உலகில் இரண்டு புனிதமான இடங்கள் உள்ளன. ஒன்று தாயின் கருவறை. இன்னொன்று ஆசிரியரின் வகுப்பறை. தாயின் கருவறையில் ஒருவன் உயிரைப்பெறுகிறான். ஆசிரியரின் வகுப்பறையில் அவன் அறிவினைப் பெறுகிறான்.
1. கதிரவனைப் போல்…
காலைக் கதிரவனைப் போல் காலம் தவறாமல் பள்ளிக்குச் செல்லுங்கள். காலைப் பனித்துளியைப் போல் புத்துணர்வுடன் செல்லுங்கள். மழையைச் சுமந்து வரும் மேகத்தைப் போல் பாடத்தை நன்கு தயார் செய்துகொண்டு வகுப்புக்குள் நுழையுங்கள். அழகிய சோலையில் நுழைவது போல் வகுப்பினுள் நுழையும்போது மகிழ்ச்சியுடன் நுழையுங்கள்.
2. புன்னகை அவசியம்
முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக்கொள்ள வேண்டாம். உங்கள் கோபத்தினால் அழகிய மலர் வாடிவிடுவது போன்று மாணவர்களின் முகமும் வாடிவிடும். வகுப்பில் பாடத்தைத் தொடங்கும் முன் மாணவர்களைப் பார்த்து சிறு புன்னகை செய்யுங்கள். உங்கள் முகத்தில் தவழும் புன்னகையால், மாணவர்களிடம் புன்முறுவல் பூக்கச் செய்யுங்கள்.
3. நடிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
பாடத்தில் உள்ள கவிதையை கவிஞனைப் போல் வாசியுங்கள். கட்டபொம்மனைப் பற்றிப் பாடம் நடத்தப் போகின்றீர்கள் என்றால் கட்டபொம்மனைப் போல் மாணவர்களிடத்தில் பேசிக் காட்டுங்கள். நாடக வடிவில் உள்ள பாடங்களை நடத்தினால் நாடகக் கலைஞனாகி விடுங்கள். இதுபோன்ற செயல்கள், மாணவர்கள் பாடத்தை எளிதாகப் புரிந்துகொள்வதற்கு உதவும்.
4. பாடம் வேண்டாம்…
ஆசிரியர் என்பவர் வெறும் பாடத்தை மட்டும் நடத்திக்கொண்டே இருந்தால் போதாது. ஆகவே வாரத்தில் ஒரு பாடவேளையில் பாடத்தை நடத்தாமல் மாணவர்களிடத்தில் உள்ள தனித்திறமைகளை வெளிக்கொண்டு வர முயலலாம். உதாரணத்துக்குப் படம் வரைவது, கட்டுரை எழுதுவது, நாடகம் நடிப்பது, மேடைப் பேச்ச, விளையாடுதல், நடனம் ஆடுவது, இசைக்கருவிகளை இசைப்பது, பாடுவது போன்றவை மூலம் பல திறமையான மாணவர்களை இந்த உலகிற்கு நீங்கள் வழங்கலாம்.
5. கேள்வி கேளுங்கள்..!
பாடம் நடத்தும்போது மாணவர்களிடம் அதிகமாகக் கேள்வி கேளுங்கள். மாணவர்கள் கேள்வி கேட்கவும் வாய்ப்புத் தாருங்கள். மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றலை வளர்க்கும் நோக்கத்துடன் கேள்விகளைக் கேளுங்கள். வகுப்பில் கூட்டமாகச் சேர்ந்து ஒரே குரலில் பதில் சொல்லும் பழக்கத்தைத் தவிர்க்கப் பாருங்கள்.
6 . கடைசி ஐந்து நிமிடங்கள்..!
புதிதாக நடத்தும் பாடத்துக்கும் மற்றும் முந்தைய பாடத்துக்கும் உள்ள தொடர்பை விளக்கிக் கூற, பாடவேளையின் கடைசி ஐந்து நிமிடங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் பாடம் நடத்தினால், அன்று வகுப்புக்கு வந்த மாணவர்கள் உங்கள் பாடத்தைக் கேட்டு இன்புற வேண்டும். அன்று வகுப்புக்கு வருகை தராத மாணவர்கள் அடுத்த நாள் உங்கள் பேச்சைக் கேட்க ஓடி வர வேண்டும் என்பதை நிலைநாட்டுங்கள்.
7. நூலகத்தைப் பயன்படுத்துங்கள்
மாணவர்கள் நூலகத்திலிருந்து சில நூல்களை எடுத்துப் படித்து, பயன்பெறக் கூடிய வகையில் நல்ல நூல்களின் பெயர்கள், நூலாசிரியர்களின் பெயர்கள், நூல்களின் சிறப்பு ஆகியன பற்றிச் சொல்லுங்கள். உண்ணுதல், உறங்குதல் போலவே நல்ல நூல்களை வாசிப்பதும் ஒருவரின் எதிர்கால வாழ்வை மகிழ்ச்சியாகக் கழிக்க அவசியம் என்பதை மாணவர்களுக்குக் கற்பியுங்கள்.
8. பாடப்புத்தகத்தை தாண்டி..!
வாழ்க்கை மிகப் பெரியது. இந்தப் பெரிய உலகத்தை சிறிய புத்தகங்களுக்குள் அடக்கிவிடாமல் மாணவர்களுக்கு விசாலமான பார்வையைப் பார்க்கக் கற்றுக் கொடுங்கள். பாடநூல்கள் தகவல்களைக் கற்க உதவுகின்றன. இவை ஞானத்தை வளர்த்திட உதவுவதில்லை. எனவே பாடநூலுக்குள் மட்டும் மாணவர்களை கட்டிப் போட்டுவிடாதீர்கள். பாடநூலுக்கும் அப்பாலும் கடல் போல் அறிவு விரிந்து பரந்து கிடக்கிறது என்ற உண்மையை மாணவர்களுக்கு உணர்த்திடுங்கள்.
9. உங்கள் பிள்ளை அவர்கள்..!
மாணவர்களிடம் ஒரு தாயைப் போல, ஒரு தந்தையைப் போல் நடந்துகொள்ளுங்கள். மாணவர்களின் நலனில் அக்கறை காட்டுங்கள். மாணவர்களிடம் அன்னையின் அன்பையும், தந்தையின் கண்டிப்பையும், நண்பனின் நட்பையும் கொடுங்கள். மாணவர்களின் முழுப் பெயரைச் சொல்லி அழையுங்கள். உங்கள் வகுப்பில் பயிலும் ஒவ்வொரு மாணவரின் முகத்தையும் பெயரையும் நன்றாக நினைவில் வைத்திருங்கள்.
10. நம்பிக்கையைக் கொடுங்கள்..!
உன்னால் முடியும், நிச்சயம் வெற்றி பெறுவாய், நம்பிக்கையுடன் இரு, வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனையாளராக வருவாய், நல்ல நிலையை அடைவாய் போன்ற நேர்மறையான வார்த்தைகளுக்கு மாணவர் மத்தியில் மிகப்பெரிய சக்தி உண்டு. இந்த வார்த்தைகளை அடிக்கடி மாணவர்களிடத்தில் கூறிக்கொண்டே இருங்கள். மறந்து போய்க்கூட முடியாது, நடக்காது போன்ற எதிர்மறையான சொற்களை மாணவர்களிடத்தில் பயன்படுத்தாதீர்கள். இந்த வார்த்தைகள் மாணவர்களின் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும்.
நல்லாசிரியராய்.. அன்பாசிரியராய்த் திகழ வாழ்த்துகள்!