அமெரிக்காவில் 1979-ம் ஆண்டு மே 25 ம் தேதி நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த இட்டன் பாட்ஷ் என்ற 6 வயது குழந்தை பள்ளிக்குச் செல்லும் வழியில் காணாமல் போய்விட்டான்.
இட்டன் பாட்ஷின் தந்தை, புகைப்படக் கலைஞராக இருந்ததால் தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுக் குழந்தையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவரது தீவிர தேடுதல் வேட்டையை அங்கிருந்த ஊடகங்கள் தலைப்பு செய்தியாக வெளியிட்டது.
ஊடக நிறுவனங்களின் இந்த நடவடிக்கையால் 1979-ம் ஆண்டில் இருந்து 1981-ம் ஆண்டு வரையில் குளம், ஆறு போன்ற இடங்களில் அடையாளம் தெரியாமல் காணாமல் போன 29 குழந்தைகள் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டது.
இதனையொட்டி 1983 ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த ரொனால்ட் ரீகன் மே 25-ம் தேதியை காணாமல் போகும் குழந்தைகளுக்கான தேசிய தினமாக அறிவித்தார். அன்றிலி ருந்து மே 25-ம் தேதி காணாமல் போகும் குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இதையொட்டி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், காணாமல் போகும் குழந்தைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிக்கும் வகையிலும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
இந்நாளில் சர்வதேச அளவில் பல நாடுகள் குழந்தை கடத்தல் அச்சுறுத்தல் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதம் குழந்தைகளாக உள்ளனர். இதில் 8 நிமிடத்துக்கு ஒரு குழந்தை காணாமல் போகிறது.
ஆண்டுக்கு சராசரியாக ஒரு லட்சம் குழந்தைகள் காணாமல் போகின்றனர். இதில் பெண் குழந்தைகள் 55 சதவீதமும், ஆண் குழந்தைகள் 45 சதவீதமும் காணாமல் போகிறார்கள்.
தமிழகத்தில் மட்டும் 11 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போகின்றனர் என்றும் தேசியக் குற்றப் பதிவு ஆணையச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் மேற்கு வங்கமும், அடுத்த இடத்தில் தமிழகமும் இருக்கிறது.
காரணம் என்ன?
குழந்தைகள் காணாமல் போவதற்கான காரணம் குறித்து குழந்தைகள் நலகுழுமத்தின் உறுப்பினர்கள் “குழந்தைகள் காணாமல் போவதற்குப் பல காரணங்கள் உள்ளது. தற்போது வீட்டில் பெற்றோர்கள் திட்டுவதால் கோபப்பட்டு வீட்டை விட்டு வெளியேறும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மேலும் உடல் உறுப்புகளைத் திருடி விற்கும் சமூக விரோதிகளும் குழந்தைகளைக் கடத்துகின்றனர். வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட வைக்க 10 வயது முதல் 15 வயது வரையுள்ள குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்கும் குழந்தைகள் கடத்தப்படுகின்றனர்.
குறிப்பாக 6 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் தான் அதிக அளவில் கடத்தப்படுகின்றனர். எனவே, காணாமல்போகும் குழந்தைகள் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களுக்கு இருக்கவேண்டும். சைல்டுலைன் பற்றியும் பொது மக்கள் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
ஆதரவு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளுக்காக மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சேவை அமைப்பு இது. அதன் தேசிய அளவிலான 24 மணிநேர அவசர இலவச தொலைபேசி எண்- 1098.
காணாமல் போன குழந்தைகளை விரைவாகவும் பத்திரமாகவும் மீட்கும் பணியில் சைல்டுலைன் அமைப்பு ஈடுபட்டுள்ளது.குழந்தைகளுக்கு அதிக மன உளைச்சலை ஏற்படுத்தாமல், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை பெற்றோர்கள் கொடுக்க வேண்டும்”