Car Guinness World Record பொது அறிவு செய்திகள்
ரிமோட் கன்ட்ரோல் மூலம் காரை மணிக்கு 152 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி பிரிட்டனை சேர்ந்த ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ரிமோட் கன்ட்ரோலில் இயங்கும் இந்த கார் பார்ப்பதற்கு அளவில் மிகவும் சிறியதாக காணப்படுகிறது. இதனை பிரிட்டனை சேர்ந்த ஜேம்ஸ் வோம்ஸ்லி என்பவர் ஜெட் எஞ்சின் மூலமாக தயாரித்துள்ளார்.
ரிமோட் கன்ட்ரோல் மூலமாக கார்கள் குறைவான வேகத்தில்தான் பயணிக்க முடியும். அப்படி இருக்கும்போது மணிக்கு 152.50 கி.மீ. வேகத்தில் கார் சென்றது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் துரதிருஷ்டவசமாக கார் விபத்துக்குள்ளாகி சிதைந்து போனது.
கார் சிதையாமல் தொடர்ந்து இயங்கியிருந்தால், மணிக்கு 300 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் சென்றிருக்கும் என்று ஜேம்ஸ் வோம்ஸ்லி கூறியுள்ளார். கார் மோதி சிதைந்தது தனக்கு மிகவும் மன வருத்தத்தை கொடுத்ததாக அவர் கூறியுள்ளார். இதற்கு முன்பாக யாரும் இந்த அளவு ரிமோட் கன்ட்ரோல் காரை வேகமாக ஓட்டி சாதனை ஏற்படுத்தவில்லை.
முதலில் அவர் தனது காரை 137 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கியபோது, காரின் சில பகுதிகளில் உடைந்து விழத் தொடங்கின. இதையடுத்து அவர் மீண்டும் காரை சரி செய்து மணிக்கு 141 கிலோ மீட்டர் வேகத்திற்கு கொண்டு சென்றார். அப்போது வேகமாக வீசிய காற்று, காரின் இயக்கத்தை பாதித்தது.
மூன்றாவது முறையாக முயற்சித்த ஜேம்ஸ், காரை 152.50 கி.மீ. வேகத்திற்கு கொண்டு சென்றார். இந்த நிகழ்வு கின்னஸ் சாதனையாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த காரை தயாரிப்பதற்காக ஓராண்டுக்கும் மேலாக அவர் கடுமையாக உழைத்துள்ளார். இதேபோன்று இன்னும் அதிவேகமான காரை உருவாக்கி தனது கின்னஸ் சாதனையை தானே முறியடிப்பதாக அவர் கூறியுள்ளார்.
Kidhours – Car Guinness World Record
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.