Saturday, January 18, 2025
Homeகல்விசிறுவர் கதைகள்சிறுகதை எழுதுவது எப்படி? Tamil Kids Short Story

சிறுகதை எழுதுவது எப்படி? Tamil Kids Short Story

- Advertisement -

Tamil kids Short Story  சிறுவர் சிறுகதைகள்

- Advertisement -

இந்த கேள்வியை யாராவது பெருசுகளிடம் கேட்டால், “சுஜாதா புக் எழுதியிருக்கிறார். வாங்கிப்படி!” என்கிறார்கள். உண்மையில் அந்தப் பெருசுகள் அப்புத்தகத்தை படித்திருக்க வாய்ப்பே யில்லை என்று கருதலாம். ‘சிறுகதை எழுதுவது எப்படி?’ என்பதே ஒரு சிறுகதைதான். அந்த சிறுகதை அடங்கிய சுஜாதாவின் சிறுகதைத் தொகுப்புக்கு சூட்டப்பட்ட பெயர் அது.

1. சிறுகதை என்றால் என்ன?

‘சிறுகதை’ என்ற சொல் short story என்ற ஆங்கிலச் சொல்லின் மொழிபெயர்ப்பு. இச்சொல்லை வைத்து சிறுகதை என்ற வடிவததை புரிந்துகொள்ளக் கூடாது. இது சிறுகதை என்ற வடிவம் உருவாகி வந்த ஆரம்ப நாட்களில் போடப்பட்ட ஒரு பொதுப்பெயர் மட்டுமே.

- Advertisement -

அதாவது சிறுகதை என்றால் ‘சிறிய கதை’அல்ல. எல்லா சிறிய கதைகளும் சிறுகதைகள் அல்ல. சிறுகதை என்பது ஒரு தனித்த இலக்கிய வடிவம். அதற்கு தனியான வடிவச்சிறப்புகள் உண்டு.

- Advertisement -

சிறிய கதைகள் பலவகை. உதாரணகதைகள் நீதிக்கதைகள், உருவகக் கதைகள், நிகழ்ச்சித்துணுக்குகள் எல்லாமே சிறிய கதைகள்தான்.

பள்ளியில் காக்கா வடை சுட்டது போன்ற நீதிக்கதைகளை நாம் படித்திருப்போம். ஏசுகிறிஸ்து, ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற மகான்கள் நிறைய உதாரணக் கதைகளை சொல்லியிருக்கிறார்கள். பஞ்சதந்திரக் கதைகள் ஈசாப் குட்டிக்கதைகள் போல பலவகையான உருவகக் கதைகளை நாம் கேட்டிருபோம்.

இவை ஏதும் ‘சிறுகதை’கள் அல்ல.

புதுமைப்பித்தன் முதல் சுஜாதா வரையிலான எழுத்தாளர்கள் எழுதும் சிறுகதைகளுக்கும் இவற்றுக்கும் முக்கியமான ஒரு வேறுபாடுகள் உண்டு. அதுதான் சிறுகதையின் அடையாளம்.

திருப்பத்தை முக்கியமானதாகக் கொண்டு சிறுகதைவடிவம் உருவாகக் காரணம் என்ன?

முதல் காரணம், வாசகனின் கற்பனைக்கு அதிக இடம் கொடுப்பதேயாகும். மற்ற கதைகளில் கதையின் மையத்தை புரிந்து பெற்றுக்கொள்ளும் இடத்தில் வாசகன் இருக்கிறான். ஆனால் சிறுகதையில் வாசகனை கதைக்குள் இழுக்கிறான் ஆசிரியன். வாசகன் கதைமுடிவைப்பற்றி என்ன நினைக்கிறான் என்று ஊகித்து அதற்கு நேர் எதிராக கதையை முடித்து அவனை திகைக்க வைக்கிறான். கதைவாசிப்பு என்ற செயலில் வாசகன் ஆற்றும் பணி மேலும் அதிகமாக ஆகிறது.

இதைத்தான் ‘வாசகப் பங்கேற்பு’ என்ற கலைச்சொல்லால் திறனாய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். நவீன இலக்கிய வடிவங்கள் எல்லாமே வாசகப்பங்கேற்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் உருவானவையே. இலக்கிய வடிவங்களில் வரும் எல்லா மாற்றங்களும் மேலும் மேலும் வாசகப்பங்கேற்பை உருவாக்கும் பொருட்டு வருவனவே.

இப்படி வாசகப் பங்கேற்பை அதிகரிப்பதற்கான தேவை என்ன வந்தது?

பத்தொன்பதாம் நூற்றாண்டில் அச்சு ஊடகம் உருவாகி வளர்ந்ததும் கதைகள் எழுதுவதும் வாசிப்பதும் பல்கிப் பெருகிற்று. சிந்தித்து பாருங்கள், இதழ்கள், சினிமா, தொலைக்காட்சி என்று நாம் ஒருநாளில் எத்தனை கதைகளைக் கேட்கிறோம்! சொல்லப்போனால் மீன் நீரில் திளைத்து வாழ்வது போல நாம் கதைகளில் வாழ்கிறோம்.

இத்தனை கதைகள் வந்து நிறைந்தபோது கதைகளில் வாசகனின் பழக்கம் அதிகமாயிற்று. ஒரு கதையை படிக்கும்போதே அவன் முடிவை ஊகிக்க ஆரம்பித்துவிட்டான். அவ்வாறு ஊகிக்கக் கூடிய கதைகளில் அவனுடைய ஆர்வம் குறைந்தது. சிறுகதை வடிவம் வாசகனின் ஆர்வத்தை தக்கவைத்துக் கொள்ளும்பொருட்டே உருவாயிற்று. வழக்கமான கதைவாசகன் ஒரு கதையை எப்படி ஊகிப்பான் என்பதை கதையாசிரியனே ஊகித்து அதற்கு மாறாக கதையை முடிக்கிறான். இது வாசகனை கதையைப்பற்றி சலிப்படையாதிருக்கச் செய்கிறது.

உண்மையில் சிறுகதை என்ற வடிவம் தொடக்கத்தில் பொழுதுபோக்கு இதழ்களில் வாசகனுக்கு ஆர்வமூட்டி முடிவில் இன்பத்தை அளிக்கும் ஒருவகை ‘கதை விளையாட்டாக’வே உருவாயிற்று. சிறுகதை முன்னோடிகளான ‘எட்கார் ஆல்லன் போ’, ‘ ஓ.ஹென்றி ‘ போன்ற படைப்பாளிகளின் கதைகள் இத்தகைய விளையாட்டுகளாகவே உள்ளன.

சிறுகதையை வாசிக்கும்போது வாசகன் வெறுமே கதைபடிப்பவனாக இல்லாமல் கதையை பலவாறாக ஊகித்து புனைந்தபடியே செல்கிறான். ‘இப்படி இருக்குமோ? இப்படி முடிப்பாரோ! ‘ என்றெல்லாம் அவன் எண்ணிக் கொண்டே படிக்கிறான். இப்போது கதையில் வாசகன் ‘பங்கேற்க’ ஆரம்பித்துவிடுகிறான். அவனும் அக்கதையை தனக்குள் எழுதுகிறான். ஆகவே இங்கே வாசகன் வெறுமெ வாசகனாக இல்லாமல் ‘இணை ஆசிரியனாக’ செயல்படுகிறான்.

நவீன ஆக்கங்களில் வாசகன் அப்படைப்பாளிக்கு இணையாகவே கற்பனையை செயல்படுத்திக் கொண்டே இருக்கவேண்டும். இது இன்றைய இலக்கிய திறனாய்வில் பலவாறாக விரிவாகப் பேசப்படுகிறது. சிறுகதையில் உள்ள திருப்பம் வாசக பங்கேற்பை அதிகரிக்கும்பொருட்டு உருவானதே.

சிறுகதை என்பது புத்திலக்கியத்தின் ஒரு முக்கியமான வடிவம். மரபிலக்கியம் ஏற்கனவே சமூகத்தில் உள்ள கருத்துக்களையும் நம்பிக்கைகளையும் வலியுறுத்தும் போக்கு கொண்டது. புத்திலக்கியம் அவற்றை மறுத்து அல்லது பரிசீலனைசெய்து பேசும் நோக்கம் கொண்டது. சிறுகதையில் உள்ள திருப்பம் இதற்கு மிக வசதியானதாக அமைந்தது. ஒரு பிரச்சினையை பேசியபடியே வந்து சட்டென்று ஒருபுதிய கோணத்தை திறப்பதற்கு சிறுகதையே மிகச்சிறந்த வடிவம்.

புத்திலக்கியவாதிகள் பெரும்பாலானவர்கள் வாழ்க்கை என்பது பலவிதமான முரண்பாடுகளால் ஆனது என்று எண்ணினார்கள். வாழ்க்கையில் உள்ள முரண்பாடுகளைச் சொல்வதற்கும் சிறுகதை சிறந்த வடிவம்.

மாப்பசான், ஆண்டன் செகாவ் போன்ற படைப்பாளிகள் இவ்வாறு சிறுகதையை கையாண்டு அதைஇலக்கியத்தரமான ஒரு வடிவமாக மாற்றினர்.

Tamil kids Short Story 
Tamil kids Short Story

சிறுகதையின் இலக்கணவடிவம் என்ன?

சிறுகதையின் வடிவத்துக்கு ஐந்து அடிப்படைகள் உண்டு என்பது மரபான இலக்கணமாகும்

1. சிறுகதையின் ‘உடல்’ ஒருமை கொண்டதாக இருக்கும். தேவையில்லாத விஷயங்களே அதில் இருக்காது. அது நேராக ஒரு முடிவை நோக்கிச் செல்லும்.

2. சிறுகதையின் முடிவு வாசகன் ஊகித்திராத ஒன்றாக இருக்கும். இதுவே ‘திருப்பம்’ என்பது. சிறுகதையின் மையம் என்பது திருப்பத்திலேயே உள்ளது.

3. திருப்பம் நிகழ்வது வாழ்க்கையின் ஒரு புள்ளியிலேயே. ஆகவே சிறுகதை வாழ்க்கையின் ‘ ஒரே ஒருபுள்ளியை’ மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும். சிறுகதை ‘ஒன்றை மட்டுமே சொல்லக்கூடிய ‘ இலக்கிய வடிவம். திருப்பம் மூலம் வெளிப்படும் அந்த மையத்தைதவிர வேறு எதை அது சொல்ல தொடங்கினாலும் கதை சிதறி ,ஒருமை இல்லாமலாகும்

4. சிறுகதை வாசகனிடம் எதையாவது சொல்வதற்காக உருவான வடிவம் அல்ல. வாசகனை கதையில் பங்கெடுக்க வைப்பதற்காக உருவான வடிவம். வாசகனை எந்த அளவுக்கு கற்பனைசெய்ய வைக்கிறதோ அந்த அளவுக்கு சிறுகதை வெற்றி பெறுகிறது. சொல்லப்படும் விஷயம் சிறுகதையில் இருக்கக் கூடாது. வாசகனே ஊகித்துச் சென்றடையும் விஷயமே சிறுகதையின் மையமாகும்.

5. சிறுகதை அதன் கடைசி வரிக்குப் பிறகு வாசகன் மனதில் மீண்டும் தொடங்குகிறது.

சிறுகதை வடிவத்தின் உறுப்புகள்

சிறுகதையில் வழக்கமான வடிவத்தில் உள்ள உறுப்புகள் என்னென்ன?

அவற்றை கீழ்க்கண்டவாறு வரையறுத்துகூறலாம்.

1. மையக்கதாபாத்திரம்.

ஒரு கதையைப் பற்றிப்பேசும் முன் ”இது யாருடைய கதை?” என்ற கேள்வி மிக முக்கியமானது.உதாரணமாக ஜெயகாந்தனின் ‘அக்கினிப்பிரவேசம்’ கங்காவின் கதை. இவ்வாறு ஒரு மையக் கதாபாத்திரத்தை வரையறுத்துக்கொள்வது ஒரு சிறுகதையின் வடிவ ஒருமைக்கு இன்றியமையாததாகும்.

மையக்கதாபாத்திரத்தை நோக்கி வாசகனின் கவனம் இருக்கும்படி கதை அமையவேண்டும். அந்த மையக்கதாபாத்திரத்தின் குணச்சித்திரம் ஆசிரியனால் கதையில் கொடுக்கப்படுகையில் கதைக்கு ஒரு குவிமையம் அமைகிறது.

மேலே சொன்ன கதையில் ‘காகம்’ மையக் கதாபாத்திரம். இது அக்காகத்தின் கதை. அக்காகம் எப்படிப்பட்டது, அதற்கு என்ன நடந்தது என்பதுதான் கதை. வரி 1 மையக்கதாபாத்திரத்தையும் அதன் குணச்சித்திரத்தையும் அறிமுகம் செய்கிறது. இப்போதுதான் உண்மையில் கதை தொடங்குகிறது.

2. எதிர் கதாபாத்திரங்கள்

சிறுகதையில் மேலே சொன்ன மையக்கதாபாத்திரத்தை நேர்நிலை [positive] என்று வைத்துக்கொள்வோம். அதன்மீது குறுக்காக வெட்டும் கோடுகள்தான் பிற கதாபாத்திரங்கள். எதிர்நிலை [negative] கதாபாத்திரங்கள். ‘இவர்கள் மையக்கதாபாத்திரத்திற்கு அளிக்கும் பாதிப்பு மூலம்தான் கதையின் சிக்கல், நெருக்கடி ஆகியவை உருவாகின்றன. சிறுகதையில் இத்தகைய கதாபாத்திரங்கள் ஒன்று அல்லது இரண்டாக இருப்பது நல்லது. வடிவ ஒருமை எளிதாக உருவாகும்.

மேலே சொன்ன கதையில் நரி எதிர்கதாபாத்திரம். வரி 3 அக்கதாபாத்திரத்தை அறிமுகம் செய்கிறது.

இப்போது கதையின் நேர்சரடும் எதிர் சரடும் உருவாகிவிட்டன. இவற்றை மோதவிட்டோ, பின்னியோ கதையை கொண்டுசெல்லலாம்.

இங்கே ஒருவிஷயத்தைச் சொல்லியாக வேண்டும். மையக்கதாபாத்திரம் ‘நல்ல’ கதாபாத்திரமாகவும் எதிர் கதாபாத்திரம் ‘கெட்ட’ கதாபாத்திரமாகவும் இருக்கவேண்டுமென்பது இல்லை. மையக்கதாபாத்திரத்தை வெட்டிச்செல்வதாக எதிர்கதாபாத்திரம் இருக்கவேண்டும் அவ்வளவுதான்.

3. கதைக்களம்.

கதை நடக்கும் சூழல், காலம் ஆகியவையே கதைக்களம். கதையின் மையக்கருவையும் கதாபாத்திரங்களையும் ஒரு வாழ்க்கைச்சூழலில் நம்பகமாக பொருத்திக்காட்டவேண்டியது கதைக்கு அவசியம். கதை எங்கே நடக்கிறது,எப்போது நடக்கிரது என்றகேள்விக்கு கதையில் பதில் இருக்கவேண்டும். அதற்கேற்ப கதையின் சித்தரிப்புகள் இருக்கவேண்டும்.

அச்சூழல் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். சமகாலமாக இருக்கலாம். இறந்தகாலமாகவோ எதிர்காலமாகவோ இருக்கலாம். மண்னாக இருக்கலாம். விண்வெளியாக இருக்கலாம். வாசகன் அச்சூழலை நம்பும்படியாக எழுத்தாளன் அதைச் சித்தரிக்கவேண்டும்.

ஆனால் சிறுகதை என்றவடிவம் விரிவான சித்தரிப்புகளுக்கு இடம் கொடுக்காது. ஏற்கனவே சொன்னதுபோல திருப்பம்தான் அதன் மையம். அதை நோக்கி அது ஓடிக் கொண்டிருக்கவேண்டும். விரிவாக விவரித்துக் கொண்டிருந்தால் வடிவஒருமை கைகூடாது.

ஆகவே சிறந்த சிறுகதைகள் அதிக சொற்கள் இல்லாமல் கதையோட்டத்தின் போக்கிலேயே கதைக்களத்தையும் சித்தரித்துச் செல்லும். எவ்வளவு சுருக்கமாக சொல்லமுடியுமோ அவ்வளவு சுருக்கமாகச் சொல்வது நல்லது. ஆனால் கதைக்களம் தெளிவாக உருவாகவும் வேண்டும்.

பழையகாலக் கதைகளைப் பார்த்தால் முதலில் கதைக்களம், பிறகு மையக்கதாபாத்திரம். பிறகு எதிர் கதாபாத்திரம் என்று சம்பிரதாயமாக கதையைச் சொல்வதைக் காணலாம். ”சிங்கப்பூர் விமானநிலையம்! பத்து நிமிடத்திற்கு ஒரு விமானம் ஒரு இறங்கும் இடம் அது என்பதனால் ஒரே கூட்டம். உலகம் முழுக்க உள்ள பலவகையான மனிதமுகங்கள்……. .” என்றெல்லாம் கதைக்களத்தை வர்ணித்துவிட்டு ”…எட்டுபத்துக்கு வந்துசேர்ந்த விமானத்தில் நிர்மலா வந்து இறங்கினாள். நிர்மலாவுக்கு வயது இருபது. அழகானவள். எம்பிஏ படித்திருகிறாள். கண்டிப்பானவள்.” என்று மையக்கதாபாத்திரத்தை அறிமுகம்செய்து, அதன் பின் ”நிர்மலாவை வரவேற்க ஹரி வந்திருந்தான். அவளது காதலன்.அவளுக்கு நேர் எதிர். எதிலும் ஒழுங்கில்லாதவன்… ”என்று எதிர்கதாபாத்திரத்தை அறிமுகம் செய்து அதன் பின் பிரச்சினையை சொல்லி கதையை நடத்துவது இன்றும்கூட கல்கி, விகடன் கதைகளில் காணக்கிடைக்கிறது. இது மிக பழைய ஒரு ‘அமெச்சூர்’ எழுத்துமுறையாகும்.

குறைவான சொற்களில் போகிறபோக்கில் சொல்லிச்செல்வதே சிறுகதைக்கு வடிவ நேர்த்தியை உருவாக்கும். மேலே சொன்ன கதையை இப்படி எழுதிப்பார்க்கலாம். ” விமானநிலையத்துக்கு ஹரி சீவாத தலையுடன் வந்திருந்தான். ”லக்கேஜை நான் எடுத்துக் கொண்டுவருகிறேன்…”என்றவன் ரகசியமாக” நீ ரொம்ப அழகாக இருக்கிராய்”என்றான். ”சும்மா சோப்பு போடாமல் வேலையைபார்”என்று அவனை கைப்பையால் அடித்துவிட்டு நிர்மலா வாட்சைப்பார்த்தாள். எட்டுபதினைந்து…”

பல சிறுகதைகளில் கதைக்களம் ஓரிரு வார்த்தைகளில் சொல்லப்பட்டிருக்கும். சில கதைகளில் ஊகிக்க விடபப்ட்டிருக்கும். சிலகதைகளில் கதைக்களம் முற்றிலும் மறைந்திருக்கும். ஆனால் கதை எங்கே எப்போது நிகழ்கிறது என வாசகன் உணர்ந்திருப்பான்.

மேலே சொன்ன கதையில் ‘ஒரு ஊரில்’ என்பதுதன கதைக்களம்.

சிறுகதையில் ஒரே ஒரு கதைக்களம் இருப்பது வசதி. ஒருமுறை கதைக்களம் மாறுவதும் பெரிய சிக்கலைக் கொடுக்காது. அதற்குமேல் கதைக்களத்தை மாற்றினால் சிறுகதையின் ஒருமை சிதறும். வாசகன் கதையை ‘இழுவை’யாக உணர்வான்

Tamil kids Short Story 
Tamil kids Short Story

4. கதைமுடிச்சு .

கதை எதைப்பற்றியது என்பதுதான் கதை முடிச்சின் அடிப்படை . மேலே சொன்ன கதையில் கதைமுடிச்சு ஏமாளித்தனம் பற்றியது. யாரை யார் ஏமாற்றுகிறார்கள் என்பதுதான் கதையின் கேள்வி.

காகத்தை ஏமாற்ற நரி முயல்கையில் கதைமுடிச்சு விழுகிறது. சொற்றொடர் 4 ல் கதைமுடிச்சு விழுகிறது.

கதையின் மையமான நிகழ்ச்சி நடக்கும்போது முடிச்சு உருவாகலாம். மையமான கேள்வி எழும்போது முடிச்சு உருவாகலாம்.

பெரும்பாலும் மையக்கதாபாத்திரத்தை ஒட்டித்தான் முடிச்சு உருவாகும். அதற்கு எதிர்கததாபாத்திரம் காரணமாக இருக்கும்.

5. திருப்பம்.

மேலே சொன்ன முடிச்சை கதை எப்படி அவிழ்க்கிறது என்பதுதான் கதையின் இறுதி. சிறுகதையில் அது எப்படி அவிழும் என்று வாசகன் ஊகிக்கிறானோ அதற்கு அப்பால் சென்று புதிய ஒரு கோணத்தில் அதை அவிழ்ப்பதே திருப்பம் ஆகும்.

சொற்றொடர் 6 ல் அத்தகைய திருப்பம் உள்ளது. இது வாசகனை சற்று அதிர வைக்கிரது. நிலைகுலையவைக்கிறது. அவனது சிந்தனையை உசுப்புகிறது. அவனை மேலே சென்று கற்பனைசெய்யவைக்கிறது.

6. தலைப்பு.

கதையின் தலைப்பு என்பது ஒரு மனிதருக்கு பெயர் போடுவதுபோல ஓர் அடையாளம் மட்டுமே. நினைவில் நிற்கும் தலைப்பு போடுவது நல்லது

ஆனால் தலைப்பில் செய்யக்கூடாதவை சில உள்ளன

அ. கதையின் மையம் என்ன, சாரம் என்ன என்றெல்லாம் ஆசிரியனே சொல்வதுபோல தலைப்பு வைப்பது தவறு. உதாரணம் ‘ மனமே மருந்து!’

ஆ. எல்லாரும் போட்டு தேய்ந்து போன பாணியில் தலைப்பு போடக்கூடாது . உதாரணம் ”கற்க மறந்த பாடங்கள்’ ‘தோணியும் வண்டியில் ஏறும்’

இ. கதையின் சாரத்தை படிமம் மூலம் சுட்டும் தலைப்பு வைக்கலாம். அது கதையை நினைவில் நிறுத்த உதவும்.ஆனால் அது மிக வெளிப்படையாக இருக்கக் கூடாது. வாசகனின் கற்பனைக்கு அது தடையாகும்

இதுவே சிறுகதையின் உறுப்புகள்.

சிறுகதையின் இடைவெளி

நவீன இலக்கியப் படைப்புகளில் முக்கியமான ஒருவிஷயம் உண்டு. அதை ‘வாசக இடைவெளி ‘ என்று திறனாய்வாளர் சொல்வார்கள். ஒரு படைப்பு வாசகன் தன் கற்பனையின் மூலம் நிரப்பிக் கொள்வதற்கு விடும் இடைவெளிதான் அது.

இதற்கான தேவை என்ன? பழைய பாணியில் இலக்கியங்களை ரசிப்பவர்கள் நம்மிடம் இதைப்பற்றி எப்போதுமே குறைப்படுவார்கள் ”சொல்ல வந்ததை தெளிவாகச் சொன்னால் என்ன?” என்று கேட்பார்கள். சொல்லி தெரிவதில் கலையனுபம் இல்லை, கற்பனைசெய்வதிலேயே கலையனுபவம் உள்ளது.

இதை ஆர்தர் கோஸ்லர் எழுதிய ‘ The art of Creation’ என்ற நூலில் விரிவாக விளக்குகிறார். அதற்கு அவர் சொல்லும் உதாரணம் நகைச்சுவை துணுக்கு என்ற வடிவம்.

 

ஒரு ஹிப்பி பேருந்தில் அமர்ந்திருந்தான். காலில் ஒற்றைச் செருப்புடன்.

அருகே வந்து அமர்ந்த முதியவர் கேட்டார் ”ஒரு செருப்பு தொலைந்துவிட்டதோ?”’

”இல்லை. ஒன்று கிடைத்தது”

இந்த நகைச்சுவைக்கு புன்னகை செய்தீர்கள் என்றால் ஏன் என்று யோசியுங்கள். அந்த ஹிப்பியின் குணச்சித்திரத்தை அவனுடைய ஒருவார்த்தைப் பதிலில் இருந்து நாம் ஊகிக்கிறோம் என்பதே அதற்குக் காரணம். குறைவான சொற்களில் சொல்லும்போதுதான் நகைச்சுவைத்துணுக்கு சிரிப்பு மூட்டும். விளக்கிச்சொன்னால் சிரிப்பு வராது.

நகைச்சுவைத்துணுக்கு கேட்டு சிரிப்பு வரும் கணம் எது? சட்டென்று அதில் சொல்லப்படாததை நாம் ஊகிக்கிறோம் அல்லவா ,அதுதான்.

நம்முடைய கற்பனையை தூண்டும் படியாக துணுக்கின் அமைப்பு உள்ளது. எதிர்பாராதபடி சட்டென்று கச்சிதமாக அந்த வரி வெளிப்படுவதனாலேயே நாம் அதை ரசிக்கிறோம்.

இதையே இப்படிச் சொல்லலாம். ” ஒரு ஹிப்பி பேருந்தில் அமர்ந்திருந்தான். அவன் காலில் ஒற்றைச் செருப்பை அணிந்திருந்தான்.அது அவன் கண்டெடுத்த செருப்பு. காரணம் அவன் பொறுக்கித்தனமாக வாழ்கிறவன். அவனருகே வந்து அமர்ந்த முதியவர் ”ஒரு செருப்பு தொலைந்துவிட்டதா?’ என்று கேட்டார். ஹிப்பி ”இல்லை. ஒன்று கிடைத்தது” என்று பதில் சொன்னான். முதியவர் அதிர்ச்சி அடைந்தார்”

இதில் ரசிக்க எதுவுமே இல்லை. அதாவது நகைச்சுவைத்துணுக்கு சொல்லும் முறை மூலமே நகைச்சுவையை உருவாக்குகிறது. கொஞ்சமாகச் சொல்லி மிச்சத்தை ஊகிக்கவிடுவதே அதன் வழி

சிறுகதையின் வடிவமும் கிட்டத்தட்ட இப்படித்தான். ‘சொல்லவந்த விஷயத்தை சொல்வது’ அல்ல சிறுகதையின் இயல்பு. கொஞ்சமாகச் சொல்லி பெரும்பகுதியை வாசகனை ஊகிக்கவைப்பதுதான் சிறுகதையின் இயல்பு. இவ்வாறு வாசகனின் ஊகத்துக்காக விடப்படும் மௌனத்தைத்தான் வாசக இடைவெளி என்கிறோம்.

நகைச்சுவைத் துணுக்குகளை ரசிக்க நாம் பழகியிருக்கிறோம். சொன்னதுமே மிச்சத்தை ஊகித்து சிரிப்போம். ஆனால் பல சமயம் வயதான பாட்டிதாத்தாக்கள் நகைச்சுவைத்துணுக்குகளை ரசிக்க முடியாமல் போவதை பார்க்கலாம். அவர்களுக்கு அவற்றை ரசிப்பதற்கான பழக்கம் அல்லது பயிற்சி இல்லை.

அதைப்போல சிறுகதையிலும் விடப்படும் வாசக இடைவெளியை ஊகித்து ரசிப்பதற்கு கொஞ்சம் பழக்கம் தேவை. தொடர்ந்து படிப்பதன்மூலம் இயல்பாக அது உருவாகிவரும். அ·தன்றி சிறுகதையை வாசித்துவிட்டு ‘சொல்லவந்ததை தெளிவாகச்சொல்லு”என்று எழுத்தாளனிடம் சொல்வதில் பொருள் இல்லை. அப்படிச்சொன்னால் அது சிறுகதை அல்ல.

சிறுகதையின் சித்தரிப்பு

சிறுகதைகள் எழுதத் தொடங்குபவர்கள் முதலில் செய்யும் தவறு என்ன? சொல்ல உத்தேசிப்பதை சுருக்கமாகச் சொல்வதுதான். அதாவது நேரில் பேசினால் சொல்வது போல சொல்வது. அது சிறுகதைக்குப் போதாது. ஏன்?

”நேற்று காலையில் சாலையில் ஒரு விபத்தில் மாட்டிக் கொண்டேன். கையில் நல்ல அடி. அப்போது சாலையில் யாருமே இல்லை. மழைவேறு பெய்தது. அதனால் வண்டியின் என்ணைப் பார்க்க முடியவில்லை. ” இப்படி நடந்த விஷயத்தை சுருக்கமாகச் சொல்லலாம். இப்படித்தான் நாம் சாதாரணமாகப் பேசுவோம். நடந்ததை பிறருக்கு ‘தெரிவிக்க’ இது போதும்.

ஆனால் இலக்கியம் நடந்ததை தெரிவித்தால் போதாது. நடந்த நிகழ்ச்சியை வாசிப்பவருக்கு ‘அனுபவமாக’ ஆக்க வேண்டும். அவரும் தனக்கு உண்மையில் நிகழ்ந்தது போல அதை உணரவேண்டும். அதற்குத்தான் ‘சித்தரிப்பு ‘ தேவையாகிறது.

”காலையில் நெடுஞ்சாலையில் யாருமே இல்லை. சன்னமான மழை ஒரு பாலிதீன் திரை போல கரிய தார்பரப்பை மூடியிருந்தது. கார்களின் ஹெட்லைட் ஒளிகள் நீரின் அடியில்தெரிவதுபோல கலங்கி தெரிந்து தாண்டி மறைந்துகொண்டிருந்தன. நான் இருபக்கமும் பார்த்தேன், வண்டிகள் வரும் ஒலி கேட்கவில்லை. என் மனதில் காலைநேரக் கவலைகள். ஆபீஸில் ஒரு சின்ன நிதிச்சிக்கல். ஒரு தைரியத்தில் சட்டென்று சாலையைக் கடந்தென்.யாரோ கையை ஓங்கி தட்டுவது போலிருந்தது. சுழன்று விழுந்தேன். ஒரு கார் என்னைத்தாண்டிச் சென்றது. அதன் பின் விளக்குகளின் சிவப்பு சீறிசீறி அணைவதை மட்டும்தான் கண்டேன். ஒரு கணம் என் மனதில் எதுவுமே இல்லை. என்ன நடந்தது என்பது பொழுதுவிடிவது போல மெல்லத்தான் தெளிவாகியது. ஆபீஸ¤க்கு நேரமாகிவிடுமே என்ற எண்ணமும் கையில் வலியும் சேர்ந்தே எழுந்தன….”

இது ஒரு கதையின் தொடக்கமாக அமையலாம். வேறுபாட்டை கவனித்திருப்பீர்கள். என்னென்ன சிறப்பம்சம்ங்கள் இரண்டாவது சித்தரிப்பில் உள்ளன?

முக்கியமாக இரண்டு. 1. காட்சி விவரிப்பு 2. உள்ள விவரிப்பு.

”காலையில் நெடுஞ்சாலையில் யாருமே இல்லை. சன்னமான மழை ஒரு பாலிதீன் திரை போல கரிய தார்பரப்பை மூடியிருந்தது. கார்களின் ஹெட்லைட் ஒளிகள் நீரின் அடியில்தெரிவதுபோல கலங்கி தெரிந்து தாண்டி மறைந்துகொண்டிருந்தன” — இது காட்சி விவரிப்பு. துல்லியமான தகவல்கள் மூலம் அந்த சாலையை அப்படியே வாசகனின் கற்பனையில் எழுப்ப முயலப்பட்டுள்ளது.

இந்த காட்சி விவரிப்பில் இரு கூறுகள் உள்ளன. அ.. தகவல், ஆ. உவமை முதலிய அணிகள்

”காலையில் நெடுஞ்சாலையில் யாருமே இல்லை.” ” வண்டிகள் வரும் ஒலி கேட்கவில்லை. ” இது தகவல். நுட்பமான தகவல்கள் ஒரு கதையை நம் கண்முன் நிறுத்துபவை.

”சன்னமான மழை ஒரு பாலிதீன் திரை போல கரிய தார்பரப்பை மூடியிருந்தது. கார்களின் ஹெட்லைட் ஒளிகள் நீரின் அடியில்தெரிவதுபோல கலங்கி தெரிந்து தாண்டி மறைந்துகொண்டிருந்தன” — இவை இரண்டும் உவமைகள். உவமைகள், உருவகங்கள் மூலம் காட்சிகளை மேலும் துல்லியமாக வாசகனின் கற்பனையில் எழுப்பலாம். இன்றும் சிறந்த கதைகளில் இத்தகைய அணிகளுக்கு பெரிய இடமிருப்பதைக் காணலாம்.

பொதுவாக வழக்கமான உவமைகளை பயன்படுத்தக் கூடாது. அவை எந்த வாசகனில் விளைவையும் ஏற்படுத்தாது. வெறும் அலங்காரமாகவே நின்றுவிடும். புதிய உவமைகள் வாசகனின் கற்பனையை தூண்டும்.

சித்தரிப்பில் இரண்டாவது கூறு ,உள்ளம் செயல்படுவதைச் சொல்வது. பெரும்பாலும் மையக்கதாபாத்திரத்தின் மனத்தை சித்த்ரிப்பது வழக்கம். ஒன்றுக்குமேல் மனங்களை சித்தரிக்க ஆரம்பித்தால் கதையின் ஒருமை இல்லாமலாகும்.

மனதையும் இருவகையில் சித்தரிக்கலாம். அ.நேரடியாக ஆ. அணிகல் மூலம். ”என் மனதில் காலைநேரக் கவலைகள்.” இது நேரடியான உள்ளச் சித்தரிப்பு ”என்ன நடந்தது என்பது பொழுதுவிடிவது போல மெல்லத்தான் தெளிவாகியது. ” இது உவமை அணி.

காட்சி சித்தரிப்பு புற உலகை காட்டுகிறது. உள்ளச் சித்தரிப்பு அக உலகைக் காட்டுகிறது. இவை இரண்டையும் மாறிமாறி தேவைக்கேற்ப பிணைத்து புனையும்போது கதையின் அனுபவம் உண்மையாகவே வாசகனுக்குள் நிகழ்கிறது.

கதையை செறிவாக்குவது

ஏற்கனவே சொன்னது போல சிறுகதை ஒரு திருப்பத்தை அல்லது முத்தாய்ப்பை முன்வைக்கும் வடிவம். அதாவது அது ஒரு புள்ளி மட்டுமே. அந்தப் புள்ளியை வாசக மனதில் நிகழ்த்தவே மொத்தக் கதையும் செயல்படுகிறது

ஆகவே சிறுகதை கச்சிதமாக இருக்கவேண்டியுள்ளது. அப்படி கச்சிதமாக இருப்பதற்கு அடிப்படையான தேவைகள் இரண்டு.

ஒன்று: யாருடைய கதை என்ன சிக்கல் என்பதை தெளிவாக வரையறுப்பது

இரண்டு : அந்தக்கதை ஒரு குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட சூழலில் நடந்து முடிவது.

ஆனால் வாழ்க்கையை நாம் அப்படி ஒரு புள்ளியில் நிறுத்தி விட முடியாது. அது முன்னும் பின்னும் விரிந்து கிடக்கும். அவற்றை சொல்லாமல் பிரச்சினையை சொல்லிவிட முடியாது. சொல்லப்போனால் கதை பரந்து விரிந்துவிடும்.

ஆகவேதான் சிறுகதை வடிவம் கதையை செறிவாக்குகிறது. எப்படி? பல வழிகள் உள்ளன.

ஹரி எதிலும் ஒழுங்கில்லாதவன். பொறுப்பற்றவன்.காரணம் அவன் பணக்காரக் குடும்பத்தில் பிறந்து தன்னிச்சையாக வளர்ந்தவன். நிர்மலா உழைத்து வளர்ச்சி அடைந்தவள். தன்னம்பிக்கை உடையவள். இருவரும் காதலிக்கிறார்கள். ஆனால் நிர்மலாவுக்கு ஹரியின் கட்டுப்பாடில்லாமை பிடிக்கவில்லை. ஹரிக்கு அவள் தன்னை கட்டுப்படுத்த நினைப்பது பிடிக்கவில்லை. பிரிய தீர்மானிக்கிறார்கள். பிரியும் முன் ஓர் இடத்தில் சந்திக்கிறார்கள். அப்போது தெரிகிறது ஒருவருக்கு இன்னொருவர் தேவை என்பது. கட்டுப்பாடான வாழ்க்கையின் நிம்மதியை நிர்மலா ஹரிக்கு காட்டுகிறாள்.கட்டுப்பாடுகளுக்கு அப்பார்பட்ட வாழ்க்கையின் சுதந்திரத்தை அவன் அவளுக்கு காட்டுகிறான். அவர்கள் இணைய முடிவெடுக்கிறார்கள்.

இது ஒரு சிறுகதை என்று வைத்துக் கொள்வோம். ஹரி, நிர்மலா இருவரின் பின்புலத்தை கதைக்குள் சொல்லவேண்டுமல்லவா? அவர்களின் எதிர்பார்ப்பையும் ஏமாற்றத்தையும் சொல்ல வேண்டுமல்லவா? அவர்களுடைய அப்பாஅம்மா , இறந்தகாலம் அனைத்தையும் சொல்லி அவர்கள் பழகிய நாட்களை விவரித்து கதையை எழுதினால் கதை எப்படி இருக்கும்? சிறுகதையின் ஒருமை கைகூடுமா?

அப்படியானால் எப்படி கதையை உருவாக்குவது? அவர்கள் பிரிய தீர்மானித்து ஒரு ஓட்டலில் கடைசியாக சாப்பிடும்போது கதையை தொடங்கலாம். ஏன் பிரிய தீர்மானித்தார்கள் என்பதையெல்லாம் கதையின் ஓட்டத்தினூடாக சொல்லலாம். கதை முடிவில் பிரிய வேண்டாம் என்ற முடிவை எடுக்கிறார்கள். கதைக்களம், காலம் எல்லாம் குறுகியது. இரண்டே கதாபாத்திரங்கள். கதை கச்சிதமாக இருக்கும்.

முன்கதையை மூன்று வழிகளில் சொல்லலாம்.

ஒன்று, பின்னோக்கு உத்தி [Flash Back] ஆனால் பொதுவாக சிறுகதைகளில் இது செயற்கையாகவே தெரிகிறது.

இரண்டு: கதாபாத்திரங்களின் எண்ணங்களில் ஆங்காங்கே நடந்தவற்றைச் சிதறவிடுவது. இதை கட்டுப்பாட்டுடன் செய்ய வேண்டும். கதைநிகழ்ச்சிகளின் ஓட்டம் அறுபட்டு எண்ணங்கள் தனியாக ஓட ஆரம்பிக்கக் கூடாது

மூன்று: உரையாடல்களில் இயல்பாக அவை வந்து சேர்ந்து வாசகன் என்ன நடந்தது என்று ஊகிக்கலாம். இதுவே சிறுகதைக்கு மிகமிக உகந்த வடிவமாகும். ஹெமிங்வே இதில் நிபுணர். தமிழில் அசோகமித்திரன் சுஜாதா இருவரும் திறன் மிக்கவர்கள்.

இவ்வாறு கதையை ஒரு சிறிய இடத்துக்குள் செறிவாக்கி நிறுத்தியபிறகே சிறுகதையைச் சொல்ல வேண்டும்.

Tamil kids Short Story 
Tamil kids Short Story

சிறு கதையின் தொடக்கம்

சிறுகதையின் தொடக்கம் ஒருபோதும் பீடிகையாக இருக்கக் கூடாது. செறிவானபடி கதையை அமைப்பதற்கு சிறந்த வழி கதையை அதன் மையத்திலேயே தொடங்குவதுதான். எதைப்பற்றிய சிறுகதையோ அதையே தொடக்கத்தில் சொல்ல ஆரம்பிக்கலாம்.

மேலே சொன்ன கதையை இப்படி தொடங்கலாம்.

”சரி, நேரமாகிறது எப்போதாவது முடிந்தால் பார்க்கலாம்”என்றாள் நிர்மலா . அவளுக்கு நெஞ்சை அடைத்தது. அதை முகத்தில் காட்டாமலிருக்க பார்வையை வேறுபக்கம் திருப்பினாள். ஹரியின் முகம் சிவந்து கண்கள் ஈரமாக இருந்தன.

நேரடியாக கதைக்குள் குதித்துவிட்டால் திசை திரும்பாமல் கதை முடிவை நோக்கி ஓடும்.

சிறு கதையின் முடிவு

சிறுகதையின் முடிவு அதன் திருப்பத்தில் உள்ளது என்றோம். அது வாசகனை அந்தக் கதையை முற்றிலும் புதிதாக மீண்டும் கற்பனையில் எழுப்பச் செய்யவேண்டும்.

அப்படியானால் அது முடிந்தவரை குறைவான சொற்களில் சொல்லப்பட வேண்டும். எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு வாசகனின் கற்பனைக்கு விடப்பட வேண்டும்.

நல்ல கதைகளில் கடைசி சொற்றொடரில் கதையின் திருப்பம் வெளிப்படுவதைக் காணலாம்.

திருப்பம் வெளிபப்ட்டதுமே கதை முடிவது நல்லது. அதற்குப்பிறகுவரும் ஒவ்வொரு சொல்லும் கதைக்கு பாரமே

kidhours – Tamil kids Short Story , Tamil kids Short Story kidhours,Tamil kids Short Story siruvar kalvi

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.