Sparrow Day in Tamil
இப்போதுள்ள குழந்தைகளுக்கு சிட்டுக் குருவி என்றொரு பறவை இருக்கிறது என்றால் தெரியுமோ? தெரியாதோ? முக்கியமாக சென்னை போன்ற பெருநகர குழந்தைகளுக்கு சிட்டுக் குருவியை பார்ப்பதே அரிதிலும் அரிதான நிகழ்வாகத்தான் இருக்க முடியும். நமக்கிருக்கும் ஒரே ஆறுதல் கிராமங்களில் சிட்டுக் குருவிகள் இன்னமும் இருப்பதே ஆகும். ஆனால் சென்னையில் கூட 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை சிட்டுக் குருவிகளின் கோட்டையாகவே இருந்தது என்பது இப்போது வெறும் வரலாற்று பதிவாகிவிட்டது. அப்போதெல்லாம் சிட்டுக் குருவியின் “கீச் கீச்” குரல்களில்தான் குழந்தைகள் கண் விழித்தார்கள். இப்போதெல்லாம் செல்போன் அலாரம்களில்தான் சிட்டுக் குருவின் ஓசையை கேட்க முடிகிறது.
இந்தியாவிலுள்ள 1314 வகை பறவை இனங்களில், 34 பறவை இனங்கள் மட்டுமே, உலகம் முழுவதும் உள்ளன. இவற்றில், சிட்டுக்குருவியும் அடங்கும். அழிந்து வரும் சிட்டுக்குருவி இனத்தைப் பாதுகாக்க, ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 20-ஆம் தேதி உலகச் சிட்டுக் குருவிகள் தினம் கூட கடைபிடிக்கப்படுகிறது. பறவை இனங்களில், சிட்டுக்குருவி மட்டுமே தனிக்கூடு கட்டாமல், வீடுகளில் உள்ள துவாரங்களில், இடுக்குகளில் சருகுகளைக் கொண்டு தனக்கென ஓர் இடம் அமைத்துக்கொள்ளும். அப்போதிருந்த வீடுகளில் மாநகரில் கூட சிட்டுக் குருவிகளுக்கான இடம் இருந்தது.
சென்னை மாநகரில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்தபோது கூட சிட்டுக் குருவிகள் வாழ்ந்து வந்தன. ஆனால், எப்போது மக்கள் நவீனமயமாக்கலுக்கு முற்றிலுமாக மாறினார்களோ அப்போதே சிட்டுக் குருவிகள் நகரங்களை விட்டுப் பறந்துவிட்டன.

செல்போன் வருகைக்குப் பின் குருவிகளின் அழிவு அதிகரித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. செல்போன் டவர்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு குருவியின் கருவை சிதைப்பதாகவும், முட்டையிட்டாலும், கரு வளர்ச்சி அடையாமல் வீணாவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதுமட்டுமே காரணம் அல்ல. மனிதனுடன் இணைந்து பயணித்த சிட்டுக் கருவி மேற்கொண்டது வாழ்வாதாரப் போராட்டம். ஆம், உண்மைதான் எப்படிலாம் நாம் சிட்டுக் குருவிகளுக்கு தடை போட்டோம் தெரியுமா?
வெளிக்காற்று வீட்டிற்குள் வர முடியாதபடி அடுக்குமாடிக் குடியிருப்புகள். குளிரூட்டப்பட்ட வீடுகளில், குருவிகள் கூடு கட்டி குடியிருக்க இயலாமல் போனது. எரிவாயுக்களில் இருந்து வெளியேறும் மீதைல் நைட்ரேட் எனும் வேதியியல் கழிவுப் புகையால், காற்று மாசடைந்து குருவிகளை வாழ வைக்கும் பூச்சி இனங்கள் அழிகின்றன. இதனால் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையால், நகருக்குள் வாழும் குருவிகள் பட்டினி கிடந்தே அழிகின்றன. பலசரக்குக் கடைகளுக்குப் பதிலாக, பல்பொருள் அங்காடிகள் அதிகளவு வளர்ந்து வருகின்றன. இங்கு பாலிதீன் பைகளில் தானியங்கள் அடைத்து விற்கப்படுவதால், வீதிகளில் தானியங்கள் சிதற வாய்ப்பில்லை. வீட்டுத் தோட்டங்கள், வயல்களில் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி தெளித்து, பூச்சிகள் கொல்லப்படுகின்றன. இதன் காரணமாக, உணவு இல்லாமல் குருவிகள் மெல்ல நகரங்களைக் காலி செய்யத் தொடங்கின.

சிட்டுக்குருவிகள் குறைவதற்கான காரணங்களாக நகரமயமாதல், செல்போன் டவர்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு என்றெல்லாம் காரணம் சொல்லப்படுகிறது. ஆனால் இது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. கள ஆய்வில்தான் இதை அறிய முடியும். நகரங்களில் இருந்த தோட்டங்கள், புதர்ச்செடிகள் வெகுவாகக் குறைந்துபோனது, பறவைகள் கூடு கட்ட ஏதுவான இடங்கள் இல்லாமல் போனது, முட்டை பொரிக்கும் காலங்களில் புழு, பூச்சிகளின் தட்டுப்பாட்டினால் குஞ்சுகளுக்கு சரியான இரையில்லாமல் போவது போன்றவையே காரணமாக இருக்கலாம் எனச் சொல்லப்பட்டது என்கிறார் அவர்.
இப்போதும் ஒன்னும் கெட்டுப்போகவில்லை நாம் நினைத்தால் மீண்டும் அழைக்கலாம் சிட்டுக் குருவிகளை. அது எப்படி ? உங்கள் வீட்டின் அருகில் சிட்டுக்குருவிகள் வருகின்றனவா என கவனியுங்கள். வந்தால் கொஞ்ச நேரம் அவற்றை பார்த்து ரசித்துக் கொண்டிருங்கள். தினமும் அவற்றை உங்கள் வீட்டருகில் வரவழைக்க விரும்பினால் தானியங்கள் வைக்கலாம். கூடவே ஒரு சிறிய பாத்திரத்தில் அவற்றின் தாகம் தீர்க்கத் தண்ணீரையும் வைக்கலாம். ஒரு சிறிய அட்டைப்பெட்டி வைத்து அதில் சிட்டுக்குருவி நுழையும் அளவிற்கு ஓட்டை போட்டு வீட்டின் ஓரமாக உயரே தொங்கவிட்டால் சிட்டுக் குருவியின் குடும்பத்தையே உங்கள் வீட்டிற்கே கொண்டு வரலாம்.
kidhours – Sparrow Day in Tamil , Sparrow Day in Tamil artical
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.