ஒருநாள் காலை வானம் இருண்டு காணப்பட்டது. குளிர் காற்று வீசியது. திடீரென மின்னல் மின்னியது. அதை தொடர்ந்து இடி முழக்கம் மழைத்துளிகள் மெல்ல மெல்லத் தூறத் தொடங்கின. வீதிகளில் நடந்து சென்று கொண்டிருந்த மக்கள் மழை வருவதற்குள் தங்கள் இடங்களுக்குச் செல்ல வேண்டுமென்ற துடிப்புடன் விறு விறு என நடந்து சென்று கொண்டிருந்தனர்.
கார் முகிலைக் கண்ட மயில்கள் மகிழ்வில் திளைக்கின்றன. ஆண் மயில்கள் தங்கள் அழகிய தோகையை விரித்து ஆடத் தொடங்கின. குயில்களின் கூவல்கள் மயில்களின் ஆடலுக்கான இனிய இசையாக ஒலித்தன. அப்போது சோ என்ற இரைச்சலுடன் மழை கொட்டத் தொடங்கியது.
வெளிய குடையுடன் சென்றவர்கள் குடையை விரித்து மழையில் நனையாது மெதுவாக நடந்து கொண்டிருந்தனர். ஏனையோர்மழையில் நனைந்தவாறு ஓடிஓடிச் சென்று அண்மையிலுள்ள கட்டிடங்களில் ஒதுங்குகின்றனர். அவர்கள் நனைந்த ஆடைகளுடன் மழைக்குளிரில் நடுங்கினர்.
பலத்த மழையினால் வீதிகளெங்கும் வெள்ளம் ஓடிக்கொண்டே இருந்தது. அங்காடியில் விற்பனையாளர்கள் தங்கள் தங்கள் பொருட்களை விரைவாகச் சுருட்டிக் கட்டிக்கொண்டு தமது நிலையை எண்ணி ஏக்கத்துடன் ஒதுங்கி நிற்கின்றனர். அக்காலைப் பொழுதில் பள்ளி செல்லும் மாணவர்கள் தங்கள் புத்தகப்பைகளுடன் கூச்சலிட்டுக் கொண்டு அங்கும் இங்கும் ஓடி மறைகின்றனர். இவ்வாறு அனைவரது செயற்பாடுகளும் சில மணி நேரம் முடங்கின.
சோ வென்று பெய்த மழை படிப்படியாகக் குறையத் தொடங்கியது. வானம் வெளுத்தது. அனைவரும் தடைப்பட்ட தங்கள் செயற்பாடுகளை மீண்டும் தொடங்குகின்றனர். வீதிகளில் ஓடிக்கொண்டிருந்த வெள்ளத்தில்பேருந்துகள் ஊர்ந்து ஊர்ந்து செல்லத் தொடங்கின. வாடிக்கிடந்த நிலைத்திணைகள் தலை நிமிர்ந்து செழித்துக் காணப்படுகின்றன.
வயல்களுக்கு வேண்டிய நீரைக் கதிரவன் வழங்கியதை எண்ணி மகிழ்ந்தவாறு உழவர்கள் வயலோரம் நடந்து நெற்பயிர்களைச் சுற்றி சுற்றிப் பார்கின்றனர். ஆம் மழை இன்றேல் இவ்வுலகில் எவ்வுயிர்களும் உயிர் வாழ முடியாது தானே.
பனிக்காலம், காற்று காலம், கோடைகாலம் என எல்லா காலத்திலும் ஒவ்வொருவிதமான தொற்று நோய்கள் பரவும்அபாயமும் உண்டு. இவற்றில் கூடுதல் சவாலாக உள்ளது மழைக்காலம்.
காய்ச்சல், ஜலதோஷம், தலைவலி என்று மழைக்காலத்தில் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதுவும் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு தொற்று மூலம் நோய்கள் பரவுவதற்கு மழைக்காலத்தில் வாய்ப்புகள் அதிகம்.ஏனெனில், மழை காலத்தில் சுற்றுச்சூழல் மிகவும் மாசு அடைகிறது. இதற்கு காரணம் நோய்களை பரப்பும் கொசுக்கள், வைரஸ், பாக்டீரியா ஏரளமாக உற்பத்தி ஆவதுதான்.‘‘மழைநீர் கடலில் சென்று கலப்பதற்கும், வெளியேறுவதற்கும் வழியில்லாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இவ்வாறு போதுமான வடிகால் வசதி இன்றி பல இடங்களில் தேங்கும் நீரில் கழிவு நீர் சேர்கிறது. மேலும், குடிநீருடன் கழிவு நீர் சேர்கிறது. தேங்கும் மழைநீரில் கொசுக்கள் பெருமளவில் உற்பத்தியாகி மலேரியா, டெங்கு, வைரஸ் காய்ச்சல் ஆகியவற்றை பரப்புகின்றன.மழைக் காலத்தில், குடிநீர் மற்றும் சமையலுக்கு உபயோகப்படுத்தும் தண்ணீரில் கழிவு நீர் சேர்கிறது. பெரும்பாலான மக்கள் இதைத்தான் சமையல் உட்பட குளியல் ஆகிய அன்றாடத் தேவைகளுக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.
குடிப்பதற்கும், உணவு தயாரிப்பதற்கும் கழிவுகள் சேர்ந்த தண்ணீரை உபயோகிப்பதால், வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, டைபாய்டு, காலரா ஆகிய நோய்கள் பரவுகின்றன. தேங்கும் நீரில் கழிவு நீர் கலப்பதால் பாக்டீரியா, வைரஸ் ஏராளமாக உற்பத்தியாகின்றன.
மேலும், மழையால் தேங்கும் தண்ணீரில் எலியின் சிறுநீர் சேர்வதால் எலிக்காய்ச்சலும் பரவுகிறது. அசுத்தமான தண்ணீரில் ஷூ, சாக்ஸ் போன்றவை அணியாமல், வெறும் காலுடன் நடந்து செல்லும் வழக்கம் நம்மில் பலருக்கு இருக்கிறது.முக்கியமாக குழந்தைகள், சிறுவர், சிறுமியர், முதியவர் என எந்த வயதினராக இருந்தாலும் மழைக்கால தொற்று நோய்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். திறந்தவெளியில்,சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் உணவுப்பண்டங்களை தவிர்ப்பது நல்லது. சூடான உணவுகளை சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு உகந்தது.