எகிப்தில் பழமையான தங்க நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தொல்லியல் துறை தெரிவித்துள்ளது பிரமிடுகள், மம்மிகள் உள்ளிட்ட பல வரலாற்றுப் பொக்கிஷத்தை தன்னகத்தே கொண்ட நாடு எகிப்து. இங்கு தோண்டத்தோண்ட பல அதிசயங்கள் கிடைத்துக் கொண்டே வருகின்றன. இந்த நிலையில், தற்போது புதையுண்டு போன ஒரு தங்க நகரத்தை எகிப்திய தொல்பொருள் ஆய்வுக் குழு கண்டறிந்துள்ளது. இது சுமார் 3,000 ஆண்டுகள் பழமையான நகரம் எனக் கூறப்படுவது மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
எகிப்து நாட்டின் லக்ஸர் பகுதியில் மிகப் பழமையான நகரமாகக் கருதப்பட்டு வந்த 3000 ஆண்டுகள் பழமையான இழந்த தங்க நகரத்தை தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். 2020ஆம் ஆண்டு செப்டம்பரில் அகழ்வாராய்ச்சி தொடங்கிய நிலையில், இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், பழங்கால ஆசிய பாரம்பரியங்களை பறைசாற்றும் சான்றுகளும் மணல்களுக்குள் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஹேரெம்ஹேப் மற்றும் ஆயி கோயில்கள் இங்கு கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து துதன்கமுன் கோயிலும் இங்கு அமைந்திருக்க வேண்டும் என்ற கணிப்பில், ஏராளமான வெளிநாட்டுக் குழுக்கள் இந்தக் கோயிலை அகழ்வாராய்ச்சி செய்யும் பணியில் ஈடுபட்டன. ஆனால், அப்போதெல்லாம் இந்த நகரத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் போனது. இந்த நிலையில், எகிப்து நாட்டைச் சேர்ந்த தொல்லியல் துறை நிபுணர் ஸாஹி ஹவாஸ், நாட்டின் தொல்பொருள் ஆய்வு நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து, இந்த மிகப் பழமையான தங்க நகரத்தை (Lost golden city of Luxor) கண்டுபிடித்துள்ளார்.
![அதிசயம் கொண்ட 3000 ஆண்டுகள் பழமையான தங்க நகரம் கண்டுபிடிப்பு#tamil_news#gold 1 tamil_kids_news](https://www.kidhours.com/wp-content/uploads/2021/04/tamil_kids_news-11.png)
1386 முதல் கிமு 1353 வரை ஆட்சி செய்த எகிப்தின் மிக சக்திவாய்ந்த பார்வோன்களில் ஒருவரான மூன்றாம் அமென்ஹோடெப்பின் ஆட்சிக்காலம் இந்த நகரம் என்று கூறப்படுகிறது. இந்த நகரம், ஏதெனின் எழுச்சி (The Rise of Aten) என்றும் அறியப்படுகிறது. இந்த நகரத்தை மூன்றாம் அமென்ஹோடெப் மற்றும் மன்னர் துதன்கமுன் ஆகியோரது ஆண்டுள்ளனர். மூன்றாம் அமென்ஹோடெப் மன்னர் அவரது இறுதி ஆண்டுகளில் தனது மகன் அகெனாடனுடன் சேர்ந்து ஆட்சி செய்ததாக கருதப்படுகிறது. இருப்பினும், தந்தை இறந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது மகன் எல்லாவற்றிலிருந்தும் மாறியதாக கூறப்படுகிறது.
அகெனாடென் 17 ஆண்டுகள் ஆட்சி செய்ததாகக் கூறப்படுகிறது, மேலும் அவரது ஆட்சிக் காலத்தில், சூரியக் கடவுளான ஏதென் தவிர அனைத்து பாரம்பரிய எகிப்திய பாந்தியங்களையும் அவர் கைவிட்டார். மேலும், அவர் தனது பெயரை அமன்ஹோடெப் IV என்பதை அகெனாடென் என்று மாற்றினார். பின்னர் அவர் தனது அரச இருக்கையை தீப்ஸின் வடக்கிலிருந்து அகெட்டடென் என்ற புதிய நகரத்திற்கு மாற்றி ஒரு கலைப் புரட்சிக்கு வழிவகுத்தார். இருப்பினும், அவரது மரணத்திற்குப் பிறகு, அவரது தடயங்கள் பெரும்பாலானவை அழிக்கப்பட்டன.
![அதிசயம் கொண்ட 3000 ஆண்டுகள் பழமையான தங்க நகரம் கண்டுபிடிப்பு#tamil_news#gold 2 tamil_kids_news](https://www.kidhours.com/wp-content/uploads/2021/04/tamil_kids_news-12.png)
இழந்த தங்க நகரம் மட்டுமல்லாமல் அன்றாட தேவைகளை உள்ளடக்கிய பல்வேறு கட்டமைப்புகள், பார்வோனின் தலைநகரத்தை ஆதரிப்பதில் பங்களித்த கலை, தொழில்துறை உற்பத்தியுடன் தொடர்புடையவையும் கண்டறியப்பட்டுள்ளன. அத்துடன், தொழிலாளர்கள் வாழ்ந்த வீடுகளையும் தொல்லியல் குழு கண்டுபிடித்துள்ளது. மேலும், பேக்கரி, சமையலறை, உலோகம் மற்றும் கண்ணாடி உற்பத்தி தொடர்பான பொருட்கள், நிர்வாகத்துடன் தொடர்புடைய கட்டடங்கள், பாறைகளாலான கல்லறை உள்ளிட்டவைகளும் கண்டறியப்பட்டுள்ளன