இந்தியாவின் தேசத்தந்தை, மகாத்மா என்று அறியப்பட்டவர் காந்தி. இவருடைய அஹிம்சை வழிப்போராட்டத்தைக் கண்டு உலக நாடுகள் அனைத்துமே வியந்து பார்த்து, அதற்கு மதிப்பு கொடுத்ததென்றால், அது அடங்கிப் போவது என்று அர்த்தம் கிடையாது. அது அவருடைய மன உறுதிக்கும் நம்பிக்கைக்கும் இடையே இருக்கின்ற விஷயம் ஆகும். இப்படி அவருடைய செயல்பாடுகள் மட்டுமல்லாது, அவருடைய வார்த்தைகள், எழுத்துக்கள் ஆகியவற்றின் மூலமும் நமக்காக நிறைய விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். அதில் அவர் நம்முடைய பல்வேறு வகையான விஷயங்களுக்கும் சொன்ன பொன்மொழிகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நகைச்சுவை
நகைச்சுவை என்பது எவ்வளவு முக்கியம் என்பது நம் எல்லோருக்குமே தெரியும். நம்முடைய மனதில் உள்ள கவலைகளைப் போக்கவும் நம்முடைய மனதைச் சுத்தமாக வைத்துக் கொள்ளவும் நகைச்சுவை என்பது மிகமிக அவசியம். அதுபற்றி காந்தியடிகள் எ்னன சொல்கிறார் தெரியுமா? “உங்களிடம் வேடிக்கை உணர்வு மட்டும் இல்லையென்றால், நீங்கள் தற்கொலை செய்துகொண்டு வெகுகாலம் ஆகிறது என்று அர்த்தம்” என்று குறிப்பிடுகிறார்.
செயல்
நாம் செய்யலாமா என்று ஒரு விஷயத்தைச் செய்வதற்கு முன்னாடி யோசிப்பதை விட, அதை செய்தால் யாருக்கு நன்மை என்று எதிர்பார்க்காமல் செய்ய வேண்டும் என்பதற்காக, “செயல்தான் முக்கியம்; செயலின் பலனல்ல. நீ சரியானதைத்தான் செய்ய வேண்டும். அது உன் சக்தியாலோ உன் நேரத்தாலோ அமைந்தது அல்ல. பலன்களும் கிடைக்காதிருக்கலாம். அதற்காக நீ மேற்கொண்ட சரியான செயல்களை நிறுத்த முடியுமா? உன் செயல்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்பது உனக்குத் தெரியாமலிருக்கலாம். ஆனால், நீ ஒன்றுமே செய்யாமலிருந்தால் எந்தப் பலனுமே கிடைக்காது” என்று கூறுகிறார்.
உண்மை
எப்போதும் உண்மை மீதான நம்பிக்கை என்பது மிக அவசியம். அதைத்தான் நம்முடைய காந்தியடிகள் “நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் உண்மையான கருத்துக்கு ஆதரவு இல்லையென்றாலும் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. ஏனென்றால் உண்மை என்பது எப்போதும் உண்மையாக மட்டும்தானே இருக்க முடியும்”
அகிம்சை
அகிம்சை நாயகன் என்று சொல்கிறோம். அதுபற்றி அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? இதோ பாருங்க… அகிம்சை என்பது இருதயத்தில் இருக்கவேண்டிய ஒரு பண்பு. அதற்கு மூளையுடன் எந்த தொடர்பும் கிடையாது. வன்முறையை நான் எதிர்க்கிறேன். சில நல்ல காரணங்களுக்காக அவற்றைச் செய்வதாகக் கருதினாலும் அதன் விளைவு இறுதியில் தீமையைத்தான் தரும். அந்த நல்ல காரணம் தற்காலிகமாகவும் தீமை நீடித்ததாகவும் மாறிவிடும். கண்ணுக்குக் கண் என்று பழிவாங்கினால் இந்த உலகமே ஒரு கட்டத்தில் குருடர்கள் உலகமாகிவிடும்.
கொள்கை
இன்றைய அரசியல் சூழலில் மைக் எடுத்தவனெல்லாம் கொள்கை கொள்கைனு பேசுறாங்களே… உண்மையிலேயே அதுபற்றி காந்தி என்ன சொல்கிறார் தெரியுமா?… தெளிவான செயல்பாட்டின் வெளிப்பாடுதான் கொள்கை. என்ன செய்கிறோம் என்று திட்டமிடப்படாத யாராலும் தெளிவான செயல்பாட்டைப் பின்பற்ற முடியாது. அது கொள்கையாகவும் மாற வாய்ப்பில்லை என்று கூறுகிறார்.