Forest Fire புவியியல்
உலகின் எந்தப் பகுதியிலும் ஏற்படும் தீயை நாஸாவின் மோடிஸ் (மாடரேட் ரெசொல்யூஷன் இமேஜிங் ஸ்பெக்ட்ரோரேடியோமீட்டர்) மற்றும் விஐஐஆர்எஸ் (விஸிபிள் இன்ஃப்ராரெட் இமேஜிங் ரேடியோமீட்டர் சூட்) செயற்கைக்கோள்களால் கண்டறிய முடியும். இந்திய வன ஆய்வு நிறுவனம் (எஃப்.எஸ்.ஐ.), டிஜிட்டல் தொழில்நுட்ப உதவியுடன் இந்தத் தரவுகளை ஆய்வுசெய்து, வனத்தின் எந்தப் பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டிருக்கிறது என்று இடத்தைச் சரியாகக் கண்டறிந்துவிடும்.
இந்த செயற்கைக்கோள்கள் 375 மீட்டருக்கு 375 மீட்டர் எனும் அளவுக்குத் துல்லியமாக உற்றுநோக்கக்கூடியவை. அரை பிக்ஸலுக்கும் அதிகமாக, அதாவது ஏழு ஹெக்டேர் அளவுக்கு ஏற்படும் தீயை இவற்றால் கண்டறிய முடியும்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை, காட்டுத் தீயைக் கண்டறிவதற்கும், சம்பந்தப்பட்ட வன அதிகாரிக்குத் தகவல் சென்றடைவதற்கும் இடையிலான நேர இடைவெளி 5 முதல் 6 மணி நேரமாக இருந்தது.
இது தற்போது 2 மணி நேரமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. முன்பு, இந்த இரண்டு செயற்கைக்கோள்களும் ஒரு நாளைக்கு இரண்டு முறை பூமியைச் சுற்றிவந்தன. தற்போது மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை பூமியைச் சுற்றிவருகின்றன.
இதற்கிடையில், கண்காணிப்புக் கோபுரத்திலிருக்கும் வனத் துறைக் காவலர்கள், ரோந்துப் பணியிலிருக்கும் காவலர்கள் ஆகியோரிடமிருந்து வன அதிகாரிக்குத் தகவல் சென்றுவிடும். காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் யாரை ஈடுபடுத்துவது என்று அவர் முடிவுசெய்வார்.
காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த பிரதானமான கட்டுப்பாட்டு அறை ஒன்று உண்டு. அதற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டவுடன், அதன்மூலம் உள்ளூர் தீயணைப்பு நிலையங்களுக்குத் தகவல் அனுப்பப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் அனுப்பப்படுவார்கள்.
காட்டுத் தீயை எதிர்கொள்வதில் நான்கு அணுகுமுறைகள் உண்டு. முதலாவது வழி தொழில்நுட்பம் சார்ந்தது எனலாம். இதில், ஹெலிகாப்டர்கள் அல்லது நிலத்திலிருந்து தீத்தடுப்பு ரசாயனத்தைப் பீய்ச்சியடிப்பது அல்லது பெருமளவு நீரைப் பீய்ச்சியடிப்பது போன்ற வழிமுறைகள் கையாளப்படுகின்றன.
இவை செலவுபிடிக்கும் வழிமுறைகள்தான் என்றாலும், மனித உயிர்களைக் காப்பாற்றும் எனும் வகையில் முக்கியமானவை. எனினும், பொதுவாக இந்தியாவில் இந்த வழிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை.
இரண்டாவது, தீ தடுப்புப் பாதைகள். நீரோடைகள், சாலைகள், முகடுகள், குன்றுப் பகுதிகளிலும் சமவெளிப் பகுதிகளிலும் உள்ள பாதைகள் போன்றவற்றால், காடுகளைப் பகுதி பகுதியாகப் பிரிப்பதன் மூலம் தீ பரவாமல் தடுக்க முடியும். தீ தடுப்புப் பாதைகள் என்பவை, தாவரங்கள் இல்லாத வகையிலான பாதைகளாகக் காட்டுக்குள் உருவாக்கப்படுபவை.
பாதுகாக்கப்படும் வனப்பகுதியின் தன்மையைப் பொறுத்து இந்தப் பாதையின் அகலம் இருக்கும். வனங்கள் இதுபோன்ற தீ தடுப்புப் பாதைகளால் பிரிக்கப்பட்டிருக்கும்போது, ஒரு பகுதியில் ஏற்படும் தீ அங்கிருக்கும் மரங்கள், தாவரங்களை எரித்து ஒரு கட்டத்தில் அணைந்துவிடும். இடையில் தீ தடுப்புப் பாதை இருப்பதால் வனத்தின் அடுத்த பகுதி தீயிலிருந்து தப்பிவிடும்.
மூன்றாவது, எதிர்த் தீயை உருவாக்குவது. காட்டுத் தீ மனிதர்கள் நெருங்க முடியாத அளவில் இருக்கும்போது, ஒரு பகுதியில் உள்ள தாவரங்கள் அகற்றப்படும். இந்தப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள், காட்டுத் தீ ஆக்ஸிஜனை இழுத்துக்கொள்ளும் அளவுக்கு நெருங்கி வரும் வரை காத்திருப்பார்கள். பின்னர், பக்கவாட்டில் வரிசையாக ஒவ்வொருவரும் நெருப்பைப் பற்றவைப்பார். அந்த நெருப்பும் காட்டுத் தீயும் ஒன்றுக்கொன்று எதிர்ப்படும்போது, காட்டுத் தீ அணைந்துவிடும்.
நான்காவது அணுகுமுறை, பலர் சேர்ந்து பசும் இலைகள் நிறைந்த கிளைகளை வைத்து நெருப்பை அணைப்பது. இதுதான் அதிக அளவில் நடைமுறைச் சாத்தியங்களைக் கொண்டதும், பரவலாகப் பயன்படுத்துவதுமான அணுகுமுறை. தீ தடுப்புப் பாதைகள், எதிர்த் தீ ஆகியவற்றுடன் சேர்த்து இந்த வழிமுறை பின்பற்றப்படுகிறது.
மரங்கள் உள்ளிட்ட எரியக்கூடிய பொருட்கள் அகற்றப்படுவதன் மூலம் அல்லது உரிய மேற்பார்வையுடன் கொளுத்தப்படுவதன் மூலம் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தலாம் என்பதுதான் தெரிந்துகொள்ள வேண்டிய பாடங்கள். அதனால்தான், காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுபவர்கள் உயிரிழக்கும் வாய்ப்பு குறைவு. காட்டுத் தீயைப் பொறுத்தவரை ஆபத்தான விஷயம், மூச்சுத் திணறல்.
அதிக அளவில் புகை எழுவதாலும், உயரமான தீப்பிழம்புகள் காரணமாகவும் ஆக்ஸிஜன் குறைபாடு ஏற்பட்டு மூர்ச்சையடைந்துவிடுவார்கள். இதனால், மயக்கமுற்ற நிலையிலேயே உயிருடன் தீக்குப் பலியாகும் ஆபத்து உண்டு. குறிப்பாக, தனியாக மாட்டிக்கொள்பவர்களுக்கு இந்த அபாயம் அதிகம். ஒரு மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் எரியும் நெருப்பு காரணமாக உடல் வறட்சி ஏற்படுவது இன்னொரு ஆபத்து.
குளிர்காலம் போன்ற ஆபத்தற்ற பருவங்களில் பாதுகாப்பாகக் காட்டை எரிக்கும் வழிமுறையை பிரிட்டிஷ் அரசு அறிமுகப்படுத்தியது. இதன்மூலம், கோடைகாலத்தில் காட்டுத் தீ ஏற்படுவதைத் தடுக்க முடிந்தது. எனினும், இதில் பூச்சிகள், சிறிய வகை ஊர்வன, விதைகள், மூலிகைகள், புதர்கள் அழிக்கப்படும் என்பதால், இது பெரும் சேதத்தை விளைவிக்கும் வழிமுறை என்று கருதப்படுகிறது.
சரி, காட்டுத் தீயால் ஏற்படும் சேதங்களைக் கட்டுப்படுத்துவது எப்படி? தகவல் தொடர்பு, எதிர்வினைக்கான நேரம் ஆகியவை பெரிய அளவில் சாத்தியமில்லாத நிலையில், தீயை அணைக்க அனுப்பப்படும் வனத் துறை ஊழியர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருந்தால் தீயைக் கட்டுப்படுத்துவது சிரமம். உற்சாகத்துடன் அவர்கள் சிறு அளவிலான தீயை அணைக்க முடியும். ஆனால், காட்டுத் தீ என்பது பல கிலோ மீட்டர் தொலைவு பரவக்கூடியது.
சில ஜீப்புகளில் தீயணைப்பு வீரர்களை அனுப்புவது கைகொடுக்காது. பெரும் எண்ணிக்கையிலான தீயணைப்பு வீரர்கள் இதில் ஈடுபடுத்தப்பட வேண்டும். அவர்களுக்குத் தேவையான குடிநீர், உணவு, தரமான காலணிகள், ரீசார்ஜபிள் டார்ச்லைட் உள்ளிட்ட உபகரணங்கள் அளிக்கப்பட வேண்டும். குறிப்பாக, அவர்களுக்கு நல்ல ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
பயிற்சிபெற்ற தொழிலாளர்களைத் தீ ஏற்படும் சமயத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம். உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பும் பெரிய அளவில் பலன் தரும்.
போதுமான நிதியின்மைதான் இதில் முக்கியப் பிரச்சினை. வனப் பகுதிகளில் மரக்கன்றுகள் நடுவது, காடுகளை வளர்ப்பது உள்ளிட்ட திட்டங்களின் பெயரில் பெரும் தொகை ஒதுக்கப்படுகிறது. இதில் பெரும்பகுதி, ஊழல் அதிகாரிகள், அரசியல் கட்சிகளுக்கு மடைமாற்றப்படுகிறது.
சுதந்திரமடைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, பெருமளவிலான நிதியை ஒதுக்கியும், காடுகளை வளர்க்கும் நடவடிக்கையில் பெரிய அளவில் பலன் கிடைக்கவில்லை. உண்மையில், வனப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதற்கு இந்த நிதியே போதுமானது. காட்டுத் தீ ஏற்படும் சமயங்களில், மேலும் அதிகமான வனத் துறை ஊழியர்களைப் பயன்படுத்தலாம். மற்ற சமயங்களில் வனப் பகுதிகளில் ரோந்துப் பணிகளில் ஈடுபடுத்தலாம். இதுதான், குரங்கணி காட்டுத் தீ போன்ற சம்பவங்களைத் தவிர்க்க ஒரே வழி.
மக்கள் பொழுதுபோக்கு நோக்கத்துடன் வனப் பகுதிகளுக்குச் செல்வதற்கு அனுமதி தேவை என்பது சரியில்லை என்று கருதுகிறேன். பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக இருந்தாலும் தனியாருக்குச் சொந்தமான தோட்டமாக இருந்தாலும், சம்பந்தப்பட்டவர்களுக்குத் தகவல் தெரிவிப்பதே போதுமானது.
வனப் பகுதிகளிலிருந்து வளங்கள் திருடப்படுவதைத் தடுக்கும் நோக்கத்தில்தான், இதுபோன்ற கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன. பொழுதுபோக்குக்காக வனப் பகுதிகளுக்குச் செல்பவர்கள் அங்கிருந்து எதையும் எடுத்துச் செல்லப்போவதில்லை என்பதால், அரசுக்குச் சொந்தமான குன்றுகளில் நடையுலா சென்றுவர அனுமதி பெறுவது என்பது தேவையில்லாதது.
இந்நிலையில், இந்திய வனச் சட்டம் – 1927ல் உடனடியாகத் திருத்தம் செய்ய வேண்டும். ஏனெனில், அது இன்னமும் காலனிய காலகட்டத்தின் மனோபாவத்தையே பிரதிபலிக்கிறது.
அதேசமயம், பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளில் சீரமைக்கப்பட்ட நடைபாதைகளோ சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளோ உருவாக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. இவை சுற்றுலாவுக்கான இடங்கள் இல்லை. வனப் பகுதிகளில் பெருமளவிலான சுற்றுலா என்பது காடுகளைச் சீரழித்துவிடும்.
Kidhours – Forest Fire tamil essay , Forest Fire artical in tamil , Forest Fire control in tamil
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.