Friday, November 22, 2024
Homeதிருக்குறள்திருக்குறளில் ''கடவுள் வாழ்த்து'' என்ற தலைப்பு பொருத்தமானதா? Thirukkural Kadavul Valththu

திருக்குறளில் ”கடவுள் வாழ்த்து” என்ற தலைப்பு பொருத்தமானதா? Thirukkural Kadavul Valththu

- Advertisement -

Thirukkural Kadavul Valththu திருக்குறளின் சிறப்புகள்

- Advertisement -

காலத்தின் சமூக வழிகாட்டு நெறிகளை பல குறட்பாக்களாக எழுதி இருப்பார். அவர் மாணாக்கர்களோ அல்லது அவருக்குப் பின் வந்த அறிஞர் பெருமக்களோ இக்குறட்பாக்களை அதிகாரங்களாகப் பிரித்துத் தொகுத்து திருக்குறள் என்று நாம் தற்போது அறிகிற நூலாக்கினர் என்பது ஆன்றோர் கருத்து. அதிகாரத்திற்கு பத்து குறட்பாக்கள் என்று சீர் படுத்திய பொழுது இடைச்செருகல்கள் நிகழ்ந்திருக்கலாம் என்ற கூறுவாரும் உண்டு.

உலகப்பொதுமறை என்று பாராட்டப்படுகின்ற ஒரு தலையாய இலக்கியம், திருக்குறள். திருக்குறளின் பகுப்புமுறை, அதிகாரங்களுக்குத் தலைப்புத் தந்துள்ள முறை போன்றவை யாரால் எப்பொழுது செய்யப்பட்டவை என்பதெல்லாம் சரிவரத் தெளிவாகவில்லை. இப்பொழுது நாம் காணும் அதிகாரப் பகுப்பு, அதிகாரத் தலைப்புகள், இயல் பகுப்பு போன்றவை எல்லாம் திருவள்ளுவரே செய்ததாகத் தோன்றவில்லை. சான்றாக, திருக்குறளின் முதல் நான்கு இயல்களைப் பாயிரம் என்று பகுத்துள்ளனர் சில ஆசிரியர்கள்.

- Advertisement -

பரிமேலழகர் போன்ற செல்வாக்குள்ள உரையா சிரியரும் இதனை ஏற்றுக் கடைப்பிடிப்பதால் இது பெரும்பாலும் ஏற்கக்கூடிய கருத்தாகி விட்டது. இப்பகுப்பு சரியானது என நிறுவப்படவில்லை. இயல்பகுப்பு உரையாசிரியருக்கு உரையாசிரியர் மாறுபடுகிறது. அதிகாரத்தலைப்புகளும் அவ்வாறே. மணக்குடவர் மக்கட்பேறு எனக்கூறும் அதிகாரத்தைக் காலத்தால் பிற்பட்டவராகிய பரிமேலழகர் புதல்வரைப் பெறுதல் என்று மாற்றிக்கொண்டிருக்கிறார்.

- Advertisement -

இவற்றையெல்லாம் இங்கு நினைவுகூறக் காரணம், திருக்குறளின் முதல் அதிகாரமாகிய கடவுள் வாழ்த்து என்பதன் தலைப்பே பொருத்தமானதல்ல என்பதைச் சுட்டிக்காட்டத்தான். பொதுவாக, திருக்குறளில், அதிகாரத் தலைப்பாக அமைந்த சொல், பெரும்பாலும் அந்த அதிகாரத்திலுள்ள ஓரிரு குறட்பாக்களிலேனும் இடம் பெறுவது வழக்கம். இதற்கு மிகச்சில விதிவிலக்குகளே உண்டு. அந்த விதிவிலக்குகளில் ஒன்று, கடவுள் வாழ்த்து.

கடவுள் என்ற சொல்லோ, வாழ்த்து என்ற சொல்லோ கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் எங்கும் இடம்பெறவேயில்லை.
இந்தச் சொற்களை முக்கியமாக ஆராய்வதற்குக் காரணம் உண்டு. ஏனென்றால் கடவுள் என்ற கருத்தும், வாழ்த்துதல் என்ற கருத்தும் திருவள்ளுவருக்கு உடன் பாடானவை என்று தோன்றவில்லை. இன்று இறைவன், தெய்வம், கடவுள் என்ற மூன்று சொற்களும் ஏறத்தாழ ஒரே அர்த்தத்தில் கையாளப்படுகின்றன. ஆனால் திருவள்ளுவருடைய ஆளுகையில் இம்மூன்று சொற்களுக்கும் பொருள் வேறு. கடவுள் என்ற சொல்லை அவர் திருக்குறளில் கையாளவே இல்லை.

கட+உள் என்று இச்சொல்லைப் பிரித்து நமக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று நமக்கு உள்ளும் நம்மைக் கடந்தும்(அப்பாலும்) இருக்கிறது என்று இச்சொல்லுக்குப் பொருள் கூறுவர். அல்லது கடவுதல் (இயக்குதல், செலுத்துதல்) என்ற சொல் அடியாகப் பிறந்தது இச் சொல் என்ற கருத்தும் உண்டு. உயிர்களுக்கெல்லாம் அப்பால் நின்று ஒரு சக்தி அவற்றைக் கடவுகின்றது என்ற கருத்து இதில் இருக்கிறது. இப்படிப்பட்ட, உயிர்களுக்கும் மனிதருக்கும் அப்பாற்பட்ட ஒரு சக்தியில்(transcendent force) திருவள்ளுவருக்கு நம்பிக்கை இல்லாததனால்தான் அவர் இச்சொல்லைத் தமது நூலில் எங்குமே பயன்படுத்தவில்லை என்று கருதமுடியும்.

பழங்காலத்தில் வைதிக சமயத்தினர் தமக்கு அப்பாற்பட்ட சக்தியான கடவுள் ஒன்றில் நம்பிக்கைகொண்டவர்கள். வைதிகசமயத்தினர்க்கு மாறான சார்வாகர், சாங் கியர், பௌத்தர், சமணர் போன்ற மரபுகளைச் சார்ந்தவர்கள் இப்படிப்பட்ட நம்பிக்கை அற்றவர்கள். திருக்குறளை ஆழ்ந்து நோக்கும்போது திருவள்ளுவர் சமணராக இருந்திருக்கக்கூடும் என்பதை நாம் உணரமுடியும்.

இறைவன்-தெய்வம் என்ற சொற்கள் கடவுள் என்ற கருத்துக்கு மாறானவை. தேவன் அல்லது தேவ என்ற சொல்தான் தெய்வம் என்ற வடிவத்தில் தமிழில் வழங்குகிறது. இச்சொல்லுக்கு மனிதனைவிட உயர்உலகம் ஒன்றில் வாழும் (மனிதனைவிட அதிகமான, ஆனால் எல்லைக்குட்பட்ட சக்தியுடைய) உயர்பிறவிகள் என்பது அர்த்தம். வள்ளுவரும் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்று சொல்கிறார். மனிதர்கள் தங்கள் நிலையில் உயரும்போது தெய்வம் ஆகிறார்கள்.

இறை என்ற சொல் ஆதி என்ற சொல்லுக்கு எதிரானது. மனிதனால் ஆதி (யாவற்றிற்கும் முற்பட்ட நிலை)யையும் சிந்திக்க முடிவதில்லை, அந்தம் (இறை, இறுதி) என்ற நிலையையும் சிந்திக்க முடிவதில்லை. இறைவன் என்ற சொல்லை அரசன் என்ற அர்த்தத்தில்தான் வள்ளுவர் மிகுதியும் பயன்படுத்தியுள்ளார். ஏனென்றால், மனிதர்களுக்குள் இறுதியான தலைமைநிலையில் இருப்பவன் அரசன்தான்.

இறு (வேர்ச்சொல் ‘இற்’) என்ற சொல்லிலிருந்துதான் இறையன், இறைவன், இறுதி, இற்றுப் போதல், இறுத்தல், இறப்பு போன்ற சொற்கள் உருவாகின்றன. இறத்தல் என்பதற்கு ஒரு எல்லையைக் (இங்கே மனித வாழ்க்கை எல்லை) கடந்து செல்லுதல் என்று பொருள். எனவே இறைவன் என்பது கடவுளைக் குறிக்கும் சொல்லன்று.
கடவுள் என்ற சொல் திருக்குறளில் எங்கும் இடம்பெறவேயில்லை என்ப தையும், காரணம் அது நமக்கு அப்பாற்பட்ட அதீத சக்தியைக் குறிக்கின்ற ஒன்று என்பதையும் முன்பே கூறினோம்.

கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் இறைவனைக் குறிப்பதாக இடம் பெறும் சொற்கள் அனைத்தும் மனிதநிலையிலிருந்து உயர்ந்த சான்றோர்களைக் (இவர்களை நாம் சமண முன்னோரான துறவிகளாகக் கொள்ள வாய்ப்பு உண்டு) குறிப்பவைதான்.
மனிதநிலைக்கு அப்பாற்பட்ட ஒரு கடவுளைக் கருத்தில் ஏற்றுக்கொள்ளாததால் திருவள்ளுவருக்கு அத்தகைய கடவுளை வாழ்த்துவது என்ற எண்ணமும் தோன்றவில்லை.

திருக்குறள் கடவுள் வாழ்த்தின் பத்துச் செய்யுட்களையும் நன்கு கவனித்துப் பாருங்கள் – எந்தச் செய்யுளாவது, கடவுளை வாழ்த்துவதாக அமைந் துள்ளதா? எல்லாச் செய்யுட்களுமே – பத்துக்குறட்பாக்களுமே உயர்ந்த மானிடர்களின் பத்து இயல்புகளைக் குறிப்பிடுவனவாகத்தான் அமைந்துள்ளன.

நம் சிந்தனையையும் மனத்தையும் கடந்த ஒன்றிற்கு இயல்புகளைச் சொல்வது எப்படி?
முதல் குறட்பாவைப் பார்ப்போம். அகரமுதல எழுத்தெல்லாம்; ஆதி பகவன் முதற்றே உலகு என்பது குறள். இது சொல்வது என்ன? எழுத்துகளெல்லாம் அகரத்தை முதலாகக் கொண்டிருப்பதுபோல, இந்த உலகம் ஆதிபகவனை முதலாகக் கொண்டிருக்கிறது என்பதுதானே? இதில் உள்ள இரு பகுதிகளும் நாம் கவனிக்க வேண்டியவை.
ஒன்று, எழுத்துகளெல்லாம் அகரத்தை முதலாக உடையவை.
இரண்டு, (அதுபோல) உலகம் ஆதிபகவனை முதலாக உடையது.

முதல் பகுதியைக் கவனிப்போம். எழுத்துகள் அகரத்தை முதலாக உடையன என்றால் என்ன? இறைவன் உயிர்களை ஆக்குவது போல, எல்லா எழுத்துகளையும் (உயிர், மெய்) அகரம் ஆக்குகிறது, படைக்கிறது என்றா அர்த்தம்? முதல் என்பதற்குப் பல அர்த்தங்கள் உண்டு. மண்ணிலிருந்து குடம் ஆகிறது என்றால் மண் காரண முதல் என்போம். குயவனால் குடம் ஆகியது என்றால் குயவனைக் கர்த்தா முதல் என்போம். இந்த அர்த்தங்கள் எதுவும் இங்கு இல்லை.

Thirukkural Kadavul Valththu திருக்குறளின் சிறப்புகள்
Thirukkural Kadavul Valththu திருக்குறளின் சிறப்புகள்

பெரும்பாலான மொழிகளில் அகரம் முதல் எழுத்து. பிறகு மற்ற எழுத்துகளின் வரிசை தொடர்கிறது. ஒரு கியூ வரிசையில் முதலில் நிற்கும் ஆள், கியூவை உண்டாக்குபவரா? அதாவது காரணமுதலா? கர்த்தா முதலா? இரண்டும் அல்ல, அவர் வரிசை முதல். அவ்வளவுதான். அதுபோல எழுத்துகள் வரிசையில் அகரம் முதன்மையாக நிற்கிறது. வரிசை முதல். அதுபோல உயிர்களின் வரிசையில் ஆதிபகவன் முதலில் நிற்கிறார். அவ்வளவுதான். ஆதி என்றசொல்லும் குணங்களில் முதன்மையானவர் என்பதைத்தான் குறிக்கிறது.

இரண்டாவது, பகவன் என்ற சொல்லைப் பார்ப்போம். இது பகவான் என்ற வட சொல் அடிப்படையிலானது அல்ல. தமிழில் முற்றும் துறந்த முனிவர்களை-மனிதர்களை பகவன் என்று கூறினார்கள். கலித்தொகையில் ஒரு செவிலித்தாய் தலைவனுடன் போய் விட்ட தன் மகளைத் தேடிவருகிறாள். அவளுக்கு முக்கோல் பகவர்கள் (அதாவது திரிதண்டம் என்னும் கோலை உடைய பகவர்கள் சிலர்) ஆறுதல் சொல்கிறார்கள். இங்கு முக்கோல் பகவன் என்ற சொல்லுக்கு கடவுள், பகவான் என்றா அர்த்தம்? முனிவன் என்பதுதான் பொருள்.

அதே பொருளில் – அதாவது முற்றும் துறந்த முனிவன் என்ற பொருளில்தான் பகவன் என்ற சொல்லை இங்கும் திருவள்ளுவர் பயன்படுத்துகிறார். ஆனால் இவர் நீண்ட காலத்துக்கு முன்னாலிருந் தவர் (ஒருவேளை அருகதேவராக இருக்கலாம்). அதனால் ஆதி பகவன்.
எனவே இந்த முதற்குறள் கூறுவது என்ன? மனித வரிசையிலே குணங்களால் உயர்ந்த, காலவரிசையில் முற்பட்ட ஒரு முனிவர் – ஆதி பகவன் – அவரை உதாரணமாகக் கொண்டது இவ்வுலகு என்பதுதான்.

இனி வரும் குறட்பாக்களும் அந்த ஆதி பகவனின் – அதாவது மனிதராக இருந்து உயர்ந்த நிலை அடைந்த – வள்ளுவர் வாக்கில், தெய்வநிலை அடைந்தவர் களின் பண்புகளைப் பற்றித்தான் பேசுகின்றன. இரண்டாவது குறட்பாவில் ‘வால் அறிவன்’ என்கிறார். அதாவது தூய்மையான அறிவுடையவன். மூன்றாவது குறட்பா இன்னும் தெளிவானது. மலர்மிசை ஏகினான்.

இது புலனறிவைக் கடந்த கடவுளைக் குறிக்கும் சொல்லே அன்று என்பது மிக வெளிப்படை. மலரின்மீது நடந்தவன். இங்கு மலர் என்பது உருவகமாக பூமியைக் குறிக்கிறது. (மலர் தலை உலகம் என்று வருணிப்பதை நோக்குக). எனவே இந்தப் பூமியின்மீது வாழ்ந்த ஒரு தெய்வப் பண்புடைய ஒருவன் என்பது இச்சொல்லின் பொருள்.

அடுத்த குறள் வேண்டுதல் வேண்டாமை இலான் என்கிறது. அதாவது அந்த நிலைகளைக் கடந்தவன். அதற்கடுத்த குறளில் இறைவன் என்றசொல் வருகிறது. அதாவது நாம் அடையவேண்டிய இறுதிநிலையாக இருப்பவன், அல்லது அந்த இறுதிநிலையை அடைந்தவன். பத்தாம் குறளும் இறைவன் என்ற சொல்லையே பயன்படுத்துகிறது. (இறைவன் அடி சேராதார், பிறவிப்பெருங்கடல் நீந்தார்).
அடுத்த குறள் இன்னும் தெளிவானது. பொறிவாயில் ஐந்து அவித்தான்.

எல்லாவற்றையும் கடந்த கடவுளுக்குப் பொறிவாயில்கள் (அதாவது புலன்நுகர்ச்சி உறுப்புகள் – கண், காது, மூக்கு, நாக்கு, தோல்) என்பன ஏது? இப்பொறிவாயில்கள் ஒருவனுக்கு உண்டு, அவற்றை அவித்தவன் (கட்டுப்படுத்தியவன்) என்றாலே கடவுள் என்ற அர்த்தமா வருகிறது? எந்தக் கடவுளும் புலன்களை அவிக்கத் தேவையில்லை. சாதாரண மனிதநிலையில் இருந்து, புலனுணர்வுகளைக் கட்டுப்படுத்தி, தெய்வ நிலையை அடைந்த சான்றோன் என்னும் பொருள் அல்லவா இந்தச் சொல்லுக்கு வருகிறது? அப்படிப்பட்ட சான்றோனுடைய பொய்தீர் ஒழுக்கநெறியில் நின்றவர்கள் நீடுவாழ்வார் என்பதில் கடவுளுக்கு எங்கே இடம்?
அடுத்த குறளில் வரும் சொல் தனக்குவமை இல்லாதான்.

பொறிவாயில் அவித்த ஒருவனுக்கு உலகிலுள்ள சுகபோகங்களில் ஈடுபட்ட யாரை அல்லது எதை உவமை சொல்ல முடியும்? அடுத்த சொல் அறவாழி அந்தணன் அறக்கடலாக விளங்குகின்ற அந்தணன். அந்தணன் என்பது பார்ப்பனச் சாதியைக் குறிக்கும் சொல் அல்ல. அந்தணர் என்போர் அறவோர் – திருவள்ளுவரைப் பொறுத்தமட்டில். அறவோனாக இருப்பவன் அந்தணன். அறக்கடலாகவே விளங்கும் முதன்மையான அந்தணன் இந்த பகவன்.

ஒன்பதாம் திருக்குறள் மிகமிக முக்கியமானது. ஏனென்றால் இதுவரை இறைவனுடைய பண்புகளாகக் குறிப்பிட்டவற்றைத் தொகுத்துரைக்கிறது. கோளில் பொறியில் குணம் இலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. எண்குணத்தான் என்ற சொல்லுக்கு நம் மனங்களில் எண்ணப்படுகின்ற நல்ல குணங்களையெல்லாம் உடையவன் என்று சமத்காரமாகப் பொருள்சொல்லலாம். எட்டு குணங்களை உடையவன் என்பதும் பொருள்.

அதாவது, இதற்கு முன்னுள்ள எட்டுகுறட்பாக்களில் சொல்லப்பட்ட எட்டு குணங்களையும் உடையவன். அதனால் தான் பத்தாம் குறளில் வேறு எந்தப் பண்பையும் புதிதாகச் சேர்க்காமல், ஐந்தாம் குறட்பாவில் ஆண்ட இறைவன் என்ற சொல்லையே திரும்பவும் பயன்படுத்தி விடுகிறார்.

இக்காலத்தில் தமிழ் இலக்கியம் படிப்போர் சொற்களுக்கு இக்காலப் பொருளையே கொண்டுவிடுகின்றனர் என்பது ஒரு குறைதான். அது சிலவித இலக்கிய ஆய்வுகளுக்குப் பயன்படக்கூடியதே என்றாலும், மிகப் பழங்கால இலக்கியங்களைப் படிக்கும்போது ஒரு சொல்லைக் கண்டால் அது அக்காலத்தில் எப்பொருளில் பயன்பட்டிருக்கும் என்று ஓரளவேனும் ஆராய்ந்தே பொருள்கொள்ளவேண்டும். அவ்வாறில்லாவிட்டால் குழப்பம்தான் ஏற்படும். பரிமேலழகர் போன்ற உரையாசிரி யர்களிடம் உள்ள குறைபாடு, அவர்கள் அவ்வக்காலத்திற்கேற்ற பொருளைக் கொண்டமையே ஆகும்.

அதனால் சமணசமயம் மேலோங்கியிருந்த – நீதி இலக்கிய காலத்தில், அறச்சிந்தனைக் காலத்தில் இயற்றப்பட்ட திருக்குறளுக்குச் சைவசித்தாந்த, வைணவசித்தாந்தப் பொருள் கூறி இடர்ப்பட்டனர். சான்றாக எண் குணத்தான் என்றசொல்லுக்குச் சைவம் என்ன அர்த்தங்களைத் தருகிறது, வைணவம் என்ன அர்த்தங்களைத் தருகிறது என்றெல்லாம் குறித்துள்ளனர். மாறாக, சமணசமயத்தில் எண்குணம் என்பதற்கு என்ன அர்த்தம் என்று நோக்கினால் பொருத்தமாக இருக்கும்.

 

Kidhours – Thirukkural Kadavul Valththu ,Thirukkural Kadavul Valththu Essay,Thirukkural Kadavul Valththu Katturai

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.