World 28 Crore Starving உலக காலநிலை செய்திகள்
கடந்த ஆண்டில் (2023) 28 கோடி பேர் கடுமையான பட்டினியை எதிர்கொண்டதாக ஐக்கிய நாடுகள் உணவு பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் உணவு பாதுகாப்பு அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “2023 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் உணவு பாதுகாப்பின்மை மோசமடைந்த நிலையில் சுமார் 28.20 கோடி மக்கள் கடுமையான பட்டினியால் பாதிக்கப்பட்டனர்.
குறிப்பாக போர்ச் சூழல் உள்ள காசா மற்றும் சூடானில் கடும் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தீவிர வானிலை நிகழ்வுகள் மற்றும் பொருளாதார பாதிப்புகள் உள்ளிட்டவைகளால் கடுமையான உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
பட்டினியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக அதிகரித்துள்ளதுடன் போர், காலநிலை மற்றும் வாழ்க்கை செலவு நெருக்கடி ஆகியவற்றால் 2023 ஆம் ஆண்டில் சுமார் 30 கோடி மக்கள் கடுமையான உணவு நெருக்கடியை எதிர்கொண்டனர்.
2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2023 ஆம் ஆண்டில் 2.40 கோடி மக்கள் அதிகரித்துள்ளதுடன் ஆப்கானிஸ்தான், காங்கோ ஜனநாயக குடியரசு, எதியோப்பியா, நைஜீரியா, சிரியா மற்றும் யேமன் ஆகிய நாடுகளில் நீடித்த பெரும் உணவு நெருக்கடிகள் தொடர்கின்றன.
ஹைட்டி நாட்டில் மோசமான அரசியல் ஸ்திரமின்மை மற்றும் விவசாய உற்பத்தி குறைந்ததால் பட்டினி ஏற்பட்டுள்ளதோடு எல் நினோ வானிலை நிகழ்வு மேற்கு மற்றும் தென்னாபிரிக்காவில் கடுமையான வறட்சிக்கு வழிவகுக்கும்.
13.50 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள 20 நாடுகள் அல்லது பிரதேசங்களில் கடுமையான பட்டினிக்கு மோதல் அல்லது பாதுகாப்பின்மை சூழ்நிலைகள் முக்கிய காரணமாகவுள்ளன.

வெள்ளம் அல்லது வறட்சி போன்ற தீவிர காலநிலை நிகழ்வுகள் 18 நாடுகளில் 7.20 கோடி மக்களின் கடுமையான உணவு பாதுகாப்பின்மைக்கு முக்கிய காரணமாகும்.
மேலும் பொருளாதார பாதிப்புகளால் 21 நாடுகளில் 7.50 கோடி மக்கள் பட்டினி பாதிப்பை சந்தித்தனர் ” என குறிப்பிடப்பட்டுள்ளது.
Kidhours – World 28 Crore Starving
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.