Snow Storm உலக காலநிலை செய்திகள்
அமெரிக்காவில் பனி புயலை அடுத்து நாடு முழுவதும் 1,700 விமானங்களின் இயக்கம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் பருவ காலத்தில் ஏற்பட கூடிய பனி புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலும் கட்டிடங்கள் மற்றும் சாலைகளில் பனி படர்ந்து காணப்படுகிறது.
இதனால், டெக்சாஸ் மாகாணத்தில் நூற்றுக்கணக்கான சாலை விபத்துகள் ஏற்பட்டு உள்ளன. இந்த நிலையானது இன்றும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
சாலை விபத்தில் சிக்கி ஆஸ்டின் பகுதியில் நபர் ஒருவர் உயிரிழந்து உள்ளார். டல்லாஸ் அருகே நெடுஞ்சாலையில் சொகுசு கார் ஒன்று விபத்தில் சிக்கியதில் 45 வயது நபர் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
இதனால், மொத்தம் 2 பேர் பலியாகி உள்ளனர். டல்லாஸ் நகரில் போர்ட் ஒர்த் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் மற்றும் வருகை தரும் என 900 விமானங்கள் வரை நேற்று ரத்து செய்யப்பட்டோ அல்லது காலதாமதத்துடனோ இயக்கப்பட்டன.
50 சதவீதத்திற்கும் கூடுதலான விமான சேவை நேற்று மதியம் ரத்து செய்யப்பட்டன. அவற்றில் அதிக அளவாக டல்லாசை அடிப்படையாக கொண்ட, தென்மேற்கு ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் 560 விமானங்களை ரத்து செய்தது.
350 விமானங்களின் சேவையில் காலதாமதம் ஏற்பட்டது. இதேபோன்று, டல்லாசின் லவ் பீல்டு விமான நிலையத்தில் இருந்து புறப்படும் மற்றும் வருகை தரும் 250 விமானங்கள் வரை நேற்று ரத்து செய்யப்பட்டோ அல்லது காலதாமதத்துடனோ இயக்கப்பட்டன.
மொத்தம், 1,700 விமான சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. டெக்சாஸில் பனியால் ஏற்பட்ட பாதிப்பால் 7 ஆயிரம் இடங்களில் மின் இணைப்பு தடைப்பட்டது. அதிகளவு பனியால், 1 லட்சம் மாணவர்கள் படிக்க கூடிய மெம்பிஸ்-ஷெல்பை கவுன்டி பள்ளிகளில் இன்று வகுப்புகள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த பனி புயலானது, டெக்சாஸ், ஒக்லஹோமா, அர்கான்சாஸ் மற்றும் டென்னசி மாகாணங்களில் இன்றும் தாக்கம் ஏற்படுத்த கூடும் என அந்நாட்டு தேசிய வானிலை ஆய்வு மைய நிபுணர் மார்க் செனார்டு கூறியுள்ளார்.
மேலும் நடப்பு ஆண்டில் கடந்த 10 நாட்களில் தென்மேற்கு ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 16,700 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதுபற்றி அமெரிக்க போக்குவரத்து துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
Kidhours – Snow Storm
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.