தற்காலத்தில் சிறுவர்களின் உணவு பழக்கத்தை கவனித்துக்கொள்வது பெற்றேரின் மிகவும் பொறுப்புள்ள கடமைகள் ஆகும் அதாவது குழந்தைகள் உணவில் மிகுந்த விருப்பம் கொள்ளச் செய்தலாகும்.அவர்கள் விரும்பி உண்ண கூடிய உணவுகளை தயாரித்து வழங்கல் வேண்டும் அந்தவகையில் மிகவும் சத்துக்கள் நிறைந்த விரும்பி உண்ண கூடிய உண்வுகள் தயாரிக்கும் முறைமையினை இங்கே இலகுவான முறையில் வழங்க்கப்பட்டுள்ளது.
1.சத்து நிறைந்த பாசிப்பருப்பு தோசை
பல்வேறு வகையான தோசைகள் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பாசிப்பருப்பில் சுவையான சத்தான தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாசிப்பருப்பு – 1 கப்,
பச்சரிசி – கால் கப்,
தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 3,
சின்ன வெங்காயம் – 10,
பெருங்காயம் – 1 சிட்டிகை.
செய்முறை:
அரிசி + பருப்பை நன்றாக கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.நன்றாக ஊறிய அரிசி, பருப்புடன் மிளகாய், பெருங்காயம், உப்பை சேர்த்து அரைத்து கொள்ளவும். அத்துடன் ஊறிய பருப்பையும், அரிசியையும் நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
அரைத்த மாவுடன் தேங்காய் துருவல், வெங்காயம் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
இந்த தோசைக்கு புதினா துவையல், தக்காளி சட்னி அருமையாக இருக்கும். சூப்பரான பாசிப்பருப்பு தோசை ரெடி.
2.ரைஸ் வெஜிடபிள் கட்லெட்
மதியம் மீதமானசோறுடன், காய்கறிகள் சேர்த்து கட்லெட் செய்தால் அருமையாக இருக்கும். சரி, இப்போது ரைஸ் வெஜிடபிள் கட்லெட்டை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
அரிசி சாதம் – 1 கப்
உருளைக்கிழங்கு – 1
மிக்ஸ்டு வெஜிடேபிள் (பீன்ஸ், கேரட், குடைமிளகாய்) – 1 கப்
வெங்காயம் – 1
இஞ்சி – 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன்
சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு – 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.சாதத்தை வேகவைத்து ஆறியதும் மசித்து கொள்ளவும்.காய்கறிகள், வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, சாதம், பொடியாக நறுக்கிய காய்கறிகள், வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள, மல்லித்தூள், சோள மாவு, கடலைமாவு சேர்த்து கையால் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு தட்டில் பிசைந்து வைத்துள்ளதை கட்லெட் வடிவில் தட்டி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டி வைத்துள்ள கட்லெட்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.
சூப்பரான ரைஸ் வெஜிடபிள் கட்லெட் ரெடி.
3.சத்தான கோதுமை ரவை புட்டு
பெரியோர் முதல் சிறியவர் வரை அனைவரும் சாப்பிட சத்தான உணவு கோதுமை ரவை புட்டு. இன்று இந்த புட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கோதுமை ரவை – 3 கப்
தேங்காய்த் துருவல் – 2 கப்
வாழைப்பழம் – 2
நாட்டு சர்க்கரை – தேவையான அளவு
உப்பு – சிறிதளவு
செய்முறை :
கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுத்து அகலமான பாத்திரத்தில் போடவும்.இதில் கொஞ்சம் சூடான நீர் தெளித்து ஈரப்பதத்துடன் பிசைந்து கொள்ளவும்.
புட்டுக் குழலில் தேங்காய் துருவல் கொஞ்சம் போட்டு அடுத்து பிசைந்த ரவை போட்டு மீண்டும் தேங்காய் துருவல் என நிரப்பி 10 முதல் 12 நிமிடங்கள் வேக வைக்கவும்.வெந்ததும் வாழைப்பழம், நாட்டு சர்க்கரை போட்டு பிசைந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
சூப்பரான கோதுமை ரவை புட்டு ரெடி.
4.சத்தான தக்காளி ஆலிவ் சாலட்
காலையில் சாலட் சாப்பிடுவது அன்றைய தினம் முழுவதும் உங்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். இன்று சத்தான தக்காளி ஆலிவ் சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
தக்காளி – 2
வெள்ளரிக்காய் – 1
பிளாக் ஆலிவ் – 6
வெங்காயம் – 2
உப்பு – சுவைக்க
மிளகு தூள் – சுவைக்க
துளசி இலை – 3-4
பால்சமிக் வினிகர்(Balsamic vinegar) – 2 மேஜைக்கரண்டி
செய்முறை :
வெங்காயம், பிளாக் ஆலிவ், தக்காளியை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.வெள்ளரிக்காயை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
துளசி இலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், பிளாக் ஆலிவ், வெள்ளரிக்காய், தக்காளியை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
அடுத்து அதில் உப்பு, மிளகு தூள், பால்சமிக் வினிகர் (Balsamic vinegar) சேர்த்து நன்றாக கலந்து துளசி இலை தூவி பரிமாறவும்.
சூப்பரான சத்தான சத்தான தக்காளி ஆலிவ் சாலட் ரெடி.
5.சத்தான மிக்ஸ்டு பருப்பு இட்லி
இட்லியை பலவிதமான வகைகளில் செய்யலாம். இன்று 4 வகையான பருப்பை வைத்து சுவையான சத்தான இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா அரை,
அரிசி – கால் கப்
எலுமிச்சைச் சாறு – சிறிதளவு,
தயிர் – 2 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு – சிறிதளவு.
தாளிக்க:
நெய் – ஒரு டீஸ்பூன்,
கடுகு, பெருங்காயத்துள் – தலா அரை டீஸ்பூன்,
நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு,
பச்சை மிளகாய் – 3,
எண்ணெய், நெய் – தலா ஒரு டீஸ்பூன்.
செய்முறை :
பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.பருப்பு வகைகளை அரிசியுடன் சேர்த்து நன்றாக கழுவி முக்கால் மணி நேரம் ஊறவிட்டு… உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து, தயிர் விட்டு (தண் ணீர் வேண்டாம்) கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து மாவுடன் சேர்த்து, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.
மாவை புளிக்க விடக்கூடாது. மாவை சிறிய இட்லி தட்டில் நெய் / எண்ணெய் தடவி மாவை ஊற்றி, 13 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.சூப்பரான சத்தான மிக்ஸ்டு பருப்பு இட்லி ரெடி
இதற்குத் தொட்டுக் கொள்ள இட்லி மிளகாய்ப் பொடி, தேங்காய் சட்னி மிகவும் ஏற்றது.
இவ்வறன சுவை மிகுந்த உணவுகளை தயாரித்து வழங்கும் போது சிறுவர்கள் விரும்பி உண்பதோடு சரியான விற்றமின் சத்துக்களும் கிடைக்கின்றன.