எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள பலோங்கன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
எண்ணெய் சேமித்து வைக்கும் டேங்கில் பற்றிய தீ, மளமளனெ கொழுந்துவிட்டு எரிந்தது. உடனே பணிகள் நிறுத்தப்பட்டு, அங்கு வேலைபார்த்த தொழிலாளர்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர்.
தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் விண்ணை முட்டும் அளவிற்கு புகை மூட்டம் எழுந்தது. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை சுற்றி வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1000 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தீ விபத்தில் 15 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. எனினும், இடி மின்னல் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கம்பெனி தரப்பில் கூறப்பட்டுள்ளது.