Tamil Kids Education சிறுவர் கல்வி
பூமியில் வாழும் வன விலங்குகளில் பல தற்போது அழிவின் விளிம்பில் உள்ளன. அதற்கு காரணம் அவற்றின் வாழ்விடம் அழிக்கப்படுவதும் மற்றும் அவை வேட்டையாடப்படுவதும் ஆகும். அந்த வகையில் தந்தங்களுக்காக யானைகளும், தோல், பற்கள் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக புலிகளும், சிங்கங்களும் வேட்டையாடப்படுகின்றன. அதேபோல உலகின் தனித்துவமான உயிரினமாக கருதப்படும் காண்டாமிருகங்களும் அதன் கொம்புகளுக்காக வேட்டையாடப்படுகின்றன.
இந்த இனத்தை காப்பாற்ற நாம் எதுவும் செய்யாவிட்டால் காடுகளில் வாழும் மிகவும் ஆபத்தான மற்றும் அழிவின் விளிம்பில் உள்ள உயிரினமாக இவை கருதப்படும். இதன் காரணமாகவே ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22ம் தேதி உலக காண்டாமிருக தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் காண்டாமிருகங்களைப் பற்றி மக்களுக்கு அதிக விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, இந்த அற்புதமான உயிரினங்களில் எஞ்சியிருப்பதைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22ம் தேதி, ஐந்து வகையான காண்டாமிருகங்களை உலகம் கவுரவிக்கிறது. அந்த ஐந்து காண்டாமிருக இனங்களில் கருப்பு, வெள்ளை, ஒற்றை கொம்பு, சுமத்ரன் மற்றும் ஜவான் ஆகியவை அடங்கும். காண்டாமிருகத்தின் தனித்துவமான கொம்புகளுக்கான மனிதர்களின் விருப்பம் உலகில் காணப்படும் காண்டாமிருக இனங்கள் ஐந்தையும் அழிவின் விளிம்பிற்கு தள்ளியது என்று சொல்லலாம். சிகிச்சை குணங்கள் காரணமாக காண்டாமிருகத்தின் கொம்புகளுக்கு அதிக தேவை உள்ளது.
இந்திய காண்டாமிருகம் என்று அழைக்கப்படும் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்தை, ஆபத்தின் விளிம்பில் இருக்கக்கூடிய இனமாக IUCN பட்டியலிட்டுள்ளது. இந்த விலங்கு முதன்மையாக இமயமலை அடிவாரத்தில் காணப்படுகிறது. மேலும் இந்தியா மற்றும் நேபாளம் பகுதிகளில் வாழ்ந்து வருகிறது.
1990-களின் தொடக்கத்தில், ஆப்பிரிக்க காண்டாமிருக பிரச்சினை பூதாகரமாக வெடித்தது. குறிப்பாக ஜிம்பாப்வேயில் கருப்பு காண்டாமிருகங்களின் பேரழிவு அங்கீகரிக்கப்பட்டது மற்றும் மக்கள் பயப்படத் தொடங்கினர். 2010ம் ஆண்டளவில், காண்டாமிருகத்தின் அபாயகரமான அழிவு குறித்து உலகம் முழுவதும் பலருக்குத் தெரியாமல் இருந்தது. நிலைமை மோசமடைவதை உலகிற்கு தெரிவிக்கும் விதமாக, தென்னாப்பிரிக்காவின் உலக வனவிலங்கு நிதி அமைப்பு கடந்த 2010ம் ஆண்டு உலக காண்டாமிருக தினத்தை அறிவித்தது.
ஒரு வருடம் கழித்து இந்த நாள் உலகம் முழுவதும் பிரபலமடைந்தது. 2011ம் ஆண்டில், லிசா ஜேன் கேம்ப்பெல் என்ற பெண்மணி, உலகின் ஐந்து காண்டாமிருக இனங்கள் உயிர்வாழ்வதையும், வரும் தலைமுறைகளுக்கு அவற்றை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு தனது சக காண்டாமிருக ஆர்வலர் ரிஷ்ஜாவை அழைக்கும் விதமாக ஒரு மின்னஞ்சலை அனுப்பினார். அதுவே உலக காண்டாமிருக தினம் உலகளாவிய உணர்ச்சியாக மாறியது. அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும், உலக காண்டாமிருக தினத்தை முன்னிட்டு, என்ஜிஓக்கள், உயிரியல் பூங்காக்கள், சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் வனவிலங்கு குழுக்கள் ஒன்று கூடி இந்த தினத்தை கொண்டாடி வருகின்றனர்.
காண்டாமிருகங்கள் முன்பு யூரேசியா மற்றும் ஆப்பிரிக்கா முழுவதும் பரவலாக இருந்தன. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சுமார் 500,000 காண்டாமிருகங்கள் உலகம் முழுவதும் சுற்றித் திரிந்தன. ஆனால் ஜாவன் மற்றும் சுமத்ரான் காண்டாமிருகம் தற்போது ஆசியாவில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளன. உலகம் முழுவதும் ஜாவா காண்டாமிருகங்கள் வெறும் 58 முதல் 68 என்ற சொற்ப எண்ணிக்கையிலேயே உள்ளன.
இந்த நிலையில் ஜாவான் காண்டாமிருக இனம் 2011ல் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இன்று 80 சுமத்ரான் காண்டாமிருகங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. அதேபோல கருப்பு காண்டாமிருகம் அழிவின் விளிம்பில் உள்ளது. ஐந்து காண்டாமிருக இனங்களில் தற்போது வெள்ளை காண்டாமிருகங்கள் தான் அதிகம். இவை தற்போது காடுகளில் சுமார் 20,000 என்ற எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றன.
பெரிய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம், இந்திய காண்டாமிருகம் என்று அழைக்கப்படுகிறது. பாதுகாப்பு முயற்சிகளின் விளைவாக இந்தியாவில் இதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது சுமார் 3,500 காண்டாமிருகங்கள் உள்ளன. இருப்பினும், இந்த இனம் பாதிப்பின் விளிம்பில் இருப்பதாகவே கருதப்படுகிறது. எனவே, இந்தியாவில் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை சிறப்பாக அதிகரித்து வரும் நிலையில், இன்னும் மற்ற இனங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதையே இந்த தினம் நோக்கமாக கொண்டுள்ளது.
kidhours – Tamil Kids Education,Tamil Kids Education Kavil, Tamil Kids Education
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.