Continually People Dying சிறுவர்களுக்கான உலக செய்திகள்
பிடித்த உணவை இருக்கும் இடத்தில் இருந்தே வரவைத்து உண்ணும் தொழில்நுட்ப யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும்.
அதே நேரத்தில்தான் உலகின் மற்றொரு பக்கத்தில் ஒரு வேளை உணவும் ஒரு குவலை தண்ணீரும் இன்றி கொத்துக் கொத்தாக மக்கள் மடிந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்திய பெருங்கடலின் மேற்கு கரையோரம், ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள நாடு சோமாலியா. 2015-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி ஒன்றரை கோடி பேர் வாழ்கின்றனர்.
தென் இந்தியாவில் உள்ள 5 மாநிலங்களை ஒன்றிணைத்தால் கிடைக்கும் பரப்பளவே உள்ள சிறியநாடுதான். ஒரு காலத்தில் அண்டை நாடுகளுக்கும் உணவளித்த சோமாலிய மக்கள், இன்று ஒரு வேளை உணவுக்காக கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைப் போல, இரண்டு பருவ மழையையே பெரும்பாலும் நம்பி இருக்கிறது சோமாலியா. தமிழ்நாட்டில் ஒரு பருவ மழை பொய்த்துப் போனால் கூட, கோடை காலத்தில் காலி குடங்களுடன் தண்ணீருக்கு அலையும் நிலையை கண்டிருப்போம்.
ஆனால், ஒன்றல்ல இரண்டல்ல, 4 வது ஆண்டாக பருவமழை ஏமாற்றினால் என்ன நேரும் என்பதற்கான சாட்சியே சோமாலியா.
அந்நாட்டின் தெற்கு பகுதியில் மட்டும் பெரிய ஆறுகள் இருப்பதால், வடக்கு பகுதி முழுவதும் நிலத்தடி நீரையே நம்பி உள்ளது. மழை பெய்யாததால் நிலத்தடி நீர் வற்றி, வடக்குப்பகுதியில் வறட்சி தொடங்கியதால்,
அப்பகுதியின் பிரதான தொழிலான கால்நடை வளர்ப்பு சிக்கலை சந்தித்தது. மனிதர்களுக்கே தண்ணீர் கிடைப்பது குதிரைக் கொம்பாக மாறிப்போன நிலையில், மேய்ச்சலுக்கு நிலமும் இல்லாமல், தண்ணீரும் இல்லாமல் கால்நடைகள் கொத்துக் கொத்தாக செத்து மடிந்தன.
ஆங்காங்கே கிடக்கும் கால்நடைகளின் எலும்புக் கூடுகளே வறட்சியின் சாட்சி.
இதுவே பஞ்சத்தின் தொடக்கம் என்கிறார்கள் நிபுணர்கள். ஏனெனில், சோமாலியர்களின் உணவில் முக்கியமானது ஆடு, மாடு மற்றும் கோழி இறைச்சிதான்.
வறட்சியின் தாண்டவத்தில் பெரும்பாலான கால்நடைகள் இறந்ததால், உணவுப் பஞ்சம் அங்கே தலைவரித்தாடுகிறது. பருவநிலை மாற்றத்தால், மழையின்றி ஆறுகள் வறண்டதால்,
தெற்குப் பகுதியில் முக்கிய பயிர்களான கரும்பு, சோளம் போன்றவற்றின் உற்பத்தியும் நின்றுபோனது. இதனால், தெற்குப் பகுதியையும் பீடித்தது பஞ்சம்.
சோமாலியாவின் 90 சதவீத மக்கள் அபாயகட்டத்தில் இருப்பதாக ஐநா தெரிவித்துள்ளது.
உணவு மற்றும் தண்ணீருக்காக ஒவ்வொருவரும், ஒவ்வொரு நாளும் போராடிவருகின்றனர். கடும் வறட்சியால் செய்வதற்கு வேலை இல்லை.சோமாலிய மக்கள் பெரும்பாலானோரின் தற்போதைய ஒரே வேலையாக இருப்பது, உணவையும், தண்ணீரையும் தேடி அலைவதுதான்.
கண் முன்பே பிஞ்சுக் குழந்தை பசியால் துடிதுடித்து உயிரிழந்த போதும், அதை தடுக்க ஒன்றும் செய்ய முடியாமல் கையறு நிலையில் கதறுகின்றனர் சோமாலிய பெற்றோர்.
லட்சக்கணக்கான மக்கள் பல நாட்களாக உணவின்றி தவித்து வருவதாகவும், கடும் பசியால் குழந்தைகள் அதிகளவில் உயிரிழப்பதாகவும் ஐநா குறிப்பிட்டுள்ளது. குழந்தைகளைக் காப்பாற்ற கிடைக்கும் உணவை அவர்களுக்கு மட்டும் கொடுத்துவிட்டு பெற்றோர் பல நாள் பட்டினியில் தவிக்கின்றனர்.
இங்கு, ஒரு நாளில், ஒரு வேளை உணவும், தண்ணீரும் கிடைப்பதே கடினமான சூழலாகிவிட்டது. கண்ணுக்கு எட்டியவரை பாலைவனம்போல காட்சியளிக்கும் கிராமங்களைவிட்டு, உயிரை தக்கவைக்க முடியாதா என்ற ஏக்கத்தில்,
லட்சக்கணக்கான மக்கள் கூட்டம் கூட்டமாக நகர்ப்பகுதிகளை நோக்கி புலம் பெயர்ந்து வருகின்றனர்.
அவர்கள் நகர்ந்த சிறிது நேரத்தில், அங்கு வந்த கழுதைப் புலிகள் மகளின் உடலை இழுத்துச் செல்லும் கொடுமையை கண்டதாக கூறும் தாயின் துயரத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை. அசாதரண சூழலால் சோமாலியாவில்,
எங்கு எவ்வளவு மக்கள் உயிரிழக்கின்றனர் என்பதை அறிவதில் கூட சிக்கல் நிலவுகிறது.
பசி, பஞ்சம், பட்டினி என்பதுதான் இன்றைய சோமாலிய நாட்டை வரையறுக்கும் சொற்களாக இருக்கின்றன. 2011-ம் ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்தில் உணவு, தண்ணீரின்றி இரண்டரை லட்சம் மக்கள் உயிரிழந்தனர்.
இதைவிட, மிகக் கொடுமையான மற்றொரு பேரழிவை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது சோமாலியா.
Kidhours – Continually People Dying , Continually People Dying in Africa , Continually People Dying news
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.