Tamil Kids News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
வரலாறு காணாத காலத்திருந்தே திராட்சை மனிதனால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மத்தியத் தரைக்கடல் நாடுகளில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திராட்சை சாற்றிலிருந்து ஒயின் தயாரிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. பெரும்பாலான திராட்சைகள், ஐரோப்பியத் திராட்சைக் கொடிச் சிற்றினமான விட்டிஸ் வினிபேரா (Vitis vinifera) என்பதில் இருந்து கிடைக்கிறது.
இது நடுநிலக்கடல் பகுதி மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது. அனைத்து வகை திராட்சைகளும் அப்படியே உண்ணத்தக்கவை. அதில் ஒரு சில வகைகள் உலர் திராட்சை செய்யவும். சாறு எடுக்கவும், பழக்கூழ் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பான்மையானவை ஒயின் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
அதன் சக்கைகள் உரம், அசிட்டிக் அமிலம் எண்ணெய் மற்றும் பல பொருள்களை தயாரிக்க உபயோகப்படுத்தப்படுகிறது. மேலும் திராட்சைகள் கொடுக்கும் ஆரோக்கிய நன்மைகளும் ஏராளம். உலகில் பலவிதமான திராட்சைகள் விற்கப்படுகின்றன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விலையில் இருக்கும். ஆனால், அவை லட்சக்கணக்கில் இருக்கும் என்று எப்போதாவது எண்ணி பார்த்திருக்கிறீர்களா?.
ரூபி ரோமன் திராட்சை என்று அழைக்கப்படும் இந்த வகை குறைந்த அமிலத்தன்மையுடன் மிகவும் சுவையாகவும், அதிக சர்க்கரை கொண்டதாகவும் அறியப்படுகிறது.
இதன் காரணமாகவே இதன் விலை மிக அதிகம். பிங் பாங் பந்தின் அளவிற்கு நெருக்கமான இந்த சிவப்பு நிற திராட்சை மிகவும் அரிதான வகை ஆகும். இந்த வகையின் ஒவ்வொரு திராட்சையும் 20 கிராமுக்கு மேல் எடையுள்ளதாக இருக்கும். இந்த வகை திராட்சை 2019 ஆம் ஆண்டில் ஜப்பானில் சாதனை விலைக்கு ஏலம் விடப்பட்டதால், இதனை திராட்சைகளின் ரோல்ஸ் ராய்ஸ் என்று அழைத்தனர்.
இந்துஸ்தான் டைம்ஸ் அறிக்கையின்படி, இந்த சிவப்பு நிற திராட்சை 2008 ஆம் ஆண்டில் புதிய பிரீமியம் வகை பழங்களாக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அவை பிரத்தியேகமாக வளர்க்கப்பட்டு ஜப்பானின் இஷிகாவா மாகாணத்தில் விற்கப்படுகின்றன.
ஒவ்வொரு திராட்சையும் அதன் தரத்திற்கு உத்தரவாதம் அளிக்க முழுமையாக சோதிக்கப்படுகிறது. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறைய சான்றிதழ் முத்திரையுடன் இந்த பழங்கள் சந்தைக்கு வருகின்றன. விலையுயர்ந்த பழங்கள் ஜப்பானில் ஒரு ஆடம்பர பழமாகவே விற்கப்படுகிறது. அவை பரிசாக அல்லது வணிகங்களால் விளம்பர நோக்கங்களுக்காக வாங்கப்படுகின்றன.
2019 ஆம் ஆண்டில், இந்த சிவப்பு திராட்சைகளில் ஒரு கொத்து 1.2 மில்லியன் யென்னுக்கு (அதாவது இந்திய விலையில் ரூ.7,55,000 க்கும் அதிகமாக) விற்கப்பட்டது. அதாவது ஒரே ஒரு திராட்சை பழத்தின் விலை சுமார் ரூ.35,000 ஆகும்.
சமீபத்தில் ஹயாகுரகுசோ என்ற நிறுவனம் ஒரு மொத்த வியாபாரி மூலம் பல கொத்து திராட்சைகளை கனாசாவாவின் மத்திய முழு சந்தையில் ஏலம் எடுத்தது. ஒரு தசாப்தத்திற்கு முன்னர் இந்த வகை திராட்சை சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து மிகவும் விலையுயர்ந்த விற்பனையை கண்டு வருகிறது. அப்போதிருந்தே, திராட்சை மிகவும் பிரபலமாக உள்ளது. அவற்றின் தேவை மற்றும் தனித்தன்மை உயர்ந்ததாக இருக்க ஒரு சில கொத்து பழங்கள் மட்டுமே விற்கப்படுகின்றன.
அதிக விலைக்கு விற்கப்படுவது வெறும் ஜப்பானிய திராட்சை பழங்கள் மட்டுமல்ல. உலகின் மிக விலையுயர்ந்த ஜப்பானிய மியாசாகி மாம்பழங்களை மத்திய பிரதேச தம்பதியினர் தங்கள் பழத்தோட்டத்தில் வளர்த்து வருகின்றனர். அவர்கள் வளர்க்கும் இரண்டு மியாசாகி மா மரங்களை பாதுகாக்க நான்கு பாதுகாப்புப் பணியாளர்களையும் ஆறு நாய்களையும் பணியில் அமர்த்திய சம்பவம் இந்தியாவில் வைரலாக பேசப்பட்டது.
ஜபல்பூரில் வசிக்கும் சங்கல்ப் பரிஹாஸ் என்பவருக்கு சென்னை ரயிலில் பயணம் செய்யும் போது ஒரு நபர் சில மா மரக்கன்றுகளை வழங்கியிருந்தார்.
அவரும் அவரது மனைவி ராணியும் இரண்டு மரக்கன்றுகளையும் தங்கள் பழத்தோட்டத்தில் நட்டனர். அவை இந்தியாவில் கிடைக்கும் சாதாரண மா கன்றுகள் தான் என்று எண்ணி நட்டு வைத்துள்ளனர். பின்னர் மரங்கள் நன்றாக வளர்ந்த பிறகு தான் தெரிய வந்தது. அந்த மாம்பழங்கள் மஞ்சள் அல்லது பச்சை நிறமாக இல்லாமல் ரூபி சிவப்பு நிறத்தில் இருந்தபோது அவர்களின் ஆச்சரியத்திற்கு எல்லையே இல்லாமல் இருந்தது.
முதலில், தம்பதியினர் கருஞ்சிவப்பு மாம்பழங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஆனால் அரிய பழத்தைப் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்த பின்னர்தான் தம்பதியினர் இனிமையான ஜாக்பாட்டைத் அடைந்தனர். சர்வதேச மற்றும் கவர்ச்சியான பழமான ஜப்பானிய மியாசாகி மாம்பழங்கள் சந்தையில் அதிக தேவை உள்ள மாம்பழங்களின் விலையுயர்ந்த வகைகளில் ஒன்றாகும். கடந்த ஆண்டு, அவர்கள் சர்வதேச சந்தையில் ஒரு கிலோ மாம்பழங்களை ரூ.2.70 லட்சத்திற்கு விற்றனர்.
kidhours – tamil kids news
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.