650 செயற்கைக்கோள்கள் வாயிலாக, அடுத்த ஆண்டுக்குள் உலகளாவிய வணிக இணைய சேவையை தொடங்க ஒன்வெப் திட்டமிட்டுள்ளது.
ரஷியாவின் விண்வெளி ஆய்வு மையம் இன்று சோயுஸ் விண்கலம் மூலம், பிரிட்டனைச் சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 36 தொலைத்தொடர்பு மற்றும் இணையதள செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியது. வெற்றிகரமாக புறப்பட்டுச் சென்ற ராக்கெட், புவி சுற்றுவட்டப் பாதையை அடைந்ததும், செயற்கைக் கோள்கள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டு, அவற்றுக்கான பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.
லண்டனை தலைமையிடமாகக் கொண்ட ஒன்வெப் நிறுவனம், உலகின் பல்வேறு நாடுகளுக்கு மேம்படுத்தப்பட்ட பிராட்பேண்ட் மற்றும் பிற சேவைகளை வழங்கும் வகையிலான குறைந்த சுற்றுப்பாதை கொண்ட செயற்கைக்கோள்களை கட்டமைத்து வருகிறது. செயற்கைக்கோள்கள் வாயிலாக உலகின் தொலைதூர பகுதிகளுக்கு விரைவான இணைய சேவையை வழங்குவதற்காக தொழில்நுட்ப கோடீஸ்வரர் எலோன் மஸ்க் மற்றும் அமேசானின் ஜெஃப் பெசோஸ் ஆகியோருடன் இந்த நிறுவனம் போட்டியிடுகிறது.
மொத்தம் 650 செயற்கைக்கோள்கள் வாயிலாக, அடுத்த ஆண்டுக்குள் உலகளாவிய வணிக இணைய சேவையை தொடங்க ஒன்வெப் திட்டமிட்டுள்ளது. இதற்காக பல்வேறு நாடுகளின் விண்வெளி ஆய்வு மையங்கள் மூலமாக செயற்கைக் கோள்களை அனுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.