையில் 33 பேர் அதிகமாகச் சேர்ந்துள்ளனர். இந்த 100 செல்வந்தர்களில் முதலாம் இடத்தில் இருப்பவர் சாங் யீமிங். இவரது சொத்து மதிப்பு 35.6 பில்லியன் அமெரிக்க டாலர். இவர் வேறு யாரும் இல்லை. டிக் டாக் செயலியின் நிறுவனர். டிக் டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸின் முதன்மை நிர்வாகி. இவரின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டில் இரட்டிப்பாகியுள்ளது. பீஜிங்குக்கு அடுத்தபடியாக இந்தப் பட்டியலில் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் உள்ளது. இந்த நகரில் மொத்தம் 99 செல்வந்தர்கள் உள்ளனர். கடந்த வருடத்தைக் காட்டிலும் இந்த வருடம் 12 பேர் புதிதாகப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். இந்த 99 பேர் பட்டியலில் முதலாது இடம் பிடித்தவர் மைக்கேல் ப்ளூம்பெர்க் என்பவர். இவரின் சொத்து மதிப்பு 59 பில்லியன் அமெரிக்க டாலர்.
2021-ம் ஆண்டுக்கான ஃபோர்ப்ஸ் உலக செல்வந்தர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள மொத்த 2,755 பேரில் கால்வாசிப் பேர் உலகின் வெறும் 10 நகரங்களில் வாழ்கின்றனர். அதில் சீனாவின் நான்கு மெட்ரோ நகரங்களில் மட்டும் 10 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் வாழ்கின்றனர்.
கொரோனா பெருந்தொற்று முதன்முதலில் தொடங்கியதாகக் கூறப்படும் சீனாவின் பொருளாதாரம் அதீத வேகத்தில் வளர்ந்துவருகிறது என்ற செய்திகளுக்கு மத்தியில், இந்தச் செய்தி வந்திருக்கிறது. பெருந்தொற்றைச் சமாளிக்க முடியாமல் தத்தளித்துக்கொண்டிருந்த சீனா, தனது தொழில்நுட்ப நிறுவனத்தால் இந்த நிலையை அடைந்திருக்கிறது. கடந்த வருடம் அதிக செல்வந்தர்களைக்கொண்ட பட்டியலில் சீனா நான்காவது இடத்தில் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பீஜிங், நியூயார்க்குக்கு அடுத்தபடியாக இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள நகரம் ஹாங்காங். இங்கு கடந்த வருடத்தைக் காட்டிலும் ஒன்பது பேர் செல்வந்தர்களாகப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். சீனாவின் அரசியல் தலையீடு, சீனாவுக்கு எதிரான மக்களின், குறிப்பாக இளைஞர்களின் ஜனநாயகத்துக்கு ஆதரவான போராட்டங்கள் இவை எல்லாவற்றுக்கும் மத்தியிலும் அந்த நகரத்தின் செல்வந்தர்கள் பட்டியலில் கடந்த வருடத்தைக் காட்டிலும் ஒன்பது பேர் புதிதாகச் சேர்ந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ இடம்பெற்றுள்ளது. இங்கு 79 செல்வந்தர்கள் இருக்கிறார்கள்.
இந்தியாவுக்கு என்ன இடம்?
இந்தியாவின் மும்பை நகரம் இந்தப் பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. ஆனால், இந்தியாவில் மொத்தமாக 140 செல்வந்தர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கையால் அதிக செல்வந்தர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. மும்பை நகரைப் பொறுத்தவரை கடந்த வருடத்தைக் காட்டிலும் இந்த வருடம் புதிதாக 10 செல்வந்தர்கள் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளனர். மும்பையில் மொத்தம் 48 செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அவர்களில் அதிக சொத்து மதிப்புகொண்டவர் முகேஷ் அம்பானி. இவரின் சொத்து மதிப்பு 84.5 பில்லியன் அமெரிக்க டாலர். இது முதல் மற்றும் இரண்டாம் இடத்திலுள்ள பீஜிங் மற்றும் நியூயார்க் நகரச் செல்வந்தர்களின் சொத்து மதிப்பைக் காட்டிலும் அதிகம். லண்டன் நகரம் இந்தப் பட்டியலில் ஏழாம் இடத்தைப் பிடித்துள்ளது.
சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு என்ன காரணம்?
முன்னதாகக் கூறியபடி பெருந்தொற்றைச் சமாளிக்க முடியாமல் தத்தளித்துக்கொண்டிருந்த நாட்டுக்குப் பெரிதும் உதவியது அதன் தொழில்நுட்ப நிறுவனங்கள். அமெரிக்காவைப்போலவே சீனாவின் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு உண்மையில் பெருந்தொற்றுக் காலம் ஒரு வரமாகத்தான் இருந்தது. ஆம், ஆன்லைனில் ஷாப்பிங் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. பொழுதுபோக்கு தளங்களின் தேவையும் அதிகரித்தது. இது சீனாவுக்கு அதிகமாகக் கைகொடுத்தது.
ஆசிய-பசிபிக் பகுதியில் மட்டும் 1,149 செல்வந்தர்கள் இருக்கிறார்கள். இவர்களின் மொத்தச் சொத்து மதிப்பு அமெரிக்காவின் செல்வந்தர்களின் சொத்து மதிப்பைக் காட்டிலும் அதிகம்.
உலக அளவில் 724 செல்வந்தர்களைக் கொண்டு அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. சீனா 698 பேர் என இரண்டாம் இடத்தில் உள்ளது.
ஃபோர்ப்ஸ் பட்டியல்படி கடந்த வருடம் 493 புதிய செல்வந்தர்கள் பட்டியலில் இணைந்துள்ளனர். அதாவது 17 மணி நேரத்துக்கு ஒரு செல்வந்தர் இந்தப் பட்டியலில் இணைந்திருக்கிறார்.
இது எல்லாம் சரி. உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பவர் யார் என்று கேள்வி எழுகிறதா? தொடர்ந்து நான்காவது வருடமும் அமேஸான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெஸ் பெஸோஸ்தான் உலகின் பணக்காரர் என்ற பெயரை பெற்றிருக்கிறார். இவரின் சொத்து மதிப்பு 177 பில்லியன் அமெரிக்க டாலர்!