Tamil Short Essay Beautiful Rain சிறுவர் கட்டுரை
மழையில் – மழைபெய்வதில் என்ன அழகு என்று கேட்கலாம்? நீங்கள் சிறுவர்களாக இருக்கும் பொழுது மழை பெய்வதை வியந்து பார்த்து இரசித்திருப்பீர்கள் ! இல்லையா? மழை பெய்வதற்கு முன்னர், இருண்ட மேகம் சூழும். இடி மின்னல் வரும். கருமேகங்களுக்கு இடையே மின்னல் மின்னுவதும் ஓர் அழகு.
இடிமுழங்குவது மழை வருவதை அறிவிக்கும் முரசுபோல் முழங்கும். பிறகு மழை பெய்யும். இவை அனைத்தும் சங்கிலித்தொடர் போல் நிகழும் இயற்கை நிகழ்ச்சிகள். இந்நிகழ்ச்சிகளைப் பின்புலமாக வைத்துப் பாரதிதாசன் பாடுகின்றார்.
கேள்விஇலார் நெஞ்சம்போல் இருண்டு, நீளும்
வழக்குடையார் செல்வம்போல் மின்னி மாய்ந்து
வண்பொருளை இழந்தான்போல் அதிர்ந்து பின்னர்,
மழைக் கண்ணீர் உகுத்தது வான் !
பிறர் சொல்வதைக் கேட்டுப் பயன்பெறாதவர்களின் இருள்சூழ்ந்த நெஞ்சத்தைப் போல் மேகம் இருண்டு காணப்படுகிறது என்கிறார். நீதிமன்றத்தில் நீண்ட நாட்கள் வழக்கு நடத்திக் கொண்டிருப்பவனது செல்வம், திடீரென விரைவிலே அழிவது போல, மின்னல் மின்னி மறைந்துவிடுகிறதாம்.
தன்னிடம் இருக்கும் செல்வங்களை எல்லாம், முழுமையாக இழந்து, ஓ ! என்று அலறி அழுது கண்ணீர் விடுபவனைப் போல் இடிமுழங்கி, மேகம் மழையாகிய கண்ணீரைப் பொழிகிறது என்று மிக அருமையாக விளக்குகிறார் பாரதிதாசன்.
மேற்குறிப்பிட்ட பாடலின் கருத்துகளில் இருந்து நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்கள்? ஒரு சமுதாயக் காட்சியையே உங்கள் முன்கொண்டு வந்து பாரதிதாசன் நிறுத்துகிறார். இல்லையா?
கேள்வி அறிவில்லாதவன் உள்ளம் இருள் சூழ்ந்தது; நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கு நடத்திக் கொண்டிருப்போர் செல்வம் அழியும்;
கையில் இருக்கும் செல்வங்களையெல்லாம் இழப்பவன் மனத்திற்குள் அடக்கி வைத்திருக்கும் துன்பத்தைத் தன் கண்ணீரால் வெளிப்படுத்துவான் என்பவையெல்லாம் இவற்றின் மூலம் புலப்படவில்லையா?
இவ்வாறு இயற்கைக் காட்சிகளின் வாயிலாகத் தம் கருத்துகளைப் பாரதிதாசன் வெளிப்படுத்துகின்றார்.
kidhours – Tamil Short Essay Beautiful Rain
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.