ஈரானில் 5300 கோடி பீப்பாய் கச்சா எண்ணெயுடன் புதிய எண்ணெய் வயல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ஹசன் ருகானி இன்று தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் உற்பத்திக்கு தேவையான கச்சா எண்ணெய் வளம் கொண்ட நாடுகளின் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள ஈரானுக்கும் – அமெரிக்காவுக்கும் இடையில் மோதல் போக்கு நிலவி வருகிறது. ஈரானின் அணு ஆயுத கொள்கைகளை அமெரிக்கா தொடர்ந்து விமர்சித்து வருகிறது. ஈரான் பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. இதனால் ஈரான் பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட தொடங்கியுள்ளது
ஈரானிடம் எண்ணெய் வாங்கக்கூடாது என்று சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை இந்தியாவும் பின்பற்றி வருகிறது. இதனால் கச்சா எண்ணெயை நம்பி இருக்கும் ஈரானின் பொருளாதாரம் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது.
இந்நிலையில், ஈரான் அதிபர் ஹசன் ருகானி இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அவர் வெளியிட்ட அறிக்கையில்,”ஈரானின் தென்மேற்கு பகுதியில் உள்ள குசேஸ்தான் மாகாணத்தில் 2400 சதுர கிமீ பரப்பளவில் சுமார் 5300 கோடி பீப்பாய் கச்சா எண்ணையுடன் புதிய எண்ணெய் வயல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
80மீ ஆழத்தில் கச்சா எண்ணெய் சுரக்கும் இந்த பெட்ரோல் வயல் தொடர்பான கண்டுபிடிப்பை ஈரான் மக்களுக்கு அரசு அளிக்கும் பரிசு எனவும் அதிபர் ருகானி தெரிவித்தார்.