Post Space Travel பொது அறிவு செய்திகள்
விண்வெளி ஆராய்ச்சியில் மனிதன் எத்தனையே புதிய புதிய விசயங்களை கண்டுபிடித்திருந்தாலும், அது தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு எப்போதுமே பஞ்சமில்லை. விண்வெளிப் பயணம் எவ்வளவுதான் சுவாரஸ்யம் மிகுந்தது என்றாலும், அந்தப் பயணத்திற்கான ஏற்பாடுகள் மிக முக்கியம். இதுவரை நாம் அதற்கான ஏற்பாடுகளை செய்வது மட்டும்தான் கடினம் என நினைத்துக் கொண்டிருந்தால் அது தவறு. பயணத்திற்குப் பிறகும் விண்வெளி வீரர்கள் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கிறார்கள். அதில் முக்கியமான ஒன்று உடல் சமநிலை மற்றும் நடப்பதற்கு சிரமப்படுதல்.
விண்வெளி வீரர்கள் பல நாட்கள் விண்வெளியில் தங்கி பூமிக்கு திரும்பும்போது, அவர்கள் நடக்க மிகவும் சிரமப்படுகிறார்கள். அல்லது நடக்க மறந்து விடுகிறார்கள். விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பிய பிறகு பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. விஞ்ஞானிகள் இதைப் பற்றி ஆழமான ஆய்வுகளை செய்து வருகிறார்கள். இந்த ஆய்வுகளில், விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பும்போது நடக்க மிகவும் சிரமப்படுவதற்கு சில சிறப்பு காரணங்களைக் கண்டறிந்துள்ளனர். உண்மையில் மனித உடலுக்கு விண்வெளியின் தீவிர நிலைமைகளைத் தாங்கும் திறன் இல்லை. அங்கு, புவிஈர்ப்பு விசை இல்லாதது விண்வெளி வீரர்களின் உடல் நிலையில் நிறைய பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.
குறிப்பாக எலும்புகள் மற்றும் தசைகளில் மிகப்பெரிய விளைவு ஏற்படுகிறது. விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பிய பிறகு, அவர்களை ஒரு ஸ்ட்ரெச்சர் அல்லது நாற்காலியில் சுமந்து செல்வது வழக்கம். அதற்கு இதுவே காரணம். விண்வெளியில் மைக்ரோ ஈர்ப்பு விசையின் வளிமண்டலம் உள்ளது. அதாவது விண்வெளி வீரர்கள் பூமியை விட 89 சதவீதம் குறைவான ஈர்ப்பு விசையில் அங்கு இருப்பார்கள். இதன் காரணமாக அவர்கள் எப்போதும் எடை இல்லாத நிலையை உணர்கிறார்கள். இந்த நிலை சர்வதேச விண்வெளி நிலையத்திலும் ஏற்படுகிறது. அதனால் விண்வெளிக்குச் செல்லும் வீரர்கள் எப்போதுமே மிதந்துதான் செல்லுவார்கள்.
அதனால் புவியீர்ப்பு இல்லாத நிலையில், அவர்களின் தசைகள் மற்றும் எலும்புகள் அதிகம் வேலை செய்ய வேண்டியதில்லை. இந்த நிலைமைகளில், காலப்போக்கில், விண்வெளி வீரர்களின் தசை மற்றும் எலும்பு தனது இயல்பு நிலையை இழக்கத் தொடங்குகிறது. இடுப்பு, கால்கள் மற்றும் முதுகெலும்புகளின் எலும்புகள் பலவீனமடைகின்றன.
கால்சியம் இல்லாததால் அவை மிகவும் பாதிக்கப்படுகின்றன. இந்த நிலையில் வீரர்கள் பூமிக்கு திரும்பும் போது காயமடைய வாய்ப்புகள் அதிகம். எலும்புகளைத் தவிர, கால்களின் தசைகள் மற்றும் உடலின் மற்ற பகுதிகளும் பலவீனமடைகின்றன.
இதனால் பூமிக்குத் திரும்பிய பின் வீரர்கள் நடக்க மிகவும் சிரமப்படுகிறார்கள். மனித உடலில், இதயமும் தசைகளால் ஆனது தான். அதன் வேலை இரத்தத்தை பம்ப் செய்வதாகும். மைக்ரோ கிராவிட்டி சூழலில், இரத்தத்தை பம்ப் செய்ய இதயம் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியதில்லை.
இது காலப்போக்கில் இதய தசையின் அளவையும் வலிமையையும் கூட இழக்கச் செய்கிறது. பூமிக்குத் திரும்பியவுடன் வீரர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக மாறுகிறது. இதனால், பூமிக்கு திரும்பிய உடன் விண்வெளி வீரர்களுக்கு மயக்கம் ஏற்படுவதுடன், பூமியின் ஈர்ப்பு விசையுடன் தங்களை ஈடு செய்து கொள்ள கொஞ்சம் போராட வேண்டியதிருக்கும்.
விண்வெளி வீரர்கள் எதிர்கொள்ளும் மற்றொரு பிரச்சனை நமது சமநிலைப்படுத்தும் திறன், விண்வெளியில் ஈர்ப்பு சார்ந்த மனித உணர்திறன் இழப்பு, விண்வெளி வீரர்களின் மூளை செயல்திறனிலும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் சுமூக இயக்கமின்மை அவர்களக்கு ஏற்படுகிறது. பூமிக்கு திரும்பிய பிறகு உணர்திறன் திரும்பும் போது, உடல் சூடு, குளிர்ச்சி, பசியின்மை, சோர்வு, வாந்தி, தலைவலி, உள்ளிட்ட பிரச்னைகளை வீரர்கள் சந்திக்கிறார்கள்.
பூமிக்கு திரும்பியதும், மூளையும் மற்றும் பிற உடல் உறுப்புகளும் பழைய நிலைக்கு திரும்ப முயற்சி செய்கின்றன. அந்தப் போராட்டம் தான் விண்வெளி வீரர்களுக்கு பல்வேறு உபாதைகளை கொண்டு வருகிறது. இத்தனை சிக்கல்களையும் எதிர்கொண்டால் தான் வெற்றிகரமான விண்வெளிப் பயணம் சாத்தியம்.
Kidhours – Post Space Travel, Post Space Travel experience in tamil
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.