Bomb Blast 50 Died சிறுவர்களுக்கான உலக செய்திகள்
மியான்மரில் கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து எந்தவிதமான முன் அறிவிப்பும் இன்றி வான்வழித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது.இந்த நிலையில் அங்கு கச்சின் மாகாணத்தில் உள்ள கன்சி கிராமத்தில், கிளர்ச்சியாளர் ராணுவத்தின் சுயாட்சி இயக்கத்தின் 62-வது ஆண்டு நிறைவைக்குறிக்கும் வகையில் ஒரு இசை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றுக்கொண்டிருந்தது.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு இசை நிகழ்ச்சியை ரசித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது எந்தவிதமான முன் அறிவிப்பும் இன்றி கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து வான்வழித்தாக்குதல் நடத்தப்பட்டது. 3 குண்டுகள் அங்கு வந்து விழுந்து வெடித்ததாக தகவல்கள் கூறுகின்றன.
இதனால் கூட்டத்தினர் அலறியடித்தவாறு நாலாபுறமும் சிதறி ஓடினர். இருப்பினும் இந்த குண்டுவீச்சில் குறைந்தது 50 பேர் சிக்கி உயிரிழந்ததாகவும், 100 பேர் படுகாயம் அடைந்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதல் நடைபெற்ற கச்சின் மாகாணத்தில் பல ஆண்டுகளாக கிளர்ச்சியாளர்களுக்கும், ராணுவத்துக்கும் இடையே சண்டை நடந்து வருவதும், அங்கு பச்சை மாணிக்கக்கல் சுரங்கங்கள் ஏராளமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ராணுவ ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு மியான்மரில் உள்ள பிற ஆயுதக்குழுக்களுக்கு, கச்சின் கிளர்ச்சியாளர்கள் அளித்து வரும் ஆதரவுக்கு பதிலடியாக அல்லது ஒரு எச்சரிக்கையாக இந்த தாக்குதல் நடைபெற்றிருக்கலாம் என சொல்லப்படுகிறது.
Kidhours – Bomb Blast 50 Died
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.