இந்தோனேஷியாவில் நேற்று திடீரென்று ஏற்பட்ட வெள்ள பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி சுமார் 90 பேர் வரை பலியாகியுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேஷியாவை அடுத்தடுத்து புயல்கள் தாக்கியுள்ளன. இதனால் இந்தோனேஷியா முழுவதும் நேற்று கன மழை பெய்தது. இதன் காரணமாக அந்நாட்டில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், நிலச்சரிவும் பல்வேறு இடங்களில் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இந்தோனேஷியாவில் 66 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அங்கு ஏற்பட்டுள்ள நிலச்சரிவு காரணமாகப் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மேலும், அபாயகரமான பகுதிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இருப்பினும், தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் மீட்புப் பணிகளை விரைவாக மேற்கொள்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்தோனேஷியாவில் மலைப்பகுதிகளின் அருகில் அமைந்திருந்த வீடுகள் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ இந்த பேரழிவில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், மீட்புப் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாகவும், இருப்பினும் பலர் தங்கள் வீடுகளை விட்டு வர மறுப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான மருந்து, போர்வைகளை எளித்து வருவதாகவும் குறிப்பிட்டார். இதில் பலர் மாயமாகியுள்ளனர், அவர்களைத் தேடும் பணிகளும் தொடர்ந்து நடைபெறுவதாக அந்நாட்டின் பேரிடர் மீட்பு படை தெரிவித்துள்ளது.
இந்த வெள்ளப் பெருக்கில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தோஷேனியா இடையே அமைந்துள்ள குட்டி தீவு நாடான கிழக்கு திமோர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. கிழக்கு திமோர் தலைநகர் திலி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு தற்போது வரை மட்டும் 21 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 13 லட்சம் மக்களைக் கொண்ட கிழக்கு திமோர் நாட்டிலும் தற்போது மீட்புப் பணிகள் மிக விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 2,500 பேர் ஆபத்தான பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்தோனேஷியாவில் மழை காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதும், நிலச்சரிவு ஏற்படுவதும் வழக்கமான ஒன்றுதான். கடந்த ஜனவரி மாதம் இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சுமார் 40 பேர் கொல்லப்பட்டனர். அதேபோல கடந்த செப்டம்பர் மாதம் போர்னியோ பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 11 பேர் பலியாகியனர். அங்கு சுமார் 12 கோடி மக்கள் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.