Saturday, February 1, 2025
Homeகல்விவிஞ்ஞானம்குருதி சுற்றோட்ட தொகுதி

குருதி சுற்றோட்ட தொகுதி

- Advertisement -

எமது சுற்றோட்டத் தொகுதி பிரதானமாக இரண்டு பாகங்களைக் கொண்டுள்ளது. இதயம் (Heart), குருதிக் குழாய்கள் (Blood Vessels) என்பன அவையாகும். அத்தோடு இவற்றினுள் சுற்றியோடும் திரவமாகக் குருதி – இரத்தம் (Blood) காணப்படுகிறது.
இதயம் எமது நெஞ்சுக் கூட்டினுள் (Thoracic Cavity) இரண்டு நுரையீரல்களுக்கும் நடுவே, சற்று இடப்புறம் சரிந்தவாறு காணப்படும் ஒரு பிரதான உறுப்பாகும். எமது இதயம் இதயத் தசைகளால் ஆக்கப்பட்டுள்ளன. வலது, இடது என இரண்டு சோணை அறைகளையும் (Atrium), சோணை அறைகளுக்குக் கீழே வலது, இடது என இரண்டு இதயவறைகளையும் (Ventricles) மொத்தமாக நான்கு அறைகளை எமது இதயம் கொண்டுள்ளது.
kuruthi-suttottam

- Advertisement -

உண்மையில் இதயம் ஒரு பம்பியாகும். அதாவது எமது உடல் முழுவதும் குருதியானது சுற்றி ஓடுவதற்கு தேவையான விசையை வழங்குவதே இதன் பிரதான தொழிலாகும். இதயத் தசைகள் சுருங்குவதன் மூலம் இத் தொழில் நிறைவு செய்யப்படுகிறது. இதயத்திலிருந்து பம்பப்படுகின்ற குருதியானது, குருதிக் குழாய்களினூடாக உடல் முழுதும் சுற்றி வருகிறது.

​குருதிக் குழாய்கள் பிரதானமாக மூன்று வகைப்படும். நாடி (Artery), நாளம் (Vein), மயிர்துளைக் குழாய்கள் (Capillaries) என்பனவே அவையாகும்.
இதயத்திலிருந்து குருதியை உடல் முழுக்கக் கொண்டு செல்லும் குழாய்கள் நாடிகள் எனவும், உடலின் எல்லாப் பாகங்களிலிருந்தும் குருதியை இதயத்திற்கு கொண்டு வரும் குழாய்கள் நாளங்கள் எனவும் அழைக்கப்படும். நாடிகளையும், நாளங்களையும் இணைக்கும் மிகச் சிறிய குழாய்கள் மயிர்துளைக் குழாய்கள் எனப்படுகின்றன.
kuruthi-suttottam
குருதியில் பிரதானமாக மூன்று வகைக் கலங்கள் காணப்படுகின்றன. அவை செங்குருதிச் சிறு துணிக்கை (Red Blood Cells), வெண் குறுதிச் சிறுதுணிக்கை (White Blood Cells) மற்றும் குறுதிச் சிறுதட்டுக்கள் (Platelets) என்பனவாகும். செங்குருதிச் சிறுதுணிக்கைகளில் ஹீமோகுளோபீன் (Haemoglobin) எனும் மூலக்கூறு காணப்படுகிறது. இது ஆக்ஸிஜன் மற்றும் கார்பன் டை ஆக்ஸைட் என்பவற்றின் கொண்டு செல்லலில் முக்கிய பங்காற்றுகின்றன.

- Advertisement -

kuruthi-suttottam

- Advertisement -

​வெண் குறுதிச் சிறுதுணிக்கைகள் எமது உடலின் நோயெதிர்ப்பு சக்தியைப் பேணும் கலங்களாகும். இவற்றில் ஐந்து வகை உப பிரிவுகள் உண்டு. உடலினுள் புகும் நோய்க் கிருமிகளை விழுங்கியோ அல்லது தாக்கியோ இவை அழிக்கின்றன. குருதிச் சிறுதட்டுக்கள் எமது உடலில் காயங்கள் ஏற்படுகின்ற போது, அவ்விடத்தில் குருதியை உறையச் செய்து, எமது உடலிலிருந்து குருதி வெளியேறி விடாமல் பாதுகாக்கின்றது.
உடலின் எல்லா இடங்களிலும் கலச் சுவாசம் இடம்பெறுகிறது. எனவே உடலின் எல்லாப் பாகங்களுக்கும், எப்பொழுதும் ஆக்ஸிஜன் வாயுவும், உணவுக்கூறுகளும் (முக்கியமாக குளுக்கோசும்) கிடைத்துக் கொண்டிருப்பது அவசியமாகும். சுவாசத்தொகுதியின் சிற்றறைகளைச் சூழ உள்ள மயிர்துளைக் குழாய்களினுள் பரவ விடப்படுகின்ற ஆக்ஸிஜன் வாயுவானது, குருதியில் காணப்படுகின்ற ஹீமோகுளோபின் மூலம் காவப்பட்டு, இரண்டு நுரையீரல்களிலிருந்தும் வெளிப்படுகின்ற சுவாச நாளங்கள் (Pulmonary Veins) ஊடாக இடது சோணை அறைகளுக்கு கொண்டு வரப்படுகின்றது.

இடது சோணை அறைகளிலிருந்து, ஆக்ஸிஜன் ஐக் காவி வருகின்ற குருதியானது, இரு கூர் வால்வு (Mitral Valve) எனும் வால்வொன்றினூடாக இடது இதயவறையை அடைகின்றது. இடது இதயவறை பலமாகச் சுருங்குவதன் மூலம், இக் குருதி அரைமதி வால்வொன்றினூடாக (Aortic Valve) தொகுதிப் பெருநாடிக்குள் (Aorta) பம்பப்படுகிறது. தொகுதிப்பெருநாடியிலிருந்து பிரிந்து செல்லும் பல கிளைகளினூடாக ஆக்ஸிஜன் ஐக் காவி வரும் குருதி உடல் முழுதும் விநியோகிக்கப்படும்.

kuruthi-suttottam
இவ்வாறு உடல் முழுதும் விநியோகிக்கப்படும் வேளை, சமிபாடுத்தொகுதியிலிருந்து உணவுக்கூறுகள் குருதிக்குள் பெற்றுக்கொள்ளப்படுவதோடு, ஏற்கனவே குருதியிலிருக்கும் கழிவுப்பொருட்கள் சிறுநீர்த் தொகுதியில் வடித்து அகற்றப்படும். மேலும் உடலின் பல பாகங்களுக்கு ஆக்ஸிஜன் விநியோகிக்கப்படும், கலச் சுவாசத்தின் விளைவாக வரும் கார்பன்டைஆக்ஸைடு வாயுவும், கழிவுப் பொருட்களும் குருதிக்குள் விடுவிக்கப்படும்.
கார்பன்டைஆக்ஸைடு ஐக் காவி வரும் இக்குருதியானது, உடலின் எல்லாப் பாகங்களிலிருந்தும் நாளங்கள் மூலம் சேகரிக்கப்பட்டு, பிரதானமான நாளங்களான மேற்பெருநாளம் (Superior Vena Cava) மற்றும் கீழ்ப்பெருநாளம் (Inferior Vena Cava) ஊடாக வலது சோணை அறையை வந்து சேருகின்றது. வலது சோணை அறையிலிருந்து இக் குருதி முக்கூர் வால்வு (Tricuspid Valve) மூலம் வலது இதயவறையை அடைகின்றது. அங்கிருந்து மீண்டும் அரைமதி வால்வொன்றின் (Pulmonary Valve) ஊடாக சுவாசப்பை நாடிகளை (Pulmonary Arteries) அடைந்து மீண்டும் நுரையீரல்களுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. நுரையீரல்களின் சிற்றறைகளுக்குள் கார்பன்டைஆக்ஸைடு வாயுவானது விடுவிக்கப்பட்டு, மீண்டும் ஆக்ஸிஜன் வாயு பெறப்பட, இவ்வட்டம் தொடர்ந்து இடம்பெறுகின்றது.

kuruthi-suttottam
ஒரு நிமிடத்தில் இதயமானது சராசரியாக 72 தடவைகள் (60 – 80 தடவைகள்) இவ்வாறு குருதியைப் பம்பும் தொழிலைப் புரிகின்றது. இதயத்தின் வால்வுகளினூடாகக் குருதி செல்லும் வேளையில் வால்வுகள் திறந்து மூடும் பொழுது ஏற்படுகின்ற சத்தமே “லப்” , “டப்” என உணரப்படுகிறது.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.