உங்கள் பிள்ளைகளின் ஆக்கத் திறன்களைத் தூண்டக் கூடிய ஒரு முறையே சித்திரம் வரைவதாகும். அவர்கள் சித்திரம் வரையும் போது
பல்வேறு பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். அவற்றைக் கையாளும் போது பல புதிய சிந்தனைகள் தோன்றும்.
சிறுவர்களின் மன உணர்வுகளும், அவற்றை வெளியிடும் பாணியும் நேரடித் தொடர்புடையவை எனச் சில சிறுவர் சித்திர வல்லுனர்கள் நம்புகின்றனர். சித்திரங்களால் காட்டப்படும் வெளிப்பாடுளின் அடிப்படையில் சிறுவர்களைப் பிரதானமான இரு பிரிவுகளாகப் பிரிக்க முடியும் என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
1. கட்புல வகை (Visual)
2. ஸ்பரிச வகை (Haptic)
கட்புல வகை சிறுவர்கள்:
இவ்வகையான சிறுவர்கள் ஆக்கம் தொடர்பான தூண்டுதல் சுற்றாடலின் மூலமே கிடைக்கின்றது. சுற்றாடலில் காணப்படும் பொருட்கள், விலங்குகள், நிகழ்வுகள் தொடர்பாக ஏற்படும் எண்ணக் கருக்களை (Concept) விருத்தி செய்வதில் அவர்களின் கண்கள் பிரதான இடம் வகிக்கிறது.
ஸ்பரிச வகை சிறுவர்கள்:
உடல் ரீதியாகக் கூர்மையான புலனுணர்வைக் காட்டுவர். அவர்களின் கவனம் புறச் சூழலில் இருக்காது. ஒரு பொருளைத் தொடும் பொது ஏற்படும் உணர்வையும் தமது உள்ளுணர்வுகளையுமே அவர்கள் வெளிப்படுத்துவர். எண்ணக் கருக்களை வெளிப்படுத்துவதில் தொடுகை முதலிடம் பெறுகின்றது. இவர்களைப் பொறுத்தவரையில் கண்கள் பிரதான இடத்தை வகிப்பதில்லை.
கால்யூன் என்னும் உளவியலாளர் ஒருவரின் ஆர்வம், விருப்பு, பிடிப்பு, ஈர்க்கப்படும் அம்சங்களின் அடிப்படையில் பிள்ளைகளை இரு பிரிவுகளாக வகுத்துள்ளார்.
1. புறச் சார்புடையோர்: ஒருவரின் ஆர்வம், விருப்பு பிடிப்பு புறச் சூழலின் பால் ஈர்க்கப்படல்.
2. அகச் சார்புடையோர்: பிரதானமாக ஒருவரின் அகச் சிந்தனை உலகின் பால் ஈர்க்கப்படல்.
ஹேபேட் அட் என்பவர் சிறுவர்களின் சித்திரங்களை ஆய்வுக்கு உட்படுத்தி அவர்களின் சித்திரப் பாணிகளை எட்டாக வகைப்படுத்தினார்.
1.சேதன மயமானது
2. விபரண ரீதியானது
3. மனப் பதிவு சார்ந்தது
4.உளவியல் ரீதியானது
5.ஒத்திசைக் கோலம் சார்ந்தது
6.கற்பனை சார்ந்தது
7.அலங்கார மயமானது
8.அமைப்பு மாதிரியானது
சேதன மயமானது (Organic)
ஒரு சம்பவத்தின் அல்லது பொருளின் உயிர்ப்பான தன்மைகளை அவதானித்து அதன் தன்மையை மதித்து அதன் மூலம் திருப்தி பெறுவார்கள். ஒரு பொருளில் காணப்படும் வெவ்வேறு அம்சங்களையும் அவற்றுக்கிடையேயான அன்னியோன்னியத் தொடர்புகளையும் அத்தியாவசிய அம்சங் களையும் தொடர்பு களையும் இனங்கண்டு தமது சித்திரங்களில் வலியுறுத்திக் காட்டுவார்கள்.
விபரண ரீதியானது (Enumerative)
சிறுவரின் ஈடுபாடுகள் தேவைகள், விருப்பு வெறுப்புக்கள், மனப்பாங்கு கள் ஆகியவை அவர்கள் புற உலகை கிரகித்துக் கொள்வதில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாததால் வெளிப்பாடு முற்றுமுழுதாகக் குறிப்பிட்ட விடயம் தொடர்பான தன்மையைக் காட்டும்.
மனப் பதிவு சார்ந்தது (Impressionistic)
வெளியுலகின் பொருட்கள், சம்பவங்கள் என்பன தொடர்பாக மனதில் தோன்றும் உணர்வு சார்ந்த மன உணர்வுகளை மீண்டும் விளக்கி அப்பொருட்களிலும், சம்பவங்களிலும் பிரதிபலிக்கும். சித்திரத்தை வரைபவரின் மன உணர்வுகள் பிரதிபலிப்பதால் பொருளின் அடிப்படைத் தன்மை திரிபடைகிறது.
உளவியல் ரீதியானது (Haptic)
புறச் சூழலில் இருந்து பெறப்படும் ஸ்பரிச உணர்வுகளுக்கும், புலன்களின் உதவியுடன் ஏற்படும் சுக துக்க உணர்வுகளுக்கும் உருவம் கொடுப்பார்கள். இவ் வெளிக்காட்டல் முழுமையாக தனியாள் சார்ந்ததாகக் காணப்படும்.
ஒத்திசைக் கோலம் சார்ந்தது (Rhythmic Patterns)
மனதில் நிலவுகின்ற உள்ளார்ந்த ஒழுங்கமைப்புத் திறனை இது குறிக்கின்றது. புறச் சூழலிலிருந்து பெற்றுக் கொள்ளும் அம்சங்களை (மலர்கள், மரங்கள், விலங்குகள், மனிதர்கள்) போன்ற பின்னணியின் மீது மீண்டும் மீண்டும் (ஒத்திசைவாக) வரைவதன் மூலம் கோலம் ஒன்றினை வெளிக்கொணர்தல் இம்முறையின் முக்கிய தன்மையாகும்.
கற்பனை சார்ந்தது (magnative)
கற்பனை ரீதியில் ஆக்கப்பட்ட இவ்வுருக்கள் யதார்த்த உலகின் பொருட்கள், சம்பவங்கள் போன்றவற்றிற்கு ஒத்ததாகக் காணப்படமாட்டாது. உள ரீதியில் வரையப்பட்ட சித்திரங்கள் அபூர்வமானவையாக அமையும். இதன் விளைவாக அவை உயிர்ப்பான தன்மையைக் காட்டும்.
அலங்கார மயமானது (Decorative)
இரு பரிமாண வடிவங்களையும் வர்ணங்களையும் பயன்படுத்தி அலங்காரக் கோலங்களையும், உருவமைப்புக்களையும் வரைதலே இதுவாகும்.
அமைப்பு மாதிரியானது (Structural Form)
மனதில் இருக்கும் ஒழுங்கமைந்த திறன்களால் இச் சித்திரங்கள் வரையப்படுகின்றது..