Tamil Kids Short Essay சிறுவர் கட்டுரை
உலக மக்கள் தொகை பெருக்கம் தற்போதைய சூழலில் ஒரு பெரிய கேள்வியை முன்வைக்கிறது. அனைத்து மனிதனுக்கும் பாதுகாப்பான உணவு என்ற வாசகம் நிறைவேறுமா? என்பதே அது. மனித இனத்தின் பெருக்கம், மிக அதிகமான விவசாயம் மற்றும் காடுகளின் அழிவு, இயற்கை பேரழிவுகள் மற்றும் புதிய நோய்களின் தாக்கம். தற்போதைய சூழலில் 700 கோடி மக்களுக்கும், விலங்கினங்களுக்கும் உணவு என்பது ஒரு குதிரைக்கொம்புதான்.
உணவுப்பற்றாக்குறை அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. அதிக மக்கள் தொகைப்பெருக்கத்தால் உணவு உற்பத்தியை பல மடங்கு பெருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. உணவு உற்பத்தியை பல மடங்கு அதிகரித்தாலும் உற்பத்தி செய்யப்பட்ட உணவின் பெரும் சதவீதம் பயன்படுத்தப்பட வேண்டும். இன்றைய சூழலில் உணவு பதப்படுத்தும் நுட்ப குறைப்பாடுகள் உள்ளதால் சேமிப்பு தளங்களிலே உணவுப் பொருட்கள் அழிகின்றன.
உணவு உற்பத்தியில் உற்பத்தி செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டு தேவையான காலங்களில் பயன்படுத்துவது மிக முக்கியமான ஒன்று. நாம் பயன்படுத்தும் உணவுகள் பல வகையாக பிரிக்கப்படுகின்றன. மிக விரைவாக கெட்டுப்போகும் உணவுகள். உதாரணமாக மீன், இறைச்சி, பால் போன்ற பொருட்கள். இரண்டாவது சற்று நிதானமாக கெட்டுப்போகும் நிலையான உணவுகள்.
உதாரணமாக பருப்பு வகைகள், அரிசி, சீனி(சர்க்கரை) போன்ற பொருட்கள். இத்தகைய உணவுப்பொருட்கள் சாதாரணமாக பல வழிகளில் கெட்டுப்போக வாய்ப்புகள் உள்ளன. அவைகளில் முக்கியமானவை பூச்சிகள், நுண்கிருமிகள், குறிப்பாக பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள். உணவுகளில் உள்ள நொதிகள் மற்றும் ஆக்ஸிகரணிகள் போன்றவை உணவை கெட்டுப்போக செய்கின்றன.
இந்த வகையான உணவுகளும் இத்தகைய பாதிப்புகளால் கெட்டுப்போக வாய்ப்புள்ளது. முற்காலங்களில் நம் முன்னோர்கள் பல உணவு பதப்படுத்தும் முறைகளை பயன்படுத்தியிருக்கிறாா்கள். நெல்லை சேமித்து வைக்க நெல் பத்தாயங்களையும், உணவுகளை பாதுகாக்க பரண்களையும், பரணிகளையும் பயன்படுத்தியதை சாதாரணமாக பாா்த்திருப்போம்.
பூச்சிகளிடமிருந்தும், எலிகளிடமிருந்தும் உணவுகளை பாதுகாக்க பல யுக்திகளை கையாளுவர். எறும்புகளிடமிருந்து உணவை பாதுகாக்க தண்ணீரின் மேல் உணவு பாத்திரங்களை வைத்திருப்பா். உணவுகளை காயவைத்து பாதுகாக்கும் பலமுறைகளை நம்முன்னோா்கள் கையாண்டிருக்கின்றனர். உப்புக்கரைசலை பயன்படுத்தி உணவுகளை பாதுகாக்கும் முறைகளையும் கையாண்டிருக்கின்றனர்.
குறிப்பிட்ட காலங்களில் அதிகமாக கிடைக்கும் உணவுப்பொருள்களை குறிப்பாக மாங்காய், எலுமிச்சை, நெல்லிக்காய் போன்ற பல தாவரம் சார்ந்த பொருள்களை பயன்படுத்தி ஊறுகாய் செய்து பல மாதங்கள் பாதுகாப்பாக சேமித்து வைக்கும் நுட்பங்களை அறிந்திருந்தனர். உணவுகளின் தன்மையும் சத்துகளும், சுவையும் மாறாமல் பல நாட்கள் பாதுகாத்து சேமிக்கும் பல நுணுக்கங்களை நம் முன்னோர்கள் அறிவியல் ஞானமின்றி செய்திருப்பது உண்மையில் ஆச்சரியமானவை.
உணவுகளை நொதிக்க வைத்து பாதுகாக்கும் முறைகளையும் கற்றுத்தேர்ந்திருந்தனா் நம் முன்னோர்கள். மோா், தயிர், இட்லி, தோசை, சில பானங்கள் போன்றவை இதற்கு உதாரணம். உணவுகளை அவித்து பாதுகாக்கும் முறைகளும், காற்றுபுகா பரணிகளில் பாதுகாத்து வைப்பது, பதன பொருள்களை பயன்படுத்தி உணவுகளை பாதுகாப்பது போன்ற கலைகளை முன்னோா் பின்பற்றியிருப்பது தற்போதைய விஞ்ஞானிகளையும் மூக்கில் விரல் வைக்கத்தான் செய்துள்ளது.
இத்தகைய முறைகள் தான் தற்போதைய நவீன உணவு பதப்படுத்தும் தொழில் நுட்பங்களுக்கு அடிப்படை. தற்போதைய பல பாதுகாப்பு அம்சங்களில் முதலானது நுண்ணுயிர்களிடமிருந்து நீக்கி காப்பது. இது சாத்தியமா என்றால் 100 சதவீதம் முடியாதது தான். நுண்கிருமிகள் இல்லாத இடங்கள் இல்லை. எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கும் நுண்கிருமிகளிடமிருந்து பாதுகாப்பது சாத்தியமில்லை தான். இருப்பினும் சில நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறது.
அலுமினிய உறைகளில் உணவுகளை பாதுகாப்பது, காற்று புகா பாத்திரங்களில் உணவுப் பதாா்த்தங்களை பாதுகாத்து வைப்பது போன்றவை சில உதாரணங்கள். குளிர்பானங்களை பாட்டில்களில் பாதுகாத்து வைப்பதும் இதற்கு உதாரணம்தான். குளிா்பானங்களில் கரியமிலவாயுவை அடைத்து வைப்பதும், கொஞ்சம் பூச்சிக்கொல்லி மருந்துகளை இடுவதும் இந்த பாக்டீரியாவிடமிருந்து பானங்களை காப்பாற்றி கொள்ளத்தான்.
உணவை காயவைத்து பாதுகாக்கும் முறையும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. உணவில் உள்ள ஈரப்பதம் தான் நுண்கிருமிகள் அந்த உணவில் உற்பத்தியாக காரணமாகிறது. ஈரப்பதத்தை முழுவதும் அகற்றிவிட்டால் அதிக நாள்கள் அந்த உணவை பாதுகாத்து பயன்படுத்த இயலும். உலர் திராட்சை, கருவாடு, மாசி தட்டை, பப்படம், வடகம் போன்றவை இதற்கு உதாரணம். வெப்பத்தை பயன்படுத்தி உணவை பாதுகாக்கும் முறைகள் சாதாரணமாக பயன்படுத்தப்படுகிறது.
பாலை பதப்படுத்தும் முறை இந்த முறையில்தான் பாக்கெட் பாலில் பாக்டீரியாக்கள் அழிக்கப்படுகின்றன. பின் இதை குளிா்சாதனப்பெட்டியில் பாதுகாக்கப்படுகிறது. உணவுகளை வேகவைத்து பாதுகாக்கும் முறையும் இதில் அடங்கும். இதனால் உணவிலுள்ள நுண்கிருமிகளும், உணவை பாதிக்கும் நொதிகளும் அழிக்கப்படுகிறது. இதனால் உணவு பாதுகாக்கப்படுகிறது. குறைந்த வெப்பநிலையில் உணவைப் பாதுகாக்கும் முறைகளும் நடைமுறையில் உள்ளது.
குளிா்சாதனப்பெட்டிகளில் உணவை பாதுகாப்பது இதனால் உணவில் உள்ள பாக்டீரியாக்கள் வளராமலும், இனப்பெருக்கம் செய்யாமலும் இருப்பதால் உணவு பாதிப்பின்றி காக்கப்படுகிறது. மிக குறைந்த வெப்பநிலையில் மிக எளிதாக கெட்டுப்போகும் உணவுகள் பாதுகாக்கப்படுகின்றன.
மீன், இறைச்சி போன்ற உணவுப் பொருட்கள் இம்முறையில் பாதுகாக்கப்படுகின்றன. உணவு பாதுகாக்கும் முறைகள் பல உகந்த தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டாலும் சிலா் பல கேடு விளைவிக்கும் நுட்பங்களை பயன்படுத்துவது பல உடல் உபாதைகளை தற்போது ஏற்படுத்தி வருகிறது.
ஆப்பிள் பழங்களில் பூச்சிகள் தாக்காத வண்ணமும், நீா் சத்து குறையாமல் இருப்பதற்கும், பளபள என்றிருப்பதற்கும், மனிதா்களுக்கு ஒவ்வாத பல மெழுகு பொருள்களால் ஆப்பிள்கள் பாலீஷ் செய்யப்படுகிறது. பாலில் யூரியா கலப்பதும், குளிா்பானங்களில் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்துவதும், விரும்பத்தகாத பதனப்பொருள்களை பல உணவுகளில் பயன்படுத்துவதும், ஆண்டிபாயாட்டிக்குகளை உணவில் பயன்படுத்துவது போன்ற பல செயல்களும், தற்போது பல உடல் உபாதைகளை மனிதா்களுக்கு ஏற்படுத்தி வருவது வேதனைக்குரியது.
kidhours – Tamil Kids Short Essay , Tamil Kids Short Essay update
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.