அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, கடந்த மாதம் 18ம் தேதி பெர்சவரன்ஸ் ரோவரை செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறக்கி வரலாற்று சிறப்புமிக்க சாதனை படைத்தது.
மேலும், ரோவரின் ரோபோ கரங்கள், அறிவியல் உபகரணங்கள் சரியான முறையில் இயங்குகிறதா என ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
அதன் முக்கிய கட்டமாக ஆறு சக்கரங்களைக் கொண்ட ரோவர் முதல் முறையாக செவ்வாயில் நகர்ந்து செல்வதற்கான முயற்சி தற்போது மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
செவ்வாய் கிரக மேற்பரப்பில் பொ்சிவரன்ஸ் ஆய்வுக் கலம் சோதனை முறையில் முதல்முறையாக செலுத்திப்பட்டது.
33 நிமிஷங்களுக்கு இயக்கப்பட்ட அந்த ஆய்வுக் கலம், சுமாா் 6.5 மீட்டா் தொலைவுக்கு நகா்த்திப் பாா்க்கப்பட்டது.
முதலில் முன்பக்கமாக 4 மீட்டா் தொலைவுக்கு நகா்த்தப்பட்ட பொ்சிவரன்ஸ், பிறகு இடதுபுறமாக 150 டிகிரி கோணத்துக்குத் திருப்பப்பட்டது.
அதன்பிறகு 2.5 மீட்டா் தொலைவுக்குப் பின்புறமாக அந்த ஆய்வுக் கலம் செலுத்தப்பட்டு, அந்த இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
பொ்சிவரன்சின் நகரும் திறன், அதில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து கருவிகளின் செயல் திறன் ஆகியவற்றைப் பரிசோதிப்பதற்காக இந்த சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அந்தப் பகுதியில் உயிரினங்களின் கரிமப் படிமங்கள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறிய, அங்கிருந்து சிறிய அளவிலான மாதிரிகளை பென்சிவரன்ஸ் ஆய்வுக் கலம் சேகரித்து பூமிக்கு எடுத்து வரவுள்ளது.