சீனாவில் தொடங்கிய கொரோனா உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. வல்லரசு நாடுகளே திணறும் அளவுக்கு ஒவ்வொரு நாளும் பாதிப்பு அதிகமாகிக் கொண்டே செல்கிறது. கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறிவதில் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
அமெரிக்கா தடுப்பு மருந்தை பாதிக்கப்பட்டவர்களிடம் பரிசோதனை செய்து, அவர்களின் உடல்நிலையை கண்காணித்து வருகிறது. இதில் முன்னேற்றம் ஏற்படும் என்று அந்நாடு நம்புகிறது. தற்போதைய நிலவரப்படி, அமெரிக்காவில் 34,717 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
452 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், அமெரிக்காவே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. இந்நிலையில், coronavirusmedicalkit.com என்ற இணையதளம் கொரோனா கோவிட் 19 வைரஸ் தடுப்பு மருந்துகளை விற்பனை செய்வதாக விளம்பரம் செய்தது. “4.95 அமெரிக்க டாலர்கள் செலுத்தினால், கொரோனா தடுப்பு மருந்துகளை பெறலாம்” என்று இணையதளத்தின் முகப்பில் கூறப்பட்டிருந்தது.
கோவிட் 19 வைரஸுக்கு தடுப்பு மருந்துகள் இன்னும் கண்டறியப்படாத நிலையில், இந்த இணையதளத்தின் விளம்பரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான புகாரை விசாரித்த டெக்ஸாஸ் நீதிபதி உடனடியாக இணையதளத்தை முடக்க உத்தரவிட்டார்.