Saturday, January 18, 2025
Homeகல்விகட்டுரைசிறுவர் சிறு கட்டுரைகள்

சிறுவர் சிறு கட்டுரைகள்

- Advertisement -

எனக்குச் சிறகு இருந்தால்…

- Advertisement -

அன்று ஞாயிற்றுக்கிழமை. எங்கள் பூந்தோட்டத்திற்கு நீர் ஊற்றிக் கொண்டிருந்தேன். அப்போது பூந்தோட்டத்தில் அங்குமிங்குமாகச் சிட்டுக்குருவிகள் சில பறந்து கொண்டிருந்தன. பூக்களில் தேன் உண்ண அவை சுற்றிச் சுழன்ற வண்ணம் இருந்தன. இக்காட்சி எனது மனதில் ஒரு கற்பனை உணர்வை ஏற்படுத்திற்று. எனக்குச் சிறகு முளைத்தால்எப்படியிருப்பேன் என்று சிந்தித்தேன்.நான் ஒரு பறவையானால் எந்தன் சிறகின் துணை கொண்டு எங்கும் பறந்து செல்வேன். ஆறு, மலைகள் எல்லாம் கடந்து ஆகாய வெளியில் ஆனந்த நடனமிடுவேன். முன்னர் எட்ட நின்று பார்த்த இடங்களையெல்லாம் கிட்டச் சென்று பார்ப்பேன்.அதிகாலை வேளையில் எனது இனிய ஓசையால் மக்களைத் துயில் எழுப்புவேன். வயல் வெளிகளிலும் தோட்ட நிலங்களிலும் புகுந்து தானியங்களையும், பழவகைகளையும் கொத்தி உண்பேன்.என் நண்பர்களுடன் கூடிப் பசுந்தரைகள், கடற்கரைகள், மலையடிவாரங்கள் எங்கும் பவனி வருவேன். இயற்கைக் காட்சிகளைக் கண்டு இன்புறுவேன். எவ்வித கலலையுமின்றி எங்கும் சுற்றுலாச் செல்வேன்.இப்படி எண்ணிய வண்ணமிருந்த போது மழைத்தூறல்கள் என் மேனியிற் பட்டன. என் கற்பனை கலைந்தது. மழையில் நனைய வேண்டி ஏற்படுமே என்று எண்ணினேன். உடனே வீடு நோக்கிப் புறப்பட்டேன். எனது இனிய கற்பனையை நினைத்து நினைத்து இன்புற்றேன்.

எனது செல்லப் பிராணி

- Advertisement -

நான் அன்போடு வளர்க்கும் பிராணி மீனு. அதுவே என் செல்லப் பிராணி. பால் போன்ற நிறம். பஞ்சு போன்ற மெல்லிய உடல், பார்க்க ஆனந்தம் அளிக்கும் வண்ணத் தோற்றம் என்னைக் கண்டதும் சுற்றிச் சுற்றி ஓடிவரும் என் அன்புப் பூனைக்குட்டி இது.

- Advertisement -

எனக்கு இதன் மேல் கொள்ளை ஆசை. பெரிய கண்களை உருட்டி உருட்டி அது என்னைப் பார்க்கும். நான் அதற்குப் பாலும் சோறும் உண்ணக் கொடுப்பேன். நான் உணவு உண்ணும்போது என்னோடு அதுவும் அருகில் இருந்து சாப்பிடும். சாப்பிட்டு முடிந்ததும் என் மடியில் ஒரு குழந்தை போல அது படுத்து உறங்கும்.

நான் பாடசாலை சென்றுவிட்டு வீடு வந்து வாசற்படியில் ஏறும்போது என்னை வரவேற்க அம்மாவுடன் என் மீனுவும் வந்து நிற்கும். மாலைவேளைகளில் நானும் மீனுவும் தோட்டத்திற்குச் செல்வோம். பந்தை உருட்டி விளையாடுவோம். மீனு கட்டையான தனது கால்களினால் பந்தை உருட்டி விளையாடுவது பார்க்க ஆனந்தமாயிருக்கும்.

மீனு தன் கால் நகங்களை மரத்திலே தேய்த்துக் கூராக்கும். மரத்திலே பாய்ந்து ஏறும். பின் துள்ளித் துள்ளி என்னிடம் ஓடி வரும். அதன் செய்கைகளைப் பார்ப்பதில் எனக்கு நல்ல விருப்பம். எனது செல்லப் பிராணியான மீனுவை என்னால் என்றுமே மறக்க முடியாது.

கல்வி

கல்வி என்பது மனிதனுக்கு அறிவுட்டும் ஒளி விளக்குப் போன்றது. மனிதரிடத்துள்ள அறியாமையைப் போக்கி நல்வழி காட்டவல்லது. கற்றறிந்தவனே கண்ணுடையவனாகக் கருதப்படுவான். கல்வி அறிவில்லாதவன் கண்கள் இருந்தும் கண்கள் அற்றவன் எனக் கருதப்படுவான்.

“கண்ணுடைய ரென்பர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லாதவர்” என்கிறது திருக்குறள். எனவே மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் கற்க வேண்டியவற்றைக் கற்று கற்ற நெறிப்படி ஒழுகுதல் வேண்டும். இதனையே திருவள்ளுவரும்,

“கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” என்கிறார். கற்கவேண்டியவற்றைக் கற்கும் பருவத்திலேயே நாம் கற்க வேண்டும். உலகில் இருவகைச் செல்வங்கள் உள்ளன. ஒன்று கல்விச் செல்வம் மற்றையது பொருட்செல்வம். பொருட்செல்வம் பிறருக்குக் கொடுக்குந் தோறும் குறைவடையும்.

வெள்ளத்தால், நெருப்பால் அழியக் கூடியது. கள்வரால் கவரக்கூடியது. எவ்வளவு பொருட் செல்வத்தை நாம் தேடி வைத்தாலும் அவை நிலைப்பதில்லை. ஆனால் கல்விச் செல்வமானது நிலையானது. அழியாதது. கல்விச் செல்வமானது பிறருக்குக் கொடுக்குந்தோறும் பெருகிக் கொண்டே செல்லும்.

கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்புண்டு. ஒருவனுக்குக் கல்வி அழகே உண்மையான அழகாகும். கல்வி அழகைப் பெறுவதற்கு நாம் முயற்சிக்கவேண்டும். கல்வி அறிவாலேயே நாமும், நாடும் முன்னேற முடியும். இதனை நன்குணர்ந்து கல்விச் செல்வத்தைப் பெருக்கிக் கொள்ள நாம் ஒவ்வொருவரும் முயற்சித்தல் வேண்டும்.

தேடி நிதம் பூக்களில்

தேன் சேர்க்கும் தேனிபோல்

தேர்ந்து நல்ல கல்வியைத்

தேடி நாமும் கற்போமே.

 

செய்ந்நன்றி மறவோம்

“நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி என்று தருங்கொல் என வேண்டா – நின்று தளரா வளர் தெங்கு தாளுண்டநீரைத் தலையாலே தான் தருதலால்”

என்று செய்ந்நன்றி மறவாமைக்கு எடுத்துக்காட்டு கூறுகின்றார் ஒளவையார்.

ஒருவர் செய்த நன்றியை நாம் உயிருள்ளவரை மறத்தல் கூடாது. செய்யப்பட்ட உதவி சிறிதாயினும் அதனை நாம் பெரிதாக மதித்துப் போற்றுதல் வேண்டும்.

தென்னம்பிள்ளைக்கு நீர் ஊற்றி வளர்க்கிறோம். அது உடனே நமக்குப் பயன் தரும் என்று எதிர்பார்ப்பதில்லை. ஆனால் அது வளர்ந்ததன் பின்னர் அடி வேர்களினால், தான் உண்ட நீருக்குப் பதிலாக இனிமையான இளநீராக நமக்குத் தந்துதவுகிறது. தாளுண்டநீரைத் தலையாலே தருகின்றது என்கிறார் ஒளவையார். எனவே பயனை எதிர்பார்த்து நாம் பிறருக்கு உதவிசெய்தல் கூடாது. பயன் கருதாது செய்யும் உதவியே உதவியாகும்.

பிறர் நமக்குச் செய்யும் சிறிய உதவியையும் நாம் மறக்கக்கூடாது. சிறிய உதவியேயாயினும் தக்க தருணத்தில் அது நம்மைக் காத்திட உதவிடலாம். எனவே தான் திருவள்ளுவரும் “காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும், ஞாலத்தின் மாணப் பெரிது” என்கிறார்.

தக்கதருணத்தில் செய்யப்பட்ட உதவி சிறிதாயினும் அது இப் பூமியிலும் பெரிதாகக் கருதிப் போற்றப்படவேண்டும் என்பது வள்ளுவர் வலியுறுத்தும் கருத்தாகும்.

இதனை ஒரு உதாரணம் மூலம் விளங்கிக் கொள்ளலாம். தாகத்தால் தவிக்கும் ஒருவனுக்கு எவ்வளவு பொன்னைக் கொடுத்தாலும் அவனது தாகம் தணியப் போவதில்லை. அவ் வேளையில் அவனுக்குச் சிறிதளவு நீரைக் கொடுத்தாலே போதுமானது. அவ்வேளையில் அச் சிறிதளவு நீரின் பெறுமானம் பொன்னைவிட உயர்ந்த பெறுமானம் மிக்கதாகும்.

இதன் மூலம் தக்க தருணத்தில் செய்யும் உதவியே மிகமிகப் பெரியது என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

நமது பெற்றோர் கைம்மாறு கருதாது நமக்கு எவ்வளவோ உதவிகளைச் செய்கிறார்கள். அவர்கள் செய்த உதவிகளை நாம் வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் போற்ற வேண்டும். அவர்களைக் கண்கண்ட தெய்வங்களாக மதிக்க வேண்டும். இதனாலேயே அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என ஆன்றோர்கள் சொல்லி வைத்தனர்.

பிறர் நமக்குச் செய்த உதவியை ஒரு போதுமே மறக்கக்கூடாது. எதனையும் நாம் மறந்து போகலாம். ஆனால் செய்ந்நன்றியை நாம் மறத்தல் ஆகாது.

‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம், உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு” என்னும் வள்ளவர் வாக்கும் இதனையே வலியுறுத்துகிறது.

நன்றிமறவாது நல்லவர்களாக வாழ்வோம்.

நான் பார்த்த திருவிழா

அன்று புதன்கிழமை, நல்லூர்க் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா. அதிகாலை ஐந்து மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டேன். என்னுடன் அப்பாவும் அம்மாவும் தம்பியும் வந்தனர். காலை ஆறு மணிக்கு ஆலயத்தை வந்தடைந்துவிட்டோம். நாலாபுறமும் பக்தர்கள் கூட்டம் உள்ளே செல்ல முடியவில்லை. கோபுர வாயிலின் வெளியே நின்று முருகனைத் தரிசித்தோம்.

எங்களைப்போல் பல்லாயிரக்கணக்கானோர் அங்கு திரண்டு நின்றனர். சரியாகக் காலை எட்டுமணிக்கு முருகப்பெருமான் பக்தர்கள் புடைசூழ, மேளவாத்தியங்கள் முழங்க, கோபுர வாயிலைக் கடந்து வந்து அழகிய தேரில் எழுந்தருளினார். அப்பொழுது அரோகரா’ என்ற கோஷம் விண்ணதிர ஒலித்துக் கொண்டிருந்தது.

நாலாபுறமும் திரும்பிப் பார்த்தேன். பார்க்குமிடமெங்கும் பக்தர் கூட்டமே தென்பட்டது. கற்பூர தீபம் ஏந்துவோர் ஒரு புறம், திருமுறைகளைப் பாடுவோர் மறுபுறம், நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவோர் தேரின் பின்புறம், எங்கும் பக்தி மயமான சூழ்நிலையே தென்பட்டது.

தேரில் முருகப் பெருமான் எழுந்தருளிய பின் குருக்கள் கிரியைகளை நடத்தினார். பின்னர் மணி ஒலித்தது. தேரில் பூட்டப்பட்டிருந்த பெரிய வடத்தைப் பக்தர்கள் கரந்தொட்டு இழுத்தனர். அரோகரா என்ற கோஷம் எங்கும் எதிரொலித்தது. தேர் மெல்ல அசைந்தது. பக்தர்கள் அதன் முன்னும் பின்னும் சென்ற வண்ணமிருந்தனர்.

தெற்கு மேற்கு, வடக்கு வீதி வழியாகத் தேர் மெல்ல மெல்ல அசைந்து சென்று கோபுர வாயிலின் கிழக்குப் பக்கத்தில் தேர்முட்டிக்கு அருகில் நின்றது. அங்கு அடியார்கள் தேர் அர்ச்சனை செய்தனர் நாங்களும் அர்ச்சனை செய்வித்தோம். பின்னர் குருக்களிடம் விபூதிப் பிரசாதம் பெற்றுக் கொண்டு பகல் பத்து மணியளவில் வீடு திரும்பினோம். என் வாழ்நாளில் இத்தகைய பெருங் கூட்டத்தை இத்தேர்த் திருவிழாவிற்றான் கண்டேன். நான் பார்த்த இத் திருவிழாவை என்றும் மறக்க முடியாதுள்ளது.

பாடசாலையில் எனது முதல் நாள் அனுபவம்

அப்பொழுது எனக்கு ஐந்து வயதிருக்கும், என்னைப் பெற்றோர்கள் பாடசாலைக்கு அனுப்ப விரும்பினார்கள். எனக்கும் ஒரே ஆசை புத்தகப் பைதனைத் தோளில் போட்டு, தண்ணீர்ப் போத்தலையும் மாட்டிக் கொண்டு. சப்பாத்து தொப்பி எல்லாம் அணிந்து பாடசாலைக்குப் படிக்கச் செல்ல வேண்டுமென்று விரும்பினேன். எல்லாப் பொருட்களும் அப்பா வாங்கித் தந்துவிட்டார். எனக்குப் பாடசாலை செல்லும் நாள் எப்பொழுது வரும் என்றிருந்தது.

அந்நாளும் வந்தது. எனக்கு ஒரே மகிழ்ச்சி. அன்று காலை என்னை அம்மா நீராட்டினார். புதுச்சட்டை அணிவித்தார். தலைவாரி பொட்டிட்டார். சப்பாத்து, தொப்பி எல்லாம் போட்டாகி விட்டது. நான் பாடசாலைக்குப் போகிறேன் என்று நினைக்கவே பெரும் ஆனந்தமாயிருந்தது.

அப்பா என்னை அழைத்துக் கொண்டு பாடசாலைக்கு வந்தார். நான் அப்பாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு துள்ளித் துள்ளி நடந்தேன் பாடசாலையும் வந்து விட்டது. அங்கே சிறிய பெரிய மாணவர்கள் பலர் நின்றார்கள். அதிபரின் அலுவலகத்திற்கு அப்பா என்னை அழைத்துச் சென்றார். அதிபர் அலுவலகத்திற்குச் சென்றவுடனேயே என்னைப் பயம் பிடித்துக் கொண்டது. அதிபர் அவர்கள் என் கையைப் பிடித்து மெல்ல உங்கள் பெயர் என்ன? என்று கேட்டார். எனக்கு என் பெயரே மறந்து விட்டது போலிருந்தது. அப்பாவிற்கு அருகில் போய் நின்று கொண்டேன்.

பின்பு அப்பாவும், அதிபரும் ஏதோ கதைத்தார்கள். பின் அப்பா என்னைப் பாலர் வகுப்பிற்கு அழைத்து வந்தார். எனக்குப் பயத்தினால் உடம்பே விறைத்து விட்டாற் போலிருந்தது. பாலர் வகுப்பு ஆசிரியை என்னை அன்புடன் அழைத்து ஒரு ஆசனத்தில் அமரச் செய்தார். எல்லா மாணவர்களும் என்னையே பார்த்தார்கள் எனக்கு இன்னும் பயம் அதிகரித்து விட்டது.

உடனே ஆசனத்தை விட்டெழுந்து நின்று விட்டேன். அப்பா எனக்கருகே வந்து இடத்திலே இருந்து நன்றாகப் படிக்க வேண்டுமென்று தட்டிக் கொடுத்தார். பின்பு வந்து கூட்டிச் செல்வதாகக் கூறிச் சென்று விட்டார்.

எனக்கு அழுகை வந்துவிட்டது. விக்கி விக்கி அழுதேன். அப்போது அந்த ஆசிரியை என்னைத் தன் அருகிலே அழைத்து அன்பாகக் கதைத்து என்னை அழாதிருக்கும்படி செய்தார். அதன் பின்னர் நான் அழாமல் இருந்து படித்தேன். என்றாலும் மனப் பயம் விட்டு நீங்கவில்லை.

பின்பு பன்னிரண்டு மணியளவில் பாடசாலை விட்டது. அப்பாவுடன் வீடு வந்து சேர்ந்தேன். இன்றும் கூட அந்த முதல் நாள் அனுபவத்தை நினைக்க என் உள்ளம் மகிழ்ச்சியடைகிறது.

மலர்கள்

மலர்கள் அழகானவை. அவை கண்ணுக்குக் கவர்ச்சியையும் மனதுக்கு மகிழ்ச்சியையும் தருகின்றன. மலர்களில் மயங்காதோர் எவருமிலர். மனிதர் முதல் வண்டுகள் வரை மலர்களின் அழகில் மயங்குவதை நாம் காண்கிறோம். அழகை விரும்பும் அனைவரும் மலர்களை விரும்புவர். இது உண்மை.

siruvar katturai

மலர்கள் இயற்கை அளிக்கும் பெரும் செல்வங்களாகும். ஆயிரமாயிரம் மலர்களை இப்பூமியில் நாம் காண்கிறோம். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமானவை. பல பல வடிவங்களில் பல பல வர்ணங்களில் மலர்கள் மலர்கின்றன. மக்கள் மனதைக் கொள்ளை கொள்கின்றன. மணம் வீசுகின்றன.

மல்லிகை, முல்லை, றோஜா, தாமரை, சூரியகாந்தி, செம்பருத்தி, அல்லி, நித்திய கல்யாணி, செவ்வந்தி, எக்ஸ்சோறா, அந்தூரியம், கனகாம்பரம், தேமாப்பூ, கடதாசிப்பூ போன்றன நாம் விரும்பும் மலர்களில் சிலவாகும். மலர்களால் மக்கள் பெரும் பயனடைகின்றனர். தேனீக்கள் மலர்களை நாடித் தேனருந்துகின்றன. அவற்றின் மூலம் மகரந்தச் சேர்க்கை ஏற்படுகிறது. மலர்கள் இறைவனின் பூசைக்குப் பயன்படுகின்றன.

மாலைகள் கட்ட உதவுகின்றன. மலர்கள் நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. வாசனைத் தைலங்கள் வடித்தெடுக்கவும் மலர்கள் உதவுகின்றன. மலர்களால் மக்கள் வருமானத் தைப் பெறுகிறார்கள் , வெளிநாடுகளுக்கு மலர்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் பெருமளவு அந்நியச் செலவாணியைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பும் கிட்டுகிறது.

எந்த மரமும் மலர்களின்றிக் காய்ப்பதில்லை, பூவாகிக் காயாகிக் கனியாவதே இயற்கை நியதியாகும். இதன் மூலம் பூவின் முக்கியத்துவம் புலனாகிறது. மக்கள் மலர்களை விரும்பிச் சூடிக் கொள்வர், அழகிய முகத்தைப் புலவர்கள் மலர் போன்ற முகமென வர்ணிப்பர்.

மலர்களைப் பற்றிப் பாடாத புலவர்களே இல்லையெனலாம். மன்னர் மணிமுடி முதல் மங்கையர் கூந்தல்வரை வீற்றிருக்கும் பெருமை மிக்கன மலர்களாகும். மலர்ச்செடிகளைப் பலர் தங்கள் வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கிறார்கள். இதனைத் தங்கள் பொழுது போக்காகவும் கொள்கிறார்கள். மலர்செடிகள் வளர்ப்பதன் மூலம் நாம் பெரும் பயன் பெற முடியும் என்பதை உணர்ந்து செயப்படுவோமாக.!

மழைநாள்

அன்று ஒரு வெள்ளிக்கிழமை, காலை எழு மணிக்குப் பாடசாலைக்குப் புறப்பட்டேன். வானம் இருண்டு காட்சியளித்தது. குளிர் காற்று வீசியது. புத்தகப் பையைத் தோளில் மாட்டிக்கொண்டு குடையைக் கையில் பிடித்தபடி பாடசாலை நோக்கி நடக்கத் தொடங்கினேன். சிறிது தூரம் சென்றிருப்பேன். பளிச் பளிச் என்று வானில் மின்னல்கள் தோன்றின. பலத்த இடிமுழக்கம். பயந்துவிட்டேன்.

மழை ‘சோ” வெனப் பொழியத் தொடங்கியது. குடையை விரித்துப் பிடித்துக் கொண்டு மெல்ல மெல்ல நடந்து கொண்டிருந்தேன். மழையின் வேகம் அதிகரித்தது. வீதி எங்கும் வெள்ளம். காற்றின் வேகத்துக்கு எனது குடை ஈடு கொடுக்க முடியாது சுழலத் தொடங்கியது. வீதியோரமாக உள்ள கடையொன்றின் விறாந்தையில் புகுந்து நின்று கொண்டேன்.

மழை தொடர்ந்து பொழிந்து கொண்டே இருந்தது. எனது உடையெல்லாம் நனைந்து சேறும் படிந்து விட்டது. வீதியிற் செல்வோரெல்லாம் மழைக்கு அஞ்சி அயலில் உள்ள வீடுகளுக்குள் தஞ்சம் புகுந்தனர். காலை பத்துமணியாகியும் மழை ஓயவில்லை.

பார்க்குமிடமெங்கும் வெள்ளக் காடாகவே காட்சியளித்தது. பாடசாலை செல்ல வந்த மாணவர்கள் எல்லாம் மழையில் நனைந்தபடி தங்கள் வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். வெள்ளப் பெருக்கினால் வீதிகளில் மோட்டார் வாகனங்களே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

நான் எப்படி வீடு திரும்புவது? என்று யோசித்த வண்ணம் அந்தக் கடைக் கட்டிடத்தின் முன்னே நின்று கொண்டிருந்தேன். காலை பதினொரு மணியளவில் மழை சற்றுக் குறைந்தது. குடையை விரித்துப் பிடித்துக் கொண்டு வீதியில் மெல்ல மெல்ல வீடு நோக்கி நடந்தேன். இடைவழியில் எனது அம்மா என்னைத் தேடிய வண்ணம் வந்து கொண்டிருந்தார். அவரைக் கண்டதும் எனது பயம் அகன்று விட்டது. அம்மாவின் கையைப் பிடித்தபடி வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

காலையில் வயலுக்குச் சென்றிருந்த எனது அப்பா நண்பகல் வீடு வந்து சேர்ந்தார். நெல் வயல்கள் எல்லாம் வெள்ளத்தால் பெரும் சேதமடைந்து விட்டதாகவும் ஐந்து மண்வீடுகள் வெள்ளப் பெருக்கால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மழை மக்களுக்கு நன்மையளிப்பது போலச் சிலவேளைகளில் பெரும் பாதிப்பையும் ஏற்படுத்தி விடுகிறது என்ற உண்மையை மழை நாளில் நான் நன்கு உணர்ந்து கொண்டேன். அந்த மழை நாளில் நான் பட்ட வேதனையை இன்றுகூட மறக்கமுடியவில்லை.

எனது முதற் புகைவண்டிப் பிரயாணம்

சென்ற ஆண்டு இறுதியில் ஐந்தாம் வகுப்புத் தேர்வில் சிறப்பாகச் சித்தியடைந்தேன். அதனால் எண் அண்ணா மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். என்னைத் தன்னுடன் மார்கழி விடுமுறையில் கண்டிக்குக் கூட்டிச் செல்வதாகக் கூறினார். அதைக் கேட்ட போது நான் துள்ளிக் குதித்தேன். மார்கழி பத்தாம்நாள் உடரட்ட மெனிக்கேயில் செல்வதாக அவர் கூறினார். அந்த நாளும் வந்தது.

siruvar katturai

முதல்நாள் அதிகாலையில் நாங்கள் கொழும்பு நோக்கி பிரயாணத்துக்கு ஆயத்தமானோம். அம்மாவும், அப்பாவும் எங்களை வழியனுப்பி வைத்தனர். அங்கு சென்று அடுத்த நாள் அண்ணாவுடன் நான் கோட்டைப் புகையிரத நிலையத்தை அடைந்தேன். பிரயாணச் சீட்டுப் பெற்றுக் கொண்டதன் பின்னர் நாங்கள் உள்ளே சென்றோம்.

புகையிரதம் வருவதற்கு நேரம் இருந்தது. அதனால், அங்குள்ள புகையிரத மேடையில் உள்ள இருக்கையொன்றில் அமர்ந்தோம். சிறிது நேரத்தில் புகைவண்டியின் ஊதுகுழல் சத்தம் கேட்டது. புகைவண்டி மேடையில் நின்றதும் மக்கள் ஆரவாரத்தோடு ஒருவரை ஒருவர் தள்ளியும் நெருக்கியும் உள்ளே ஏறினர்.

அவர்களிற் சிலர் வசதியான இடங்களில் அமர்ந்து புன்முறுவல் பூத்தனர். சிலர் வசதியான இடம் கிடைக்காமல் முகம் சோர்ந்தனர். என் அண்ணா எப்படியோ வசதியான இடம் பிடித்து என்னை யன்னல் அருகில் அமரும்படி செய்தார்.

வண்டி நீண்ட குரல் எழுப்பிக்கொண்டு புறப்பட்டது. நான் சாளரத்தின் வழியாக வெளிக் காட்சிகளைப் பார்த்தேன். சோலைகள் கண்கொள்ளாக் காட்சியாக விளங்கின. இடையிடையே நீர் நிறைந்த பசுமையான வயல்வெளிகள் தோன்றின. குரங்குகள் மரங்களிலே தாவித் திரிந்தன. சிறு சிறு வீடுகளும் பரந்த வயல் வெளிகளும் காணப்பட்டன. சிறிய மலைகளும் தேயிலைத் தோட்டங்களும் தென்பட்டன. அவை பச்சைக் கம்பளம் போர்த்தமை போல் காட்சியளித்தன. வண்டியினுள்ளே சிலர் அமர்ந்து தூங்கினர். புகைவண்டி இருப்புப் பாதையில் வளைந்து வளைந்து ஓடிக்கொண்டிருந்தது.

சிலர் சிரித்துப் பேசி மகிழ்ந்தனர். சிலர் ஒருவரோடொருவர் வாக்குவாதம் புரிந்தனர். சிலர் பத்திரிகை படித்தனர். புகைவண்டி கடுகண்ணாவை நிலையத்திலே சிறிது நேரம் தங்கிப் புறப்பட்டது. இனி கண்டி வந்துவிடும் என்றார் அண்ணா. அரைமணி நேரம் கழிந்ததும் பெரிய பாலம் ஒன்று என் கண்ணிற் பட்டது. பேராதனையை நெருங்கி விட்டோம் என்று எண்ணினேன்.

சில நிமிடங்களில் வண்டி கண்டிப் புகையிரத நிலையத்தை அடைந்தது. நாங்கள் பொருட்களுடன் இறங்கினோம். கண்டி மாநகரம் அழகொளிரக் காட்சி தந்தது. தலதா மாளிகை, கண்டி வாவி ஆகியவற்றைப் பார்த்து ஆனந்தமடைந்தேன்.

இதுதான் எனது முதற் புகைவண்டிப் பிரயாணம் ஆகும். அந்த அனுபவத்தால் நான் மகிழ்ச்சி அடைந்தேன்.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.