People living underground பொது அறிவு செய்திகள்
ஆஸ்திரேலியாவில் பூமிக்கடியில் ஒரு குட்டி நகரமே உருவாக்கப்பட்டு, அங்கு நூற்றுக்கணக்கானோர் வசித்து வருவது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
எதிரிகளிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள குழியோ, குகையோ உருவாக்கி அதில் மறைந்து கொள்வது விலங்குகளின் குணம். அவ்வாறு விலங்குகள் வாழ்ந்த இடங்களை, மழை, புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள கைப்பற்றிக் கொண்டான் ஆதிமனிதன்.
விலங்குகள் தங்களின் தேவைக்கேற்ப உருவாக்கிய குகையை, மனிதன் தனது வசதிக்கேற்ப பெரிதாக்கி வாழ்ந்தான் என்கிறது வரலாறு.
போர் சமயங்களில் தனது மனைவி, மக்களையும், பொன், பொருட்களையும் குகை தோண்டி மறைத்து வைத்தார்கள் மன்னர்கள். போரில் தோல்வியடைந்துவிட்டால், எதிரி அரசனிடம் இருந்து தனது உயிரை பாதுகாக்க, பல மன்னர்கள் ஒழிந்து கொண்ட இடமும் பாதாளக் குகைகள்தான்.
இவ்வாறு, கற்கால மனிதன் தொடங்கி, கடந்த நூற்றாண்டுகளில் நாட்டை ஆட்சி செய்த மன்னர்கள் வரை பூமிக்கு அடியில் வாழ்ந்தவர்கள் ஏராளம். அப்படித்தான், தெற்கு ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள ஹூப்பர் பெடியில் பூமிக்கு அடியில் உருவாக்கப்பட்டுள்ளது, ஒரு குட்டி நகரம்.
உலக அளவில் ஓபல் எனப்படும் அமுதக்கல் அதிகம் கிடைக்கும் இடங்களில் ஒன்று, ஆஸ்திரேலியாவின் ஹூப்பர் பெடி.
கண்ணாடி போன்றும், சிவப்பு, பச்சை, நீலம் என பல வண்ணங்களையும் கொண்ட இந்த அமுதக்கல்லுக்கு, சர்வதேச சந்தையில் விலை அதிகம்.
19ஆம் நூற்றாண்டில் ஹூப்பர் பெடியில் கிடைத்த அமுதக்கல்லை துருப்பாக வைத்துக் கொண்டு, அங்கு சுரங்கம் தோண்டினார் இளைஞர் ஒருவர். தோண்ட தோண்ட அமுதக்கல் கிடைப்பதை அறிந்து, அங்கு குவிந்து விட்டார்கள் ஆயிரக்கணக்கான சுரங்கத் தொழிலாளர்கள்.
எங்கு திரும்பினாலும் மலைக் குன்றுகளாகவும், பாலைவனம் போன்றும் காட்சியளிக்கும் அந்த பகுதியில், வாழ்வதற்கு ஏற்ற இடம் எதுவுமில்லை. கடுமையான வெப்பம், வடக்கு திசையில் இருந்து வீசும் அனல் காற்று, இரவு நேரத்தில் கடும் குளிர் என இரவும் பகலும் அல்லல்பட்டார்கள் சுரங்கத் தொழிலாளர்கள்.
அப்போது அவர்களுக்கு தோன்றியதுதான், அமுதக்கல் தோண்டியெடுத்த குகைகளையே வாழ்விடமாக வடிவமைத்துக் கொள்ளும் யோசனை. அமுதக்கல் தோண்டியெடுத்த குகைகளை, படுக்கையறை, வரவேற்பறை, சமையலறை என அழகழகாக மாற்றி வைத்திருக்கிறார்கள் அந்த மக்கள்.
இதன் தொடர்ச்சியாக, தேவாலயங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், அலுவலகங்கள் என உருவ மாற்றம் அடைந்தன, அமுதக்கல் தோண்டியெடுத்த அந்த குகைகள்.
வீடுகள், தேவாலயங்கள் என ஒவ்வொன்றிலும் தங்களது கைவண்ணத்தை காட்டத் தவறவில்லை இந்த நகர மக்கள். மெல்லிய சிவப்பு நிற தூசியால் மூடப்பட்டிருக்கும் இந்த நகரத்தை, தூரத்தில் இருந்து பார்த்தால், ஒரு சில வீடுகளின் கூரைகள் மட்டுமே வெளியே தலைநீட்டிக் கொண்டிருக்கும்.
உடல் முழுவதையும் மண்ணுக்குள் புதைத்துக் கொண்ட இந்த வீடுகளில், ஆரம்ப நாட்களில் எரிபொருட்கள் நிரப்பிய விளக்குகளையே பயன்படுத்தி வந்தார்கள் அங்கு வாழ்ந்த மக்கள்.
நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால், ஆஸ்திரேலியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் உருவாகியிருக்கிறது பிரமாண்ட சூரிய மின்சக்தி ஆலை. கொளுத்தும் வெயிலில் கிடைக்கும் சக்தியை அப்படியே மின்சாரமாக மாற்றி, குகை வீடுகள் முழுவதும் வெளிச்சமூட்டுகின்றன அந்த விளக்குகள்.
50 டிகிரி செல்சியசுக்கு குறைவில்லாமல் வெப்பநிலை இருப்பதால், அவர்களுக்கு எப்போதும் மின்சாரத்திற்கு பஞ்சமில்லை. மழைக்காலங்களில் வடக்கு திசையில் இருந்து வீசும் கடும் காற்றை, காற்றாலைகள் மூலம் மின்சாரமாக்கி விடுவதால், அப்போதும் அவர்களுக்கு மின் தடை என்ற பேச்சுக்கே இடமில்லை.
பல ஆண்டுகளாக அமுதக்கல் மூலம் சுரங்கத் தொழிலாளர்களை ஈர்த்த இந்த நகரம், தற்போது தன்னிறைவுத் திறன் காரணமாக, பல தரப்பினரையும் கவர்ந்துள்ளது. இந்த நகரத்தின் தற்போது மக்கள் தொகை சுமார் 4 ஆயிரம் என்றால், அதில் முக்கால்வாசி பேர் வசிப்பது, இந்த குகை வீடுகளில்தான்.
நெருக்கடி மிகுந்த பெரு நகரங்களில் வாழ்ந்த பலர், இங்கு படையெடுப்பதால், இன்னும் சில ஆண்டுகளில் இதுவும் நிலத்தடி பெருநகரமாக மாறும் என்பது அங்குள்ளவர்களின் நம்பிக்கை.
Kidhours – People living underground , People Living Underground in a city , People Living Underground village
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.