World Most Polluted Countries பொது அறிவு செய்திகள்
உலகின் மிகவும் மாசடைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 8வது இடத்தில் உள்ளது. இதை காற்றின் தரத்தை வைத்து நிர்ணயித்து வெளியிட்டிருக்கின்றது ஸ்விஸ் கம்பெனியான ஐ கியூ ஏர் என்ற காற்றின் தரத்தை நிர்ணயிக்கும் தனியார் நிறுவனம்.
பட்டியலில் ஈராக் 2வது இடத்திலும், பாகிஸ்தான் 3வது இடத்திலும், வங்கதேசம் 5வது இடத்திலும் உள்ளன. மத்திய மற்றும் தெற்காசியாவில் மிகவும் மாசுபட்ட 15 நகரங்களில் 12 நகரங்கள் இந்தியாவில் அமைந்துள்ளதாக அதிர்ச்சியான முடிவுகளை ஆய்வுகள் கூறுகின்றன.
காற்றில் பி.எம்.2.5 என்ற அளவுகோளை கொண்டு 2022 ஆம் ஆண்டு சோதித்தபோது, காற்றுமாசு PM 2.5 அளவு 53.3 ஆக இருந்தது. இது உலக சுகாதார அமைப்பின் (WHO) நிர்ணயித்ததை விட பன்மடங்கு அதிகம். குறிப்பாக, ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள பிவாடி இந்தியாவின் மிகவும் மாசுபட்ட நகரமாகவும், மத்திய மற்றும் தெற்காசியாவில் இரண்டாவது மாசுபட்ட நகரமாகவும் இருக்கிறது. இங்கு ஆண்டுக்கு PM 2.5 அளவு 92.7 ஆகும்.
அதற்கு அடுத்தபடியாக பீகாரில் உள்ள தர்பங்கா மற்றும் அசோபூர் ஆகியவை முறையே 90.3 மற்றும் 90.2 நிலைகளுடன் அளவில் மோசமாக உள்ளன. இதைத்தொடர்ந்து பாட்னா, காஜியாபாத், தருஹேரா, சாப்ரா, முசாபர்நகர், கிரேட்டர் நொய்டா, பகதூர்கர் மற்றும் ஃபரிதாபாத் ஆகிய பிராந்தியங்கள் மிகவும் மாசுபட்ட 15 நகரங்களாக பட்டியலில் இடம்பெறுகின்றன.
காற்று மாசிற்கு பல்வேறு காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன. குறிப்பாக, வாகன உமிழ்வுகள், தொழில்துறை மாசுக்கள், கட்டுமான தூசி மற்றும் பயிர் எரிப்பு போன்ற விவசாய நடைமுறைகள் பிரதான காரணங்களாக பார்க்கப்படுகின்றன. இந்தியாவின் மக்கள்தொகையும் முக்கிய காரணம்.
காற்று மாசுபாட்டைச் சமாளிப்பதற்கான அரசியல் விருப்பமின்மை பெரும்பாலும் கவனிக்கப்படாத மற்றொரு தடையாகவே பார்க்கப்படுகிறது. பல அரசியல்வாதிகள் கடுமையான விதிமுறைகளை விதித்தால் அதனால் ஏற்படக்கூடிய பொருளாதார தாக்கங்களுக்காக செயல்பட தயங்குகின்றனர் என கூறுகிறார்கள் நிபுணர்கள்.
தொழில்துறை முதல் சாலை போக்குவரத்து வரை காற்று மாசுபாட்டின் அளவுகளை இலக்காகக் கொண்டு அதை குறைக்க பல்வேறு விதிமுறைகளை இந்தியா செயல்படுத்தியிருந்தாலும் அது போதுமானதாக கருதப்படவில்லை. இதனால் காற்றின் தரம், பொது சுகாதாரப் பேரழிவு அளவிற்கு மிகவும் மோசமானதாக மாறியிருக்கிறது.
இந்தியாவின் தேசிய சுத்தமான காற்றுத் திட்டம் என்றழைக்கப்படும் (NCAP) செயல்படுத்தப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இத்திட்டம் தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நகரங்கள் காற்று மாசுபாட்டைக் குறைத்து சிறிதளவு முன்னேறியுள்ளது ஆறுதல் தரும் செய்தியாக இருந்தாலும், சென்னை மற்றும் மும்பை போன்ற பெருநகரங்களில் காற்று மாசுபாடு மோசமாகிவிட்டது என தரவுகள் தெரிவிக்கின்றன.
Kidhours – World Most Polluted Countries
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.