ஐரோப்பிய இரும்பு பெண்மணி ஜெர்மனியின் தேவதை, ‘அங்கெலா’
உலகின் மிகப்பெரிய ஆளுமை நாடுகளில் ஒன்றான ஜெர்மனிக்குப் பதினாறு ஆண்டு காலமாக அதிபராகவும், ஐரோப்பிய நாடுகளுள் தவிர்க்க முடியாத தலைமையுமாக விளங்கிய ‘அங்கெலா மெர்கெல்’ (Angela Merkel) அவர்கள், அதிபர் பதவியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறார்.
ஜெர்மனியின் சக்திவாய்ந்த பதவியிலிருந்த இந்தப் பதினாறு ஆண்டுகளில், இவரின் உறவினர்கள் எவரும் அரச பதவிகளில் அமர்த்தப்படவில்லை. தனக்குச் சொந்தமாக, வில்லாக்களையோ, கட்டடங்களையோ, வணிக வளாகங்களையோ, கார்களையோ, தனிவிமானத்தையோ, உல்லாசப் படகையோ இவர் வாங்கியிருக்கவில்லை.
எந்தவொரு சுயலாபமும் இல்லாத ஒரு தலைவராக இன்றுவரை இருந்து, வெளியேறுகிறார். பதினாறு ஆண்டுகளில் தனது தோற்றத்திலோ, ஆடைகளிலோ சிறிய மாற்றத்தையும் செய்து கொள்ளாதவர். பல தடவைகள் முன்னர் அணிந்த உடைகளையே மீண்டும் அணிந்தபடி விழாக்களில் காட்சி தந்திருக்கிறார்.

இதைக் கவனித்த ஊடகவியலாளர்கள், அதையிட்டு அவரிடமே கேள்வியும் எழுப்பினார்கள். “ஏற்கனவே அணிந்த உடைகளையே நீங்கள் மீண்டும் மீண்டும் அணிவதாக நாங்கள் அவதானிக்கிறோம்” என்று ஒரு ஊடகவியலாளர் கேட்டதற்கு, “நான் மக்களுக்குச் சேவை செய்யும் பணியிலிருக்கிறேனேயொழிய, மாடலாக இல்லையே!” என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.
இன்னுமொரு தடவை ஊடகச் சந்திப்பின்போது, “நீங்கள் வீட்டில் சமையலுக்கும், பணிகளுக்குமாக எத்தனை பேரை வேலைக்கு அமர்த்தியிருக்கிறீர்கள்?” என்று கேட்டபோது, “என்னுடைய வீட்டில் எவரும் பணியாளராக இல்லை. அதற்கு அவசியமும் இல்லை. நானும், என் கணவரும் வீட்டு வேலைகளைப் பகிர்ந்து செய்கிறோம்” என்றார்.

அப்போது குறும்புக்காரப் பத்திரிகையாளர் ஒருவர், “அப்படியெனில், வீட்டின் துணிகளைத் துவைப்பது நீங்களா, உங்கள் கணவரா?” என்று கேட்க, “நான் துணிகளை ஒன்று சேர்த்துத் துவைப்பதற்கான ஆயத்தங்களைச் செய்ய, கணவர் துவைக்கும் இயந்திரத்தை இயங்க விடுவார்” எனக் கூலாகப் பதில் கொடுத்தார்.
இயற்பியல் (Physicist), குவாண்டம் வேதியியல் (Quantum Chemist) ஆகிய துறைகளில் உயர் கல்வித் தகமைபெற்ற அங்கெலா மெர்கெல், ஒரு சாதாரண குடியிருப்புக் கட்டடத்திலேயே வாழ்ந்து வருகிறார். அவர் பதவி வகிக்கும் முன்னரும், பதவி வகிக்கும்போதும், பின்னரும் அதே மாடிக் கட்டடம்தான். ஒரு சிறிய நீச்சல் குளமோ, தோட்டமோ இல்லாத குடியிருப்பு அது.
இவரைப் போன்ற ஒரு அதிபர் (Chancellor) இனி மீண்டும் ஜெர்மனிக்குக் கிடைப்பது கடினமே!