மாற்றங்கள் ஒன்றே உலகில் மாறாதவை. எந்த ஒரு படைப்பும் அதன் ஆரம்ப நிலையிலேயே இல்லாமல் அடுத்தடுத்த நிலைக்கு மாற்றியமைவதே பரிணாமம். அது தேவையான நேரத்தில் தேவையான இடத்தில் நிகழும். அது தனிமனிதராய் இருந்தாலும் சரி, இந்த உலகமே ஆனாலும் சரி. மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும்.
பரிணாமம் என்பதே மாற்றங்கள் என்றால் அது தானாகவே நிகழ்ந்து விட்டுப் போகிறது. அதை ஏன் நாம் செய்ய வேண்டும் என்ற ஒரு கேள்வி எழலாம். இந்த இடத்தில் மாற்றம் என்பதன் பொருள் முறைப்படுத்துதல் என்று பொருள்படுகிறது. ஒரு நதி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்தைத் தானாகவே கடந்து சென்று கடலில் கலக்கும் என்பதும் இயற்கையாக நிகழும் மாற்றம். ஆனால் அந்த நதிக்கு அணையிட்டு வயலுக்குப் பாய்ச்சுதலே நாம் செய்ய வேண்டிய மாற்றம் ஆகும்.
ஒரு தனிமனிதன் குடும்பமாகி, குடும்பம் சமூகமாகி, சமூகம் ஊராக, ஊர் நாடாக, நாடே உலகமாகிறது. ஆக உலகம் என்று நாம் சொல்வது நம்மைச் சுற்றியுள்ள தனிமனிதர்களின் கூட்டத்தைத்தான். இது ஒரு சுழற்சி. உலகைப் புதியதாக்குவதற்கு முதலில் ஒவ்வொரு தனிமனிதனும் தன்னைப் புதுப்பிக்க வேண்டும். தன்னைப் புதுப்பித்தல் என்பது முதலில் தன்னைப் புரிதல் என்பதிலிருந்தே தொடங்குகிறது. இந்த உலகில் ஜனிக்கும் அத்தனை உயிர்களுக்கும் வாழ்க்கை முறையில் பல மாற்றங்கள் இருக்கலாம். ஆனால் வாழ்க்கை என்பது பொதுவானது. அத்தியாவசியத் தேவைகள் என்பது ஒன்றுதான். ஆசைகள், தேவைகள் என்று எதையெல்லாம் நாம் எதிர்நோக்கி வாழ்கிறோமோ, அது அத்தனையும் மற்றவர்களுக்கும் உண்டு என்ற எண்ணம் எப்போது வருகிறதோ அப்போதுதான் அந்தப் புரிதல் நிகழும். அப்போதுதான் மனிதம் புதுப்பிக்கப்படும். உலகமும் புதுப்பிக்கப்படும்.
புதியதோர் மனிதம் செய்வோம்! புதியதோர் உலகம் செய்வோம்!