Becoming Unlivable Countries உலக காலநிலை செய்திகள்
ஒவ்வொரு வருடம் நிறைவடையும் போதும், நம்முடைய பூமியில் வெப்பம் அதிகரித்து வருவதை அது நமக்கு நினைவூட்டுகிறது. இதையே நாம் புவி வெப்பமயமாதல் என அழைக்கிறோம். இந்நிலையில் சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கை ஒன்று அனைவரையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. எதிர்காலத்தில் வசிக்கவே முடியாதளவிற்கு அதிக வெப்பம் மிகுந்ததாக மாறப் போகும் பகுதிகளின் பட்டியலை சமீபத்தில் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்காவில் உள்ள பகுதிகள் இந்த வெப்ப அலைகளால் அதிகம் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் வசித்து வந்த மக்கள் குளிர் பிரதேசங்களுக்கு செல்ல தொடங்குவார்கள் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். உண்மையில் இவர்கள் கூறும் கணிப்புகள் யாவும் உண்மையாக மட்டும் இருந்தால், பல மோசமான விளைவுகள் ஏற்படும். பர்கினா ஃபாசோ, மாலி, கத்தார், அருபா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், பெனின், நெதர்லாந்தின் ஆண்டில்ஸ், காம்பியா மற்றும் நைஜீரியா போன்ற நாடுகளை 2070-ம் ஆண்டிற்குள்ளாக கடுமையான வெப்ப அலைகள் முழ்கடிக்கும் அபாயம் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள்.
வெப்பத்தால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் ஏழை நாடுகளில் தான் மிகவும் மோசமாக இருக்கும். இந்த நாடுகளிலிருந்து வெளியேற்றப்படும் பசுமை இல்ல வாயுக்கள் குறைவாகவே இருந்தாலும், இந்தப் பகுதிகள்தான் மோசமாக பாதிக்கப்பட போகின்றன. பணக்கார நாடுகளில் வசிக்கும் மக்களால் வெப்பத்தை சமாளிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
ஆனால் ஏழை நாடுகளில் வசிக்கும் மக்களோ எந்த உதவியுமின்றி இறக்கப் போகிறார்கள் என பீதியை கிளப்புகிறார் அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் மேத்யூ ஹூபர்.
இதிலிருக்கும் இன்னொரு ஆபத்து என்னவென்றால், அதிகப்படியான வெப்பமுள்ள பகுதிகள் விரிவடையும் அபாயமுள்ளது. பூமியின் மேற்பரப்பில் 19 சதவிகிதம் வரையில் இந்த பகுதிகள் விரிவடைய வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதன் காரணமாக 2070-ம் ஆண்டிற்குள் உலக மக்கள்தொகையில் 3.5 பில்லியன் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். மேலும் எதிர்காலத்தில் வரப்போகும் கடுமையான கோடை காலத்திற்கு இந்தியா மற்றும் நைஜீரியாவில் வசிக்கும் மக்கள் அதிக ஆபத்தை சந்திக்கப் போகிறார்கள் எனவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள்.
2100-ம் ஆண்டிற்குள் 3 டிகிரி செல்சியஸ் அளவிற்கு பூமி வெப்பமடையும் என ஆய்வுகள் கூறுகின்றன. நமது கிரகத்தைச் சுற்றியுள்ள ஒட்டுமொத்த வளிமண்டலத்திலும் மாற்றம் ஏற்படுவதன் காரணமாக, உணவு மற்றும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதனால் மக்கள் வேறு பகுதிகளுக்கு குடியேற தொடங்குவார்கள். இது மக்களிடையே வீணான சச்சரவுகளை உண்டாக்கி பிரச்சனையை மேலும் அதிகமாக்கும்.
Kidhours – Becoming Unlivable Countries, Becoming Unlivable Countries update
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.