உலகின் பிரபலமான பேஷன் நிகழ்ச்சியான “மெட் காலா 2021“ அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் கடந்த திங்கள் கிழமை இரவு நடைபெற்றது. “அமெரிக்காவின் சுதந்திரம்“ என்ற தீமை கொண்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு இந்தியாவில் இருந்து ஒரே ஒரு பெண் மட்டுமே கலந்துகொண்டுள்ளார். அதிலும் அவர் அணிந்திருந்த ஆடை ஒட்டுமொத்த மெட் காலா நிகழ்ச்சியையே அலறவிட்டு இருக்கிறது.
பொதுவாக மெட் காலா நிகழ்ச்சியில் ஹாலிவுட் பிரபலங்கள், தொலைக்காட்சி ஸ்டார்கள், விளையாட்டு வீரர்கள், பெரும் பணக்காரர்கள், சில வேளைகளில் அரசியல் தலைவர்களும் பங்கேற்பது வழக்கம். இதற்கு முன்பு நடைபெற்ற மெட் காலா நிகழ்ச்சிகளில் இந்தியாவில் இருந்து பாலிவுட் நடிகைகளான பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே போன்ற சில பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.
தற்போது மெட் காலா 2021 இல் ஹைத்ராபாத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மேகா கிருஷ்ணனின் மனைவி சுதா ரெட்டி முதல்முறையாகக் கலந்து கொண்டுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் அவர் 250 கிலோ எடைக்கொண்ட ஆடையை அணிந்திருந்தார். அந்த ஆடை முழுக்க முழுக்க தங்கம் மற்றும் வைரங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
பிரபல பேஷன் டிசைனரான ஃபாரா கான் வடிவமைத்த இந்த ஆடை, அமெரிக்கா மாகாணங்களின் தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் அமெரிக்க கொடியில் உள்ள நட்சத்திரத்தைப் பிரதிபலிக்கும் வண்ணம் விவிஎஸ் வைரத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த உடையில் 18 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் 35 கேரட் மதிப்புள்ள வைரங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.
மெட் காலா 2021 நிகழ்ச்சியில் இந்தியாவில் இருந்து ஒரே ஒருவர்தான் கலந்து கொண்டுள்ளார். அதுவும் 250 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட ஆடையை அணிந்து கொண்டு என்பதுதான் தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் கறுப்பினத்தவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மெட் காலா 2021 இல் பிரபல மாடலான கிம் காதஷியன் கறுப்பு நிற ஆடையை அணிந்து இருந்தார். இது பெரிதும் வரவேற்பை பெற்றது.
அதேபோல அமெரிக்காவின் இளம் எம்.பியான அலெக்சாண்டிரியா ஒகாசியோ கார்டஸ் பேஷன் நிகழ்ச்சியை அரசியல் பேசும் இடமாக மாற்றி பலரையும் ஆச்சர்யப்படுத்தி இருந்தார். அவர் அணிந்திருந்த வெள்ளை நிற உடையில் Tax the Rich என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. இதுவும் மெட் காலா நிகழ்ச்சியில் பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில் 250 தங்க உடையணிந்த இந்தியப்பெண் மெட் காலா நிகழ்ச்சியில் தனிக்கவனம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.