Short Essay Real Gods – Katturaigal – சிறுவர் கட்டுரை
உலகிலேயுள்ள பிறவிகளிலெல்லாம் உன்னதமானது மனிதப்பிறவி. “அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது” என்று ஒளவைப்பிராட்டி பாடியிருக்கிறார். மற்ற உயிரினங்களையெல்லாம்விட மனிதன் மேன்மையானவன் என்பதற்கு அவனிடமுள்ள சிறப்பான அறிவும், எதையும் உணரும் இதயமுமே காரணமெனலாம். மனத்தை இதமாக வைத்திருப்பவனே மனிதன்.
இத்தகையை உயர்ந்த பிறவி வாய்க்கப்பெற்ற மனிதன், தான்பெற்ற பிறவியின் நோக்கத்தை ஈடுசெய்ய வாழ்நாளில் நல்லவற்றைச் செய்யவேண்டும். மற்றவர்களை நல்வழியில்வாழ வழி காட்டவேண்டும். மாணவப்பருவத்தில் நாம் மற்றவரை மதித்துநடக்க பயின்றுகொள்ளுதல் அவசியம். விசேடமாக தம் தாய்தந்தையரையும், தம்மின் மூத்தோரையும் சான்றோர்களையும் போற்றி, அவர்கள் சொற்கேட்டு வாழ்வில் உய்தல் என்பது அனைவருக்குமே வேண்டிய ஒழுக்காறாகும்.
நம் வாழ்க்கையிலே அடிப்படையாக யார் யாரையெல்லாம் நாம் அன்பு பாராட்டி மதிக்கவேண்டும், வணங்கிப் பின்பற்ற வேண்டும் என அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகின்றது. முதலில், நம்மை இந்தஉலகத்தில் பிறக்கச்செய்த
கண்கண்ட தெய்வங்களான எம் பெற்றோர்களை நன்றியுடன் தொழுதல் எமது கடப்பாடாகும். அடுத்து எமக்கு நல்லறிவு தந்து, கல்வியறிவு புகட்டி வழிகாட்டும் ஆசிரியர்கள் எமது தெய்வங்கள் ஆவர். தெய்வவழிபாடும் பக்தியும் இதனால் கூடும். மொத்தத்தில் தாய், தந்தை, ஆசான்,தெய்வம் அண்டிய விருந்தினர்கள் என்பவர்களையே நமது முதல் வணக்கத்துக்கு உரியவர்களாக நீதி சாஸ்திரங்கள் கூறுகின்றன.
“மாதா. பிதா. குரு. தெய்வம் – அவர் மலரடி தினந்தினம் வணங்குதல் செய்வோம்”
என்ற பொருள்புரிந்த பாடல் எம்மை ஈர்ப்பதாகும். பெற்றஅன்னை, வாழ்வளிக்கும் தந்தை, கல்விபுகட்டும் ஆசான், தோன்றாத்துணையாயிருக்கும் கடவுள் ஆகிய நால்வரும் முதலில் எமது வணக்கத்துக்குரியவர்களாவர். அவர்கள் எம்மீது கொண்டுள்ள அளப்பரிய பெருங்கருணையினால்தான் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கின்றோம், அவர்கள்தான் உண்மையில் எங்கள் வாழ்வின் முதற் கண்கண்ட தெய்வங்கள்.
வீட்டிலே தினந்தோறும் எம் பெற்றோர்களின் பாதம் தொட்டு வழிபட்டு வணங்கிவரும் பழக்கத்தை சிறுவயதிலிருந்தே கடைப்பிடித்து வருதல் வேண்டும். அவ்வாறே மூத்தோர்களையும்,சான்றோர்களையும் வணங்குதல் எம் வாழ்வை மேன்மை அடையச் செய்யும்.
பாடசாலையில் எமக்கு நல்லறிவுபுகட்டும் ஆசிரியர்களைக் கண்டவுடன் கைகூப்பிவணங்கி வாழ்த்துக் கூறவேண்டும். அவர்கள் ஆசீர்வாதம் எமக்கு என்றும் உயர்வையேதரும் என்ற உணர்வை எம்மிடத்தே வளர்த்துக் கொள்வதற்கு இவை உதவியாகும். இவர்களைவிட, அறிவுடையோர், தபசிகள், ஞானிகள், அதிதிகள் என எங்கள் இல்லத்திற்கு வருவோரை வணங்குதலும் பசித்துவருவோரைப் புசிக்கச்செய்து உபசரிப்பதும் எமது கடமையாகும்.
“அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்பது ஆன்றோர் வாக்கு. இவ்வுலகில் எம்மைப்பெற்று அனைத்தும்தந்து அன்புடன் வளர்ப்பவர்கள் எமது தாயும் தந்தையுமாவர். எமது தாய், பத்துமாதம் எம்மைக் கருவிலே சுமந்து, பல்வேறு இன்னல்களையும் தாங்கி, எம்மைப் பெற்றவள்.
தந்தையோ எமக்கு உயிர்தந்து எம்மை வளர்த்தெடுக்க உழைப்பவர், உதவுபவர். அன்புமழை சொரிந்து எம் நல்வாழ்வுக்காக வழிசமைப்பவர். உணவு, உடை, கல்வியோடு உத்தியோகமும், உயர் வாழ்க்கையும் பெற்றுத்தருபவர். வீட்டுக்கும், நாட்டுக்கும் பயனுள்ளவர்களாக, தம்பிள்ளைகள் வாழவும், வல்லவர்களாகத் திகழவும் விரும்புபவர் எங்கள் தந்தையே.மாதா, பிதா இருவருக்கும் நாம் என்றுமே கடமைப் பட்டவர்களாவோம்.
எனவேதான் இரு முதுகுரவர்களான எம் பெற்றோர்களிடத்து நாம் அன்பு செய்வதுடன் நன்றிபாராட்டி அவர்களை வழிபடவும்வேண்டும். “தந்தை தாய் பேண்” என்பது ஒளவையின் முதுமொழி. எழுத்தறிவிக்கும் பணியில் எம்மை ஆற்றுப்படுத்தும் தெய்வங்களாக நம் ஆசிரியர்கள் விளங்குகிறார்கள். சான்றோராக்கும் பணியில் எங்கள் ஆசிரியர்கள் தங்கள் போதனைகளாலும் பயிற்றுவித்தல்களாலும் எமக்கு நல்வாழ்வு காட்டுபவர்களாவர்.
கல்வியோடு கலைகளையும் ஒழுக்கவிழுமியங்களையும் மட்டுமல்ல, நல்ல பண்பாடுகளையும் எமக்குப் புகட்டுபவர்கள் நம் ஆசிரியர்களே. இந்த ஆசான்கள் நம்மை சமுதாயத்திற்கு ஏற்றவர்களாகவும் எதிர்காலத்தின் நற்பிரஜைகளாகவும் வாழ்வதற்கு வழிகாட்டுபவர்கள். நற்பண்புகளைச் சொல்லித்தருபவர்கள். “யார் நம் அறிவைத் தூண்டுகிறார்களோ அவர்களே மேலான கடவுளை அறிவதற்கும் வழிகாட்டும் ஞானிகள்.” குரு என்றால் குற்றங்களை நீக்குபவர். ஆசிரியர் என்றால் அறியாமை இருள் அகற்றுபவர் என்று பொருள். அதாவது ஆசு + இரியர் = ஆசிரியர் ஆவார்.
எனவே,அம்மையாகவும் அப்பனாகவும் குருவாகவும் ஒன்றுசேர்ந்து விளங்குபவர் பரம்பொருள். எமக்குள் அந்தர்யாமியாய் இருந்து அருள்சுரந்து வாழவைப்பவர் அவரே அன்பே வடிவானவர்; உயிருக்கு உயிரி. அவர் எமக்கு உள்ளேயிருந்தும் வெளியேயிருந்தும் கருணை செய்வதனால் கடவுளானார். கடவுளை அன்போடு பூசணை செய்து நாளும் கைதொழுதால் கிடையாதது ஒன்றுமில்லை என்பது உண்மையே. உள்ளத்தை தெளிவுறச் செய்வதோடு எம்மோடு உடனிருந்து இயக்குபவர் வாழ்முதலாகிய கடவுள்.
தெய்வத்தை வணங்குவதால் செய்தவினை அகலும் என்பது நம் சமயச்சான்றோர்
அறிவுரையும் ஆகும். ஆகவேதான் அந்தப் பரம்பொருளான கடவுளை தவறாது வணங்குதலை எங்கள் அன்றாடக் கடமைகளில் ஒன்றாக மூதாதையர் வகுத்தனர். நாம் எத்தனை சாதனைகளைப் புரிந்தாலும், தவவலிமை பெற்றாலும், ஆற்றல்கள் திறமைகள் உடையவராக இருந்தாலும், தெய்வ கடாட்சத்தைப்பெற, முதலிலே அன்புக்கும் வணக்கத்துக்குமுரிய மாதா, பிதாவையும் ஆசான்களையும் மதித்து நடக்கவேண்டும். அந்தவழியிலே நாம் எம் பண்புகளை சீராக்கி நடக்கும்பொழுது கடவுளின் கடாட்சம் தானாகவே கிடைக்கும்.
நாம் வணங்கும் தெய்வங்களென்ற வரிசையில் அதிதிகளையும் நீதிநூல்கள் குறிப்பிட்டு சொல்லுகின்றன. அறவோர்களான அவர்கள் ஆண்டவனின் அருள்பெற்ற சீலர்கள் ஆவர். அவர்களுக்கு அன்னமிட்டு உபசரிக்கக் கிடைப்பதும் பெரும்பேறேயாகும். அந்தணர்கள், தவசிரேஷ்டர்கள் சந்நியாசிகள் போன்றவர்களும் நம்மால் தொழும்தகைமை பெற்றவர்களே. பிதிர்களை வழிபட்டு பிரார்த்தனை செய்தலும் இதனுள் அடங்கும்.
“தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை” இவ்வைந்து திறத்தாரையும் ஓம்பி வழிபடுதலை இல்லறத்தாருக்குரிய கட்டாயமாக வள்ளுவர் பெருமான் குறிப்பிடுகிறார். உலகிலே மக்களாகப்பிறந்த நாம் எம்வாழ்வின் நோக்கத்தை ஈடுசெய்ய வேண்டுமானால் முதலிலே நடமாடும் தெய்வங்கள் மூவரையும் மூத்தோரையும் சான்றோர்களையும் வணங்கி மதித்து நடக்கப்பழகுவோம். அதன்பேறாக எமக்கு மேலான தெய்வத்தின் திருவருள் கடாட்சம் கைகூடுவது நிச்சயம்.
Kidhours – Short Essay Real Gods – Katturaigal , Tamil Short Essay Real Gods
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.