நம் வீடு தேடிவந்து இயற்கை வழங்கிச்செல்லும் மழைநீரை வீணாக விட்டுவிட்டு, ஹைஜீனிக் என்ற பெயரில் பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரைப் பருகும் சராசரி மனிதரா நீங்கள்? அப்படியென்றால் இந்தப் பதிவு உங்களுக்கானது.
பூமித் தாயின் புன்னகை!
இங்கே நாம் பேசும் இந்த மனிதர் உங்களுக்கு நிச்சயம் ஆச்சரியத்தைத் தருவதோடு, ஒரு முன்னுதாரணமாகவும் இருப்பார்!
மழையின் அருமை கோடையில் தெரியும், என்பது முன்னோர் வாக்கு. நம் வாழ்வில் எத்தனையோ முறை மழையும் வந்து விட்டது கோடையும் வந்து விட்டது என்றாலும் மழையின் அருமை இன்னும் நமக்குத் தெரியவில்லை, மழைநீரின் அருமையைத் தெரிந்து அதனைச் சேமித்து குடிநீராகவும், மற்ற தேவைக்கும் பயன்படுத்தும் இயற்கை வாழ்வியல் நிபுணர் திரு. சிவசுப்பிரமணியன் அவர்களை ஈஷா விவசாயக்குழு சந்தித்தது. ஐந்து மாதத்திற்கு முன்பு சேகரித்து வைக்கப்பட்ட மழைநீரையே எங்களுக்கு பருகக் கொடுத்தார், தெளிந்த ஆற்று நீர் போல இருந்தது.
இயற்கை சிவா
அவரது இல்லம் ஈரோடு மாவட்டம், பவானி வட்டத்தில் உள்ள ஊராட்சிக்கோட்டை கிராமத்தில் உள்ளது. கிராமத்தில் உள்ள வேதகிரி மலை தன் செழுமையை இழக்காமல் இயற்கை வனப்போடு உள்ளது. சிவா ஐயா அவர்கள் சென்னை IITயில் இயற்பியல் மற்றும் கணினி அறிவியலில் எம்.எஸ்.சி பட்டம் பெற்றவர். தற்போது பணி ஓய்வுக்குப் பிறகு இயற்கை வாழ்வியல் முறையை மக்களுக்குக் கொண்டு செல்வதைத் தன் கடமையாகச் செய்து வருகிறார்.
காணாமல் போன தூய குடிநீர்
1000 லிட்டர் தொட்டிகள் 13 மற்றும், 2000 லிட்டர் தொட்டிகள் 3 வைத்துள்ளேன். மேலும் தரையில் அமைத்துள்ள தொட்டியில் 40,000 லிட்டர் நீர் சேமிக்க முடியும், இந்த அனைத்துத் தொட்டிகளின் மூலமும் 60,000 லிட்டர் தண்ணீரை சேமிக்க முடிகிறது.
தொழிற்சாலை கழிவுகள், குடியிருப்புகளிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், வேதிஉரங்களின் எச்சங்கள் போன்றவை நீர் நிலைகளில் கலப்பதால் உப்புத்தன்மை அதிகரித்தல், மேலும் கடற்கரையோரங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைவதால் உப்புநீர் உள்வாங்குதல், போன்ற பல காரணங்களால் தற்போது கிடைக்கும் குடிநீரும் மேலும் மேலும் மாசடைந்தும், உவர்ப்பாகவும் மாறிவருகிறது.
மேலும் நல்ல குடிநீரும் அவரவர் வீட்டிலோ அல்லது வீட்டின் அருகிலேயோ கிடைப்பதில்லை! வேறு இடங்களுக்குச் சென்று குடிநீரை எடுத்துவர வேண்டிய நிர்ப்பந்தம் நகர்ப்புறங்களில் மட்டுமல்லாது, தற்போது கிராமப்புறங்களிலும் அதிகரித்துள்ளது.
சிலை செய்ய கருங்கல்லும், மழை பெய்ய நல்ல மனசும் வேணுமுன்னு என்ற ஊர்ல பெரியவுக சொல்லுவாங்கோ! இப்பல்லாம் நல்ல மனசுக்காரங்க எங்கைங்கோ இருக்காங்கோ? சுயநலம் அதிகமாகிப் போச்சுங்ணா உலகத்துல! ஆனாலும் நம்ம சிவா ஐயா மாறி ஊருக்கு ஒருத்தர் இருக்கறதனால அப்பப்போ மழை பெய்யுதுனு நினைக்கிறேனுங்க! சரி வாங்க, சிவா ஐயா செய்யுற சேவைகள பத்தி முழுசா கேட்டுப்போட்டு வருவோம்!
மழைநீர் சேகரிப்பும் குடிநீர் சேகரிப்பும்
இத்தகைய நிலையில் பூமிக்கு வரும் மழைநீரைச் சேமிப்பதின் அவசியத்தை அரசாங்கமும், தொண்டு நிறுவனங்களும் பல ஆண்டுகளாக “மழைநீர் சேகரிப்பு திட்டத்தை” (Rain Water Harvesting Plan) செயல்படுத்துவதைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் வலியுறுத்தி வருவதைக் காணமுடிகிறது. மழைநீரை நிலத்தடி நீராகச் சேகரிக்கும்போது படிப்படியாக நிலத்தடி நீரின் மட்டம் உயர்கிறது, மேலும் நீரின் தரமும் மேம்படுகிறது.
மேலும் குடிநீருக்கு இவ்வளவு தட்டுப்பாடு இருக்கும்போது தூய்மையாகக் கிடைக்கும் மழைநீரை குடிநீராகவும் சேமிக்கலாம் அல்லவா, இதைப் பற்றிய புரிதலும், விழிப்புணர்வும் தற்போது அவசியம் தேவை என்பதை எடுத்துக் கூறுகிறார் சிவா ஐயா அவர்கள்.
மேலும் எரிபொருள் இருப்பும் குறைந்து கொண்டே வருவதால் மாற்று முறை எரிசக்திக்கு மாறவேண்டிய கட்டாயச் சூழ்நிலையும் தற்போது ஏற்பட்டுள்ளது. வற்றாத ஆற்றலான சூரிய ஒளி ஆற்றலை ஒவ்வொரு இல்லத்திலும் முழுமையாகப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்திக் கூறுவதோடு அவரது இல்லத்திலேயே இதற்கு முழு செயல் வடிவம் கொடுத்துள்ளார். இந்த அமைப்பை “மழைக் குடிநீர் சேகரிப்புத் திட்டம்” (Drinking Rain Water Harvesting Plan) என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்.
அட அந்த காலத்துல மாசம் மும்மாரி பெய்யும்னு சொல்லி வச்சாங்கோ! இப்போ வருசத்துக்கு மூணு மழை பெய்யறதே ரொம்ப சிரமமா இருக்குதுல்லீங்க?! நம்ம வீடு தேடி வர்ற மாரியம்மன நாம மதிச்சு சேமிச்சு வச்சா நமக்கு குடிநீர் தட்டுப்பாடு இருக்காதுங்க! அட சும்மா சொல்லலீங்க அதுக்கான தொழில்நுட்பம் இருக்குது, வாங்க கோட்டுப்போட்டு வருவோம்!
மழைநீரின் மகத்துவம் உணர்த்தும் ஒரு உதாரண மனிதர்!, mazhaineerin magathuvam unarthum oru utharana manithar
வடிகட்டும் தொட்டி
600 சதுர அடிகள் கொண்ட அவரது இல்லத்தின் மொட்டை மாடியில் இருந்து வரும் நீர் அனைத்தையும் சேமிக்கும்படி வழிவகைகளைச் செய்துள்ளார். முதலில் மொட்டை மாடியில் இருந்து வரும் மழைநீர், வேகம் குறைக்கப்பட்டு, வடிகட்டும் தொட்டிக்கு செல்கிறது. இத்தொட்டியில் வந்து விழும் நீரில் உள்ள அழுக்குகள் வடிகட்டப்பட்டு தூய்மைப்படுத்தப்படுகிறது.
வடிகட்டும் தொட்டி துருப்பிடிக்காத துத்தநாகத் தகட்டினால் (Zinc) செய்யப்பட்டுள்ளது. தொட்டி இரண்டடி நீளம், ஒன்றரை அடி உயரம், ஒன்றரை அடி அகலம் கொண்டது. இதில் கீழிருந்து மேலாக ஜல்லி, மணல் மற்றும் அடுப்புக்கரி போன்றவை அடுக்குகளாக பரப்பப்பட்டுள்ளது. ஒவ்வொரு அடுக்குக்கும் இடையில் நைலான் கொசுவலை உள்ளது, இதனால் வடிகட்டும் பொருட்கள் ஒன்றுடன் ஒன்று கலக்காதவாறு தடுக்கப்படுகிறது.
நீர் சேகரிப்புத் தொட்டிகள்
தூசுகள் வடிகட்டப்பட்ட தூய்மையான நீர், சமையலறை பரண், படுக்கையறை பரண் மற்றும் முற்றங்களில் உள்ள பரண்களிலும் வைக்கப்பட்டுள்ள பிவிசி (PVC) தொட்டிகளில் சேகரிக்கப்பட்டு குடிநீருக்காகவும், மற்ற உபயோகத்துக்கும் பயன்படுகிறது.
இதைப்பற்றி சிவா ஐயா அவர்கள் தெரிவித்தவை “குடிநீருக்குப் பயன்படுத்துவதால், பிவிசி தொட்டிகளின் மேல் சூரிய ஒளி படாமல் இருக்கும் படி அமைக்கப்பட வேண்டும், சூரிய ஒளி படநேர்ந்தால் நீரில் நுண்ணுயிரிகள் பெருகி நீர் பருக முடியாத அளவுக்குக் கெட்டுவிட வாய்ப்புள்ளது.
மேலும் அவ்வப்போது பெய்யும் மழைநீர் தொடர்ந்து சேமிக்கப்படுவதால் குடிநீர் தொடர்ந்து கிடைக்கிறது, 4 பேர் கொண்ட குடும்பத்துக்கு குடிநீருக்கு தேவையான 3000 லிட்டர் கொள்ளளவுள்ள தொட்டி அமைப்பதற்கு ரூபாய் 25 ஆயிரம் மட்டுமே செலவாகும்.”
மழைநீரைச் சேமிக்க திட்டமிட்டு வீடு கட்டுவோம்
வீடு கட்டும்போதே மழை நீர் சேகரிப்புக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளேன், பொதுவாக வீட்டின் உயரம் 10 அடி இருக்கும், எனது வீட்டின் உயரம் 12 அடி, பிவிசி தொட்டிகளை வைக்க வசதியாக பரண் உயரத்தை 3 அடிக்கு பதிலாக, 5 அடியாக அமைத்துள்ளேன்.
1000 லிட்டர் தொட்டிகள் 13 மற்றும், 2000 லிட்டர் தொட்டிகள் 3 வைத்துள்ளேன். மேலும் தரையில் அமைத்துள்ள தொட்டியில் 40,000 லிட்டர் நீர் சேமிக்க முடியும், இந்த அனைத்துத் தொட்டிகளின் மூலமும் 60,000 லிட்டர் தண்ணீரை சேமிக்க முடிகிறது.
மழையின் அளவும் தொட்டியின் எண்ணிக்கையும்
தமிழ்நாட்டில் சராசரி மழையளவு மற்றும் நம் வீட்டின் மொட்டை மாடி பரப்பை கணக்கிட்டு எத்தனை லிட்டர் கொள்ளவுள்ள தொட்டியை அமைக்கவேண்டும் என்று முடிவு செய்யவேண்டும். உதாரணமாக, 600 சதுர அடியுள்ள ஒரு வீட்டிற்கு, தமிழக சராசரி மழையளவு 950மிமீ என்ற அடிப்படையில் கீழ்க்கண்டபடி கணக்கிடுவோம்.
மழை பொழிவைக் கணக்கிடும் முறை
சராசரி மழையளவு 950 மிமீ = 0.950 மீட்டர்
வீட்டின் நீளம் அகலம் = 30 x 20 = 600 சதுர அடி
நீளம் 30 அடி = 9.144 மீட்டர்
அகலம் 20 அடி = 6.096 மீட்டர்
0.950 x 9.144 x 6.096 = 52.954 கனமீட்டர்
ஒரு கனமீட்டர் நீர் = 1000 லிட்டர்
ஒரு வருடத்திற்கு 52954 லிட்டர் நீரை சேமிக்கமுடியும்.
வீட்டின் நீளம் அகலத்துக்கேற்ப மழைநீர் சேமிக்கும் அளவும் மாறுபாடும், மேற்கண்டபடி கணக்கிட்டு தேவையான எண்ணிக்கையில் தொட்டிகளை வைத்துக் கொள்ளலாம். மழைப்பொழிவு அதிகமாக இருக்கும்போது, தொட்டிகளில் நீர் நிறைந்துவிட்டால் மீதி உள்ள நீரை ஆழ்துளைக் கிணற்றில் செல்லும்படி அமைத்துவிட்டால் நிலத்தடி நீரும் உயரும்.
நகரத்தில் உள்ள மக்கள் RO (Reverse Osmosis) முறையில் தூய்மை செய்யப்பட்ட நீரைப் பருகுகின்றனர், இந்த நீரில் நுண்ணூட்டச் சத்துக்கள் எதுவும் இல்லை, அனைத்து உப்புக்களும் நீக்கப்பட்டுவிடுகிறது, இந்த RO நீரை தொடர்ந்து குடிப்பவர்களுக்கு எலும்புகளுக்குத் தேவையான நுண்ணூட்டங்கள் கிடைக்காமல் எலும்புகள் பலவீனமடைகின்றன. மழைநீரைச் சேமித்து பருகுவதினால் RO நீர் பருகுவதைத் தவிர்க்க முடியும்.
அட பாருங்கண்ணா எவ்வளவு வெகரமா மழத் தண்ணிய குடிதண்ணியா மாத்திருக்காப்டி! குடல் காஞ்சா குதிரையும் வைக்கோல திண்ணும்னு என்ற ஊர்ல பெரிய வூட்டு ஆத்தா சொல்லுவாப்டிங்கோ! அதுமாறி நாம வேற வழியில்லாம RO தண்ணியெல்லாம் குடிச்சிட்டு கெடக்கோமுங்க. ஆனா.. கையில வெண்ணெய வச்சிகிட்டு எதுக்குங்ணா நெய்க்கு அலையோணும்? நம்ம வீடுகள்லயும் இதுமாறி செஞ்சு மழத் தண்ணிய தாராளமா குடிக்கலாமுங்க! இந்த கள்ளிப்பட்டி கலைவாணி சொல்றது சரிதாணுங்களே?!
சூரிய ஆற்றலை இல்லத்திலும் பயன்படுத்துங்கள்
அவரது வீட்டிற்கு மின்சார இணைப்பு எதையும் பெறவில்லை. 2500 வாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய சூரியசக்தி தகடுகள் (Solar Panels) நிறுவியுள்ளார், வீட்டின் முழு மின்சாரத் தேவையும் பூர்த்தியாகிறது. அவரது எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கும் சூரிய ஒளி மூலமே சார்ஜ் செய்து கொள்ளும்படி, 200 வாட்ஸ் சோலார் பேனல் இணைத்துள்ளார்.
தமிழ்நாடு தண்ணீர் பற்றாக்குறை இன்றி, நீர் மிகை மாநிலமாக வேண்டும் என்பதே என் கனவு என்றும் அதை நோக்கி ஒவ்வொருவரும் செயல்படவேண்டும் என்பது எனது விரும்பம் என்று தனது உணர்வுகளை அழகாகப் பகிர்ந்து கொண்ட திரு. சிவசுப்பிரமணியன் அவர்களுக்கு ஈஷா விவசாயக்குழு வணக்கங்களைத் தெரிவித்துக்கொண்டு விடைபெற்றது.