Ring of fire Solar Eclipse June 2020
2020ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஆனி 7ஆம் தேதி ஜூன் 21ஆம் தேதி ஞாயிறு கிழமை காலை 9.15 மணிக்கு தொடங்கி பிற்பகல் 03.04 மணி வரை நீடிக்கிறது. மிருகஷீரிடம் மற்றும் திருவாதிரை நட்சத்திரத்தில் நிகழும் இந்த சூரிய கிரகணம் ஆறு மணிநேரம் நீடிக்கிறது. இது நெருப்பு வளைய சூரிய கிரகணமாகும்.
நெருப்பு வளைய சூரிய கிரகணம் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி நிகழ்ந்தது. தனுசு ராசியில் ஆறு கிரகங்கள் சேர்க்கையுடன் நிகழ்ந்த இந்த சூரிய கிரகணம் கேது கிரகஸ்த சூரிய கிரகணமாகும். இது 3 மணி நேரம் மட்டுமே நிகழ்ந்தது. அந்த 3 மணிநேரம் வானத்தில் மிகப்பெரிய அதிசயத்தை நிகழ்த்தி காட்டியது சூரிய கிரகணம்.
வரும் 21ஆம் தேதி நிகழப்போகும் சூரிய கிரகணம் இந்த ஆண்டிலேயே மிக நீண்ட சூரிய கிரகணமாகும். சில தினங்களுக்கு முன்புதான் புறநிழல் சந்திர கிரகணம் எனப்படும் பெனும்பிரல் சந்திர கிரகணம் நிகழ்ந்தது. இது இந்தியாவில் தெரியவில்லை. ஆனால் 21ஆம் தேதி நிகழப்போகும் நெருப்பு வளைய சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியும். இது ராகு கிரகஸ்த சூரிய கிரகணம் 6 மணி நேரம் வானத்தில் அதிசயத்தை நிகழ்த்தப்போகிறது.
பூமியை சுற்றும் சந்திரன், சூரியனை சுற்றும் பூமி என வானத்தில் சத்தமில்லாமல் சில சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இதில் நீள் வட்டப்பாதையில் சுற்றி வரும் போது ஒரே நேர் கோட்டில் சந்திக்கின்றன. அப்போது சூரியனை நிலவு மறைக்கிறது. அப்போது சந்திரனின் நிலவு பூமியின் மீது விழுகிறது. இதுவே கிரகணமாக தெரிகிறது.
சூரிய கிரகணத்தின்போது சந்திரனின் நிழல் முழுமையாக சூரியனை மறைத்து விட்டால் அது முழு சூரிய கிரகணம். சூரியன் முழுவதுமாக கருமையாக காட்சி தரும். அப்போது இருண்டு விடும். சந்திரனால் ஒரு பகுதி சூரியனை மட்டுமே மறைக்க முடிந்தால் அது பகுதி சூரிய கிரகணம். சந்திரனின் நிழல் சூரியனின் வட்டத்துக்குள் விழுந்து சூரியனின் விளிம்பு பகுதி நெருப்பு வளையமாக நமக்கு காட்சி அளித்தால் அது நெருப்பு வளைய சூரிய கிரகணம். இது கங்கண சூரிய கிரகணம் என்றும் இதைத்தான் ring of fire என்றும் கூறுகின்றனர்.
கடந்த ஆண்டு டிசம்பரில் நிகழ்ந்த சூரிய கிரகணம் தனுசு ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் தனுர் மாதத்தில் நிகழ்ந்தது. அப்போது தனுசு ராசியில் சூரியன், சந்திரன், சனி, குரு, புதன், குரு என ஆறு கிரகங்கள் இணைந்திருந்தன. இந்த மாதத்தில் மிதுனம் ராசியில் சூரியன், சந்திரன், ராகு, புதன் என நான்கு கிரகணங்கள் கூட்டணி அமைத்திருக்கும் சூழ்நிலைகளில் சூரிய கிரகணம் நிகழப்போகிறது.
சூரிய கிரகணம் வட இந்தியாவில் தெரியும் தென் இந்தியாவிலும் நன்றாக பார்க்கலாம். பாகிஸ்தான், சீனா, ஆப்ரிக்காவின் பல பகுதிகளில் பார்க்கலாம். வானத்தில் நெருப்பு வளையத்தை கண்டு ரசிக்கலாம். முதன் முதலில் காலை 9:15:58 மணிக்கு தொடங்குகிறது. மதியம் 12:10 மணிக்கு உச்சத்தை அடைகிறது. பிற்பகல் 3:04 மணிக்கு உச்சத்தை அடைகிறது.
தமிழ்நாட்டில் இந்த சூரிய கிரகணம் காலை 10:15:32 மணிக்கு சேலத்தில் தொடங்குகிறது. சென்னையில் 10:21:45 மணிக்கும் கோவையில் 10:12 மணிக்கும் இந்த கிரகணத்தை பார்க்கலாம். மதுரையில் 10:17:05 மணிக்கும் திருச்சியில் 10:18:20 மணிக்கும் கிரகணத்தைப் பார்க்கலாம். இந்த கிரகணத்தை சாதாரண கண்களால் காணக்கூடாது என வானியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.