World’s Oldest Fire Stone சிறுவர்களுக்கான உலக செய்திகள்
இந்த பிரபஞ்சம் உருவானதாய் கூறப்படும் நாள் முதல் இன்று வரை எத்தனையோ மாற்றங்களுக்கு உள்ளாகித் தான் வந்திருக்கிறது. தற்போது ஏற்பட்டிருக்கும் அறிவியல் முன்னேற்றத்தின் துணை கொண்டு பூமியி்ன் தோற்றம் குறித்தும், அதில் காலப் போக்கில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் குறித்தும் விஞ்ஞானிகள் ஓரளவு கணித்தும் வருகிறார்கள்.
ஆனால் எதையுமே அறுதியிட்டுக் கூற முடியாது. ஆனால் இப்போது விஞ்ஞானிகள் கையில் கிடைத்திருக்கும் ஒரு விண்கல் ஓரளவு பூமியின் ஜாதகத்தை கணிக்க உதவக் கூடும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். அப்படி என்ன ஸ்பெஷல் அந்த விண்கல்லில் என்கிறீர்களா? விபரங்களை பார்க்கலாம்.
பூமியின் தென்துருவமான அண்டார்டிகா மனிதர்கள் வாழ முடியாத அளவிற்கு மிகவும் குளிரான பிரதேசமாகும். மனிதர்கள் வாழ முடியாத பகுதி என்றாலும், அந்தப் பகுதியில் பல்வேறு நாட்டு விஞ்ஞானிகளும் புவியின் தன்மை மற்றும் மாற்றங்கள் குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதிலும், குறிப்பாக அண்டார்டிகா பகுதியில் கிடைக்கும் விண்கற்கள் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக்கு மிகவும் பயனளிக்கிறது.
அண்டார்டிகா பகுதியில் இதுவரை 600க்கும் மேற்பட்ட விண்கற்கள் கிடைத்துள்ளன. அண்டார்டிகா – ஒரு கடுமையான குளிர் பிரதேசம் ஆகும். அது மனிதர்கள் வாழ்வதற்கான ஒரு சிறந்த இடமாக இல்லாவிட்டாலும் கூட, விண்கற்களுக்கு மிகவும் ஏதுவான ஒரு இடமாக திகழ்கிறது.
அதற்கு காரணம் அங்கிருக்கும் சீதோஷ்ண நிலை தான். அண்டார்டிகாவின் வறண்ட காலநிலையானது பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் போது, விண்கற்கள் எதிர்கொள்ளும் வானிலையின் அளவை குறைக்கிறது.
ஆகையால், விண்கற்கள் வந்து சேர்வதற்கான சிறந்த இடமாக அண்டார்டிகா உள்ளது. பெரும்பாலான விண்கற்கள் கருப்பு நிறத்தில் இருப்பதால், பனிமூட்டமான இடங்களில் மற்றும் ஐஸ் பாறைகளில் இருந்து அவற்றை கண்டுபிடிப்பது மிகவும் எளிமையான காரியம் ஆகும்.
அப்படி புளூ ஐஸ் பகுதி எனப்படும் பெல்ஜியம் பிரின்சஸ் எலிசபெத் அண்டார்டிகா பகுதியில் தற்போது 5 புதிய விண்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு கல் 7 கிலோ எடையில் உள்ளது. இதுவரை கிடைத்த விண்கற்களிலேயே இது தான் பெரிய கல் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக விரிவாக விளக்கம் அளித்துள்ளார் மரியா ஷோய்ன் பேச்லர் என்ற விஞ்ஞானி. இவர் சுவிட்சர்லாந்தின் ஜூரிச் பல்கலைகழகத்தில் பூமியியல் துறை பேராசியராகவும், அண்டார்டிகா ஆராய்சிக் குழு உறுப்பினராகவும் இருக்கிறார். “தற்போது 7 கிலோ அளவில் கிடைத்துள்ள இது மிகவும் பழமையான விண்கல்.
இது பூமி உருவாவதற்கு காரணமாக இருந்த முக்கிய காரணிகளுள் ஒன்றாக இருக்கலாம் எனவும் கருதுகிறோம். இந்த கல் ஆராய்சிக்கு உட்படுத்தப்பட்டால் பூமியின் தோற்றம் குறி்த்த அதிகாரப்பூர்வ உண்மைகள் கூட கிடைக்கலாம்.
ஏனென்றால் பூமி தோன்றியதாய் கருதப்படும் 450 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தை சேர்ந்த கல்லாக இது இருக்க வாய்ப்பு உள்ளது”- இவ்வாறு மரியா ஷோய்ன் கூறியுள்ளார். பூமி தொடர்பான ஆராய்ச்சிகளும், ஆச்சரியங்களும் எப்போது முடிவுக்கு வருமோ?…
Kidhours – World’s Oldest Fire Stone
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.