இரவில் தூக்கம் வராமல் இருக்கும் குழந்தைகள் எனில் அவர்களை பெற்றோரில் ஒருவர் மாற்றி ஒருவர் கவனித்துக் கொள்வது நல்லது. ஒருவர் விழித்திருக்கும்போது இன்னொருவர் உறங்கலாம் அல்லது வீட்டில் பெரியவர்கள் இருப்பின் அவர்கள் சிறிது நேரம் குழந்தைகளை வைத்திருக்கச் செய்யலாம்.
இதனால், குழந்தைகள் விழித்திருக்கும்போது பெற்றோர் இருவரும் விழித்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இருவரின் தூக்கமும் கெடாமலும் இருக்கும். நாளடைவில் குழந்தைகளும் பெரியவர்கள் போல் இரவில் தூங்கி காலை விழித்தெழும் பழக்கத்துக்கு வந்துவிடுவார்கள் என்பதால் இந்த தூக்கமின்மை பிரச்னையை நிரந்தரமானது என்று கவலைப்படவும் வேண்டியதில்லை.
’’குழந்தைகளைத் தனியே தூங்க வைப்பதன் மூலம் இந்த பிரச்னையை சரி செய்யலாமா?‘‘மேலை நாடுகளைப் பொறுத்தவரை பிறந்த குழந்தை முதலே அவர்களை தனியே தூங்க வைக்கின்றனர். பெற்றோருடன் தூங்க வைப்பதில்லை. கைக்குழந்தையாக இருந்தாலும்கூட அவர்களை தனி கட்டிலில் படுக்க வைத்தே பழக்கப்படுத்துகின்றனர். இதை நாமும் பின்பற்றலாம்.
குழந்தைகள் பெற்றோருடன் தூங்கும்போது அதன் பாதிப்பு பல வழிகளில் இருக்கும். தூக்கமின்மை மட்டும் அல்லாமல் பெற்றோரின் தாம்பத்திய வாழ்க்கை, இருவருக்குள்ளும் இருக்கும் புரிதல், தனிப்பட்ட பேச்சுவார்த்தை போன்றவை குழந்தைகளால் வெகுவாகப் பாதிக்கப்படும் வாய்ப்பு உண்டு. தூக்கம் வராமல் குழந்தைகள் விழித்துக் கொண்டிருந்தால் அவர்களுடன் பெற்றோரும் விழித்திருக்கவும் வேண்டியிருக்கும். அதேநேரத்தில், குழந்தைகளை தனியே தூங்க வைக்கப் பழக்கும்போது, அவர்கள் விழித்திருந்தாலும் பெற்றோரின் தூக்கமோ, தனிப்பட்ட விஷயங்களோ பாதிக்காமல்சமாளித்துக் கொள்ளலாம்.