சரஸ்வதிக்கு ஞான சரஸ்வதி, ஆகமச் செல்வி, ஆகமசுந்தரி, ஞானச்செல்வி என்று பல பெயர்கள் உண்டு. சரஸ்வதியை வேதங்கள் அன்னத்தின் மீது அமர்ந்திருப்பவளாகப் போற்றுகின்றன. அன்ன வாகனத்துடன் உள்ள சரஸ்வதியை அம்சவல்லி என்பர்.
அன்னம், அப்பழுக்கற்ற வெண்மை நிறமுடையது. அதுபோல்,ஒருவர் கற்கின்ற கல்வியும் மாசு மருவற்றதாக இருக்க வேண்டும் என்பதையும், படித்தவர்கள் வெள்ளை மனதினராக இருக்க வேண்டும் என்பதையும் குறிக்கிறது.
அவளது வெள்ளைப் புடவை அவள் அமர்ந்துள்ள வெள்ளைத் தாமரை ஆகியவையும் இதையே உணர்த்துகின்றன தென்னகத்தில் கலைமகளை மயில் வாகனம் கொண்ட வளாகப் போற்றுகின்றனர். ரவிவர்மாவின் ஓவியங்களில் சரஸ்வதிக்கு மயிலே வாகனமாக குறிக்கப்பட்டுள்ளது மயில் தோகை விரிப்பதும், மடக்கிக் கொள்வதும் ஒருவன் கற்ற கல்வி பரந்து விரிந்ததாக இருக்க வேண்டும் என்பதையும், அவனுக்கு அடக்கம் வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறது.
சரஸ்வதிக்கு கொண்டைக்கடலை: தெட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலையும், சரஸ்வதிக்குகொண்டைக் கடலை நைவேத்யமும் முக்கியம். இதற்கு காரணம் என்ன தெரியுமா? சரஸ்வதி, தெட்சிணாமூர்த்தி இருவருமே ஞானத்தை அருள்பவர்கள். இருவருமே ஜபமாலை,ஏட்டுச் சுவடிகளை ஏந்தியுள்ளனர்.
மனத்தூய்மை, சாந்தம், மெய்ஞானம் ஆகிய உயர் குணங்களை உணர்த்தும் வகையில் ஸ்படிக மாலை, ஜடாமகுடம், சந்திரக்கலை ஆகியவற்றை இருவரும் பெற்றிருப்பதைக் காணலாம். கொண்டைக் கடலை உயிர் காக்கும் சத்துக்களைக் கொண்டது. ஒருவரது ஜாதகத்தில் குரு பலம் இல்லை யென்றால், அவரது உயிருக்கு பாதகம் வரலாம்.
எனவே, குரு பார்வை வேண்டி நவக்கிரகங்களில் குருவுக்கும், குருவின் அம்சமான தெட்சிணாமூர்த்திக்கும் கொண்டைக் கடலை மாலை படைத்து தீர்க்காயுள் கிடைக்க வேண்டுகின்றனர். மனிதவாழ்வின் உயிர் நாடி கல்வி அந்த கல்வியில் சிறந்து விளங்க சரஸ்வதிக்கு கொண்டைக்கடலை (சுண்டல்) நைவேத்யம் செய்கிறோம்.