Volcano Eruption பொது அறிவு செய்திகள்
உலகின் 18வது பெரிய தீவாக, வடக்கு அட்லாண்டிக் கடலில் அமைந்திருக்கிறது ஐஸ்லாந்து நாடு. 300-க்கும் மேற்பட்ட எரிமலைகளை கொண்ட இந்த தீவு நாட்டில், நிலநடுக்கம் ஏற்படுவது என்பது கிட்டத்தட்ட அன்றாட நிகழ்வு என்றே கூறலாம். இருந்தாலும், தொடர் பனிப்பொழிவால், எப்போதும் வெள்ளைப் போர்வை போர்த்தியதுபோல காணப்படும்
மலைக்குன்றுகளையும், பள்ளத் தாக்குகளையும் ரசிப்பதற்காகவே, ஆண்டுதோறும் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஏராளம்.இந்த நிலையில்தான், ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் கடந்த 10 நாட்களில் 10 ஆயிரம் முறைக்கும் மேல் ஏற்பட்ட நிலநடுக்கம், அப்பகுதி மக்களை தற்போது அச்சுறுத்தி வருகிறது.
நிலநடுக்கம் என்பது அங்குள்ள மக்களுக்கு பழகிப்போனதுதான் என்றாலும், கிரிண்டாவிக் பகுதியில் இந்த முறை அது வெளிப்படுத்தும் கோர முகம்தான், மக்கள் அச்சத்தின் உச்சத்தில் இருப்பதற்கு முக்கிய காரணம்… பாளம் பாளமாக வெடித்த சாலைகள், ஏவுகணை தாக்கியதுபோல, விரிசல் அடைந்து காணப்படும் கட்டடங்கள் என மக்கள் வாழ்வதற்கே முடியாத இடமாக மாறி வருகிறது கிரிண்டாவிக் பகுதி.
மறுபுறம் தொடர்ந்து வெடித்துச் சிதறி எரிமலைக் குழம்பை வெளியே கொட்டிக் கொண்டே இருக்கிறது அங்கிருக்கும் ஃபக்ரதல்ஸ்பல் எரிமலை.கட்டடங்கள் ஒரு பக்கம் தொடர்ந்து குலுங்கிக் கொண்டே இருக்கும் நிலையில், மற்றொரு புறம் காற்றில் கலக்கும் எரிமலை சாம்பலால், சுவாசிக்கவும் சிரமப்படுகின்றனர் அப்பகுதி மக்கள்… எனவே, எப்போது வேண்டுமானாலும் எரிமலை பெரிய அளவில் வெடித்துச் சிதறும் என்ற அச்சத்தால், அவரச நிலையை அறிவித்துள்ளது ஐஸ்லாந்து அரசு.
இதைத் தொடர்ந்து, கொந்தளித்துக் கொண்டிருக்கும் எரிமலைக்கு அருகில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பும் வேலைகளை தீவிரமாக்கியுள்ளனர் காவல்துறையினரும், பேரிடர் மேலாண்மை குழுவினரும். அத்துடன், சுற்றுலாப் பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள் ஈடுபட்டிருப்பதால், ஆடிப் போய் இருக்கிறார்கள் அங்குள்ள மக்கள்
Kidhours – Volcano Eruption
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.