உலகெங்கிலும் தொலைக்காட்சி பெட்டி இருக்கிறது. தொலைக்காட்சி இல்லாத வீடு இல்லை. பெரியவர்கள் பார்ப்பதோடு கைக்குழந்தைகளும், தவழும் பிள்ளைகளும்கூட தொலைக்காட்சியைப் பார்க்கின்றனர் என்பதே வறுத்தமான செய்தி.
வண்ண வண்ண நிறங்களால் கை குழந்தைகள் ஈர்க்கப்பட்டு, நிறங்களையும் அசைவுகளையும் பார்க்கின்றனர். தன் கழுத்தை திருப்பிய படி படுத்துக்கொண்டே பார்க்கும் கைக்குழந்தைகளைகூட தற்போது பார்க்க முடிகிறது. காலத்தின் அவலம்.
பல பெற்றோரும் என் குழந்தைக்கு இந்த பாட்டு பிடிக்கும், இந்த விளம்பரம் பிடிக்கும் எனப் பெருமையாகவும் சொல்லிக்கொள்கின்றனர். உண்மையில் இது சரியா?
குழந்தைகளை குழந்தைகளாக வளர்ப்பதும் குழந்தை பருவத்தில் சரியான வளர்ப்பை சொல்லி தருவதும் மிக மிக முக்கியம்.
குழந்தைகளை டிவி பார்ப்பதால் என்னென்ன பாதிப்புகள் வரும்?
- மூளை வளர்ச்சி பாதிப்பு
ஹைபர்ஆக்டிவ், நடத்தையில் பிரச்னை இருக்கிறதா போன்ற சர்வேக்களை எடுத்துள்ளனர். அதில் 1 வயதுள்ள குழந்தைகள் 1278 பேரும் 3 வயதுள்ள குழந்தைகள் 1345 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தனது 7 வயதுக்குள் 10% குழந்தைகள் இப்பிரச்னைகளால் பாதிப்புக்குள்ளாகின்றனர். - கல்வி தொடர்பான விஷயங்களிலும் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். படிப்பு, பள்ளி மீது ஆர்வம் குறைகிறது.
- மொழி திறனும் குறைந்து வருகிறது. டிவியில் உள்ள கார்ட்டூன்களைப் பார்த்து அங்கு பேசப்படும் மொழியை தாங்களும் பேசுகின்றனர்.
- நட்பு நலம் கெடுகிறது. உறவுகளின் மீது உள்ள பந்தம் கெடுகிறது.
உடல்பருமன்
டிவியை பார்த்துக்கொண்டே அதிகமான நொறுக்குதீனிகளை சாப்பிடுகின்றனர்.
‘8 வயது சிறுவன் டிவியைப் பார்த்துக்கொண்டே 12 தோசை சாப்பிடுகிறான்’ என்கிறார் அவனது தாய். அந்த சிறுவனுக்கு தான் எவ்வளவு சாப்பிடுகிறாம் எனத் தெரியவில்லை. இந்த உணவு செரிக்குமா… கழிவாகும்.
நிறைய சாப்பிட்டும் போதும் என்ற உணர்வை குழந்தைகள் உணர்வது இல்லை என்பதே உண்மை.
அதிக நேரம் டிவி அல்லது வீடியோ கேம்ஸ் அல்லது லேப்டாப்பில் விளையாடும் குழந்தைகள் மற்ற குழந்தைகளைவிட அதிகமாக அதிவேக செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.
9-16 வயது குழந்தைகள் உடல்பருமனாக மாற, டிவி ஒரு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. உடலுழைப்பு இல்லாததால் குழந்தைகள் தொப்பை போட்டு உடல்பருமனாக மாறுகின்றனர்.
சோர்வு, ஆர்வமின்மை, சோம்பேறித்தனம், அதிகமாக உண்ணும் பழக்கம் போன்ற பிரச்னைகள் உள்ள குழந்தைகளை பெற்றோர் கவனித்து திருத்த வேண்டும்.
டிவியில் வரும் விளம்பரங்களிலும் அதிக அளவு உணவு தொடர்பான விளம்பரங்கள் காட்டப்படுகின்றன. அதிக சர்க்கரை கொண்ட உணவுகள், துரித உணவுகளாக வருவதால் அதைப் பார்த்து குழந்தைகளும் அவற்றுக்கு அடிமையாகின்றனர்.
வன்முறை தூண்டுதல்
ஒவ்வொரு டிவி நிகழ்ச்சியும் ஒரு மணி நேரத்துக்குள் 20 வன்முறை நடத்தைகளாவது அல்லது வன்முறை வார்த்தைகளாவது காண்பிக்கப்படுவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
18 வயதுக்குள் பல வன்முறை செயல்களில் குழந்தைகள் ஈடுபடுகின்றனர்.
வேக வேகமான செயல்பாடுகளில் குழந்தைகள் அதிகமாக செய்கின்றனர் என்பதும் பெற்றோரால் சொல்லப்பட்டு வருகிறது.
இரக்கம் உணர்வு இல்லாமல் குழந்தைகள் வளர்கின்றனர். உதவி மனப்பான்மை இல்லாமலும் குழந்தைகள் வளர்வதாக சொல்லப்படுகிறது.
கெட்ட பழக்கங்களில் ஈடுபடும் வாய்ப்பு
- குடிப்பழக்கம், புகைப்பழக்கம் மிக எளிமையாக டிவி மூலம் குழந்தைக்கு அறிமுகமாகிறது.
- வேகமாக வண்டி ஓட்டுதல், குற்றங்கள், திருடு, கொலை, வன்புணர்வு, மிரட்டல், போதைப் பழக்கம் இப்படி பலவற்றையும் குழந்தைகள் டிவி மூலம் பார்க்கின்றனர்.
சிறு வயதிலே இதெல்லாம் இயல்பு என்றும் இதெல்லாம் பரவலாக இருக்கும் என்பதையும் புரிந்து கொள்கின்றனர். - நாடகங்கள் மூலமாக பொய், சூழ்ச்சி, பகை, வஞ்சம், கோபம், கவலை, பழி வாங்குதல், பதுங்கி தாக்குதல், ஏமாற்றுதல், பேராசை போன்ற எதிர்மறை குணங்களை கற்கத் தொடங்குகின்றனர். இதற்கு முழு முக்கிய காரணம் வீட்டில் உள்ள பெரியோர்கள்தான்.
- ஆண், பெண்ணுக்காக அதிக வேறுபாட்டை டிவி நாடகங்கள் கற்பிக்கின்றன. பெண் வீட்டு வேலைகளை இழுத்து போட்டு செய்ய வேண்டும். ஆண் வெளியில் போய்விட்டு வரலாம். உபசரித்தல், அடிவாங்குதல், திட்டு வாங்குதல், வன்முறையால் பாதிக்கப்படுதல் பெண்களே எனப் பலவற்றையும் டிவி கற்பிக்கிறது.
பெண் என்றால் இப்படி இருக்க வேண்டும். ஆண் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என டிவி ஷோக்கள், சினிமா, நாடகம், விளம்பரங்கள் என அனைத்துமே எடுத்துரைக்கின்றன.
திறன்கள் பாதிப்பு
- மொழி திறன் குறையும்.
- 2 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் அதிகமாக டிவி பார்த்தால் கிராஸ் மற்றும் ஃபைன் மோட்டர் ஸ்கில்கள் குறையும்.
- கை, கால்களால் செய்யும் அசைவுகள், வேலைகள் போன்றவற்றை குழந்தைகளால் அதிகமாக செய்ய முடியாது.
- 8 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை அதிக நேரம் டிவி பார்க்கவே விட கூடாது. ஒரு மணி நேரத்துக்கு மேல் பார்க்க கூடாது என சொல்லுங்கள்.
- 10-12 வயதில் மூளை வளர்ச்சி (முதிர்ச்சி) ஏற்படும். மைலினேஷன் எனும் வளர்ச்சி அது. அப்போதுதான் உடல், உணர்வுகள் தொடர்பான வளர்ச்சி, மனம் தொடர்பான சமூக உணர்வுகள் ஆகியவை வரும். இது முக்கியமாக காலகட்டம் அதனால் டிவி பார்க்கும் குழந்தைகளை அதிகமாக பார்க்க விடாமல் தடுப்பது மிகமிக அவசியம்.
இதையும் படிக்க : குழந்தைகளுக்கு தரக்கூடாத 10 உணவு வகைகள்
டிவியில் நல்லதை மட்டும் பார்க்கலாம்
- மொழி திறனை செய்தி வாசிப்பிலிருந்து கற்றுக் கொள்ளலாம்.
- பேச்சு தொடர்பான நிகழ்ச்சிகளிலிருந்து கற்றுக் கொள்ளலாம்.
- இயற்கை, வைல்ட் லைஃப், ஹிஸ்டரி சானல்களைப் பார்க்கலாம்.
- டிஸ்கவரி, வைல்ட் லைஃப் ஆவணப்படங்கள், கலைகள் தொடர்பான நிகழ்ச்சிகள்,
- மனிதனின் வரலாறு தொடர்பான நிகழ்ச்சிகளை காணலாம்.
குழந்தைகளின் நேரத்தைப் பயனுள்ளதாக்கலாம்
- குடும்பத்தில் அனைவரும் சேர்ந்து செலவழிக்கும் நேரத்துக்கான மாற்று டிவி அல்ல.
- குழந்தைகளை பூங்கா, மைதானம், மொட்டை மாடி என அழைத்து சென்று விளையாட விடுங்கள்.
- படிப்பது, ஓவியம் வரைவது, மற்ற கலைகளில் ஈடுப்படுத்துங்கள்.
வீட்டு தோட்டம் போட வைக்கலாம். - தாங்கள் உண்ண தாங்களே காய்கறி வளர்க்க குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லி தர வேண்டும்.
- லைப்ரரி புத்தக கலக்ஷெனில் ஈடுபடுத்தலாம்.
- ஏதாவது ஒரு நல்ல பழக்கத்தை தொடர்ந்து செய்ய வைக்கலாம். ஸ்டாம்ப் சேமிப்பது, பழைய காயின்களை சேமிப்பது…
- குழந்தைகள் குழுவாக சேர்ந்து, முடியாத ஏழை குழந்தைகளுக்கு தாங்கள் படித்ததை சொல்லி கொடுக்கலாம்.
- குழந்தைகளுடன் பெற்றோரும் சேர்ந்து, ஏழை குழந்தையை 5 பேர் கொண்ட குழு தத்தெடுத்து படிக்க வைக்க முயற்சிகள் செய்யலாம்.
- குழந்தைகள் குழுவாக இணைந்து செடி வளர்த்தல், மரம் நடுதல் போன்றவற்றை செய்யலாம்.
மாற்றங்களைப் பெற்றோர் நினைத்தால் கொண்டு வர முடியும்.
சமூகத்துக்கு நல்ல குழந்தையை தர வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. இன்று நடக்கும் குற்றங்களுக்கு அந்த நபர் மட்டும் காரணமாகுமா என்ன… நிச்சயம் இல்லை… பெற்றோரும் ஏதோ ஒரு விதத்தில் காரணம். எனவே நல்ல குழந்தைகளை இந்த உலகுக்குத் தர பெற்றோர் மெனக்கெடுவது மிக அவசியம்.