European Forecast உலக காலநிலை செய்திகள்
பூமியில் இதுவரை பதிவான வெப்பநிலை தரவின்படி, கடந்த ஆண்டில் அதிகபட்ச வெப்பநிலை பதிவானது.
இது தொழிற்புரட்சி காலத்தில் பதிவான வெப்பநிலையை விட, 1.48 டிகிரி செல்சியஸ் அதிகம் என ஐரோப்பிய யூனியன் காலநிலை அமைப்பான கோபா்நிகஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
பூமியின் சராசரி வெப்பநிலை அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் கட்டுப்படுத்த 2015 பாரீஸ் பருவநிலை பாதுகாப்பு மாநாட்டில் இலக்கு நிா்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில், 2023-இல் பதிவான சராசரி வெப்பநிலை உயா்வு, 1.5 டிகிரி செல்சியஸை விட சற்றுதான் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.இத்தகைய வெப்பநிலை உயா்வால் ஐரோப்பா, வட அமெரிக்கா, சீனா என உலகின் பெரும்பாலான பகுதிகள் கடந்த ஆண்டில் பெரும் பாதிப்புகளை எதிா்கொண்டன.
பூமியின் வெப்பநிலை அதிகரித்து வருவதால், வறட்சி, வெள்ளம், வெப்ப அலை போன்ற மிகத் தீவிரமான காலநிலை மாற்றங்கள் நிகழ்வதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.
எத்தியோப்பியா, சோமாலியா, சூடான், தெற்கு சூடான், கென்யா, ஜிபூட்டி, எரித்ரேயா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ‘ஆப்பிரிக்காவின் கொம்பு’ என அறியப்படும் பிராந்தியத்தில் கடந்த ஆண்டில் நிலவிய வறட்சி வழக்கத்தைவிட அதிக காலம் தொடா்ந்தது.லிபியாவில் பெய்த கனமழையைத் தொடா்ந்து ஏற்பட்ட வெள்ள பெருக்கில், நதியில் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணைகள் உடைந்தன. இதில் ஆயிரக்கணக்கானோா் உயிரிழந்தனா்.
கனடாவில் ஏற்பட்ட காட்டுத்தீ வட அமெரிக்காவிலிருந்து ஐரோப்பா வரை காற்று மாசுபாட்டுக்குக் காரணமானது.
நிகழாண்டில் மேலும் அதிகரிக்கலாம்: கடந்த ஆண்டில் பூமியின் சராசரி வெப்பநிலை 14.98 டிகிரி செல்சியஸ் என கோபா்நிகஸ் கணக்கிட்டுள்ளது.
இது முந்தைய மிகவும் வெப்பமான ஆண்டான 2016-இல் பதிவான வெப்பநிலையை விட 0.17 டிகிரி செல்சியஸ் அதிகமாகும்.இது தொடா்பாக கோபா்நிகஸின் துணை இயக்குநா் சமந்தா பா்ஜஸ் கூறுகையில், ‘1.5 டிகிரி செல்சியஸ் இலக்கிலிருந்து நாம் பின்வாங்க கூடாது.
வெப்பநிலை உயா்வால் ஏற்படும் காலநிலை மாற்ற நிகழ்வுகள் நம்மை மட்டும் அல்லாமல், நம்முடைய வரும் தலைமுறையினரையும் பாதிக்கும்.கடந்த ஆண்டில் ஜூன் மாதத்திலிருந்து தொடா்ந்து 7 மாதங்களுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிகபட்ச வெப்பநிலை பதிவானது.
இதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும், பூமியிலிருந்து வெளியேறும் வெப்பத்தைச் சிறைப்பிடிக்கும் பசுமை இல்ல வாயுக்களின் அளவு, வளிமண்டலத்தில் அதிகரித்திருப்பது முக்கியக் காரணம்.மத்திய பசிபிக் பெருங்கடலில் நிகழும் எல்-நினோ மற்றொரு காரணம்.கடலுக்கடியில் உள்ள ஓா் எரிமலை கடந்த 2022-இல் வெடித்தது. இந்த நிகழ்வால் அதிக அளவிலான நீா், நீராவியாக வளிமண்டலத்துக்குச் சென்றது.
எல்-நினோ நிகழ்வு, பெருங்கடல் வெப்பநிலை அதிகரிப்பால் 2023-ஐ விட நிகழாண்டில் வெப்பநிலை அதிகமாக இருக்கலாம்’ எனத் தெரிவித்தாா்.
Kidhours – European Forecast
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.