சூயஸ் கால்வாயில் சரக்கு கப்பல் ஏற்படுத்திய விபத்தினால் நீர் வழித்தடம் முற்றிலுமாக முடக்கப்பட்டு போக்குவரத்து தடைபட்டது.
உலகின் மிக முக்கிய கடல் வர்த்தகப் பாதையான சூயஸ் கால்வாயில், எவர்கிவன் என்ற வணிகக் கப்பல் குறுக்கே சிக்கிக்கொண்டது. கால்வாயின் இரண்டு பக்க கரைகளின் சுவர்களிலும் மோதியபடி, பக்கவாட்டில் சிக்கிக்கொண்ட இந்த கப்பலால், அந்த பாதையில் ஒட்டுமொத்த கப்பல் போக்குவரத்தும் தடைபட்டது.
சீனாவிலிருந்து நூற்றுக்கணக்கான கன்டெய்னர்களுடன் புறப்பட்ட எவர்கிவன் கப்பல், மலேசியா வழியாக பயணித்து நேற்று முன்தினம் இரவு எகிப்திலுள்ள சூயஸ் கால்வாயை வந்தடைந்தது. நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 7.40 மணியளவில் அங்கிருந்து கிளம்யிய எவர்கிவன், கால்வாய் வழியாக நெதர்லாந்தின் ரோட்டர்டாமுக்கு சென்றுகொண்டிருந்தது. அப்போது, திடீரென்று வீசிய பலத்த காற்றால் கப்பல் கட்டுப்பாட்டை இழந்து, முன்பக்கம் கால்வாயின் வடக்குபக்க சுவற்றின் மீது மோதியது. அடுத்தகணமே கப்பலின் பின்பக்கம் மேற்கு திசையில் இழுத்து தள்ளப்பட்டு மற்றொருபக்க சுவரில் மோதி நின்றது.
இந்த நிகழ்வை, மற்றொரு கப்பலில் பயணம் செய்துகொண்டிருந்த ஒரு பெண், வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றினார்.
கப்பலை மீட்டெடுத்து நிலைமையை சரிசெய்ய தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும், கப்பல் மோதியிருக்கும் கால்வாயின் இரண்டு பகுதிகளிலும் தோண்டி மணலை அப்புறப்படுத்தி மீட்டெடுக்க திட்டமிட்டிருப்பதாகவும் சூயஸ் நிர்வாகம் கூறி உள்ளது.
இந்த கப்பல் ஏற்படுத்திய விபத்தினால், ஆசியாவின் மத்திய தரைக்கடல் பகுதியையும், ஐரோப்பாவின் செங்கடல் பகுதியையும் இணைக்கும் சூயஸ் கால்வாயின் நீர் வழித்தடம் முற்றிலுமாக முடக்கப்பட்டு, ஏராளமான சரக்கு கப்பல்கள் கால்வாயின் தென்பகுதியில் குவிந்துவருகின்றன. கப்பல்களின் இந்த அணிவகுப்பால் அந்தக் கடல் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
1869-ம் ஆண்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த சூயஸ் கால்வாய், 193 கி.மீ. நீளமும், 24மீ ஆழமும், 205 மீ அகலமும் கொண்டது. எகிப்தின் வருவாயில் மிகப்பெரிய பங்களிப்பை செய்துவரும் இந்த கால்வாயிலிருந்து, வருவாயை பெருக்கும் நோக்கில், எகிப்து அரசு 2015-ம் ஆண்டு பெரிய கப்பல்கள் பயணிக்கும் வகையில் கால்வாயை விரிவாக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.